Why was Patidar included in the team
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக மூத்த வீரர்கள் ஏன் பரிசீலிக்கப்படவில்லை என்பது குறித்து ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை (ஜனவரி 25) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து மூத்த வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது.
அதனால் அனுபவம் வாய்ந்த கோலிக்கு பதிலாக இந்திய அணி யாரை தேர்வு செய்யும் என்பதில் குழப்பம் நிலவியது. அவருக்கு பதிலாக மூத்த வீரர்களான புஜாரா அல்லது ரஹானே தேர்ந்தெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலிக்கு பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 151 ரன்களை குவித்த படிதார், சமீபகாலமாக நல்ல ஃபார்மில் உள்ளார். அவர் லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 111 ரன்களை எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
எனினும் மூத்த வீரர்கள் இருக்கும்போதும், படிதாருக்கு வாய்ப்பளித்தது ஏன் என்று செய்தியாளர்கள் இன்று கேப்டன் ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “நாங்கள் மூத்த வீரர் ஒருவரை மீண்டும் தேர்வு செய்யலாம் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் இந்த இளைய வீரர்கள் எப்போது தங்கள் வாய்ப்பைப் பெறப் போகிறார்கள்?
அனுபவம் வாய்ந்த ஒரு வீரரை விட்டு வெளியேற்றுவதோ அல்லது அவர்களது அனுபவத்தை கருத்தில் கொள்ளாமல் புறக்கணிப்பது என்பதோ மிகவும் கடினம்.
ஆனால் சில நேரங்களில் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வந்து அவர்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்குவது முக்கியம்.
இளம் வீரர்களை நேரடியாக வெளிநாட்டு மண்ணில் நடக்கும் போட்டிகளுக்கு அழைத்துச் செல்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில் கிடைக்கும் வாய்ப்பை அவர்களுக்காக பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்று ரோஹித் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஃபகத்தின் கேங்ஸ்டர் அவதாரம் : ஆவேஷம் டீசர் வெளியானது!
பாலியல் வழக்கு : ராஜேஷ் தாஸூக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்!
மம்தாவை தொடர்ந்து கெஜ்ரிவால் அறிவிப்பு: இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு!
Why was Patidar included in the team
