2026ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 20) தொடங்கியது. இதில் பங்கேற்க சட்டமன்ற வளாகத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தொடர்ந்து ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்படாததை அடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்த நிலையில், அவரை கண்டித்து சட்டமன்றத்தில் முதல்வர் பேசி வருகிறார்.
இந்தசூழலில் வெளிநடப்பு செய்தது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கமளித்துள்ளார்.
13 காரணங்களை அடுக்கி அவர் வெளியிட்டிருக்கும் விளக்கத்தில்,
ஆளுநரின் மைக் பலமுறை அணைக்கப்பட்டு, அவர் பேச அனுமதிக்கப்படவில்லை.
ஆளுநர் உரையில் ஏராளமான ஆதாரமற்ற கூற்றுகளும், தவறாக வழிநடத்தும் அறிக்கைகளும் உள்ளன. மக்களைத் துயரத்திற்கு உள்ளாக்கும் பல முக்கியமான பிரச்சினைகள் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளன
தமிழ்நாடு 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்று கூறுவது உண்மைக்கு அப்பாற்பட்டது. சாத்தியமான முதலீட்டாளர்களுடன் போடப்பட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவில் மட்டுமே உள்ளன. முதலீட்டுத் தரவுகள், தமிழ்நாடு முதலீட்டாளர்களுக்கு ஈர்க்கும் தன்மையற்ற மாநிலமாக மாறி வருவதைக் காட்டுகின்றன. 4 ஆண்டுகளுக்கு முன்பு அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதில் நான்காவது இடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது ஆறாவது இடத்தை தக்கவைத்துக் கொள்ளவே போராடி வருகிறது.
பெண்கள் பாதுகாப்பு குறித்த விவகாரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55% க்கும் அதிகமாகவும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் 33% க்கும் அதிகமாகவும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ள போதிலும், இது குறித்து அரசு கவனம் செலுத்தவில்லை.
போதைப்பொருள் பயன்பாடு, குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பழக்கத்தினால் ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது நமது எதிர்காலத்தை மிக மோசமாகப் பாதிக்கிறது. ஆனால், இந்த விவகாரம் மிகவும் சாதாரணமாகக் கடந்து செல்லப்படுகிறது.
தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றது. இந்த விவகாரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
நம் மாநிலத்தில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 65 தற்கொலைகள் நிகழ்கின்றன. இந்தியாவில் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு கவலைக்கிடமாக இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் ‘தற்கொலைகளின் தலைநகரம்’ என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், இது அரசாங்கத்தைப் பாதிப்பதாகத் தெரியவில்லை.
கல்வித் தரத்தில் தொடர்ச்சியான சரிவு மற்றும் கல்வி நிறுவனங்களில் பரவலான தவறான நிர்வாகம் நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மோசமாகப் பாதிக்கிறது. 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். இளைஞர்கள் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். இது அரசாங்கத்திற்கு எந்தக் கவலையையும் அளிப்பதாகத் தெரியவில்லை.
பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால், ஆயிரக்கணக்கான கிராம பஞ்சாயத்துகள் செயலிழந்து போயுள்ளன. அவை நேரடியாக அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. கோடிக்கணக்கான மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் எழுத்துக்கும் ஆன்மாவிற்கும் எதிரானது. கிராம பஞ்சாயத்துகளை மீட்டெடுப்பதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருப்பினும், உரையில் இது பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.
தமிழகத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல் நேரடியாக மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தில் உள்ளன. பழமையான திருக்கோவில்களைப் புனரமைத்தல் மற்றும் பாதுகாத்தல் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய மிக முக்கியமான வழிகாட்டுதல்கள், 5 ஆண்டுகள் கடந்தும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. பக்தர்களின் உணர்வுகள் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
தொழில் நடத்துவதில் ஏற்படும் வெளிப்படையான மற்றும் கண்ணுக்குத் தெரியாத செலவுகள் காரணமாக MSME துறைகள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. இந்தியாவில் 5.5 கோடிக்கும் அதிகமான MSME-க்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வளர்ச்சிக்கான அபார வாய்ப்புகள் இருந்தும் தமிழ்நாட்டில் சுமார் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன.தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்களது நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இதுதொடர்பாகவும் உரையில் எதுவும் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி நிலவுகிறது. அவர்கள் விரக்தியுடன் உள்ளனர். அவர்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான வழிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டு, அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிநடப்பு செய்ததற்கான காரணங்களை அடுக்கியுள்ளார் ஆளுநர். ஆர்.என்.ரவி.
இதுவரை 4 முறை ஆளுநர் உரையை புறக்கணித்து ஆர்.என்.ரவி சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
