பாலிவுட் நடிகை கஜோல் செய்தியாளர்கள் சந்திப்பில் இந்தியில் பேச மறுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 1992 ஆண்டு Bekhudi என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் கஜோல். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு தமிழில் வெளியான மின்சார கனவு படத்தில் கதாநாயகியாக நடித்தார். இதைத்தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்தார்.
திரையுலகில் 33 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக விளங்கி வரும் கஜோல் தனது 51 வது பிறந்த நாளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொண்டாடினார். இந்நிலையில் மகாராஷ்டிர அரசு வழங்கிய மாநில திரைப்பட விருது 2025 விழாவில் அவருடைய தாய் தனுஷாவுடன் கலந்து கொண்டார்.
கலைத்துறையில் கஜோலின் பங்கு மற்றும் அவரது இந்திய சினிமா பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் ராஜ் கபூர் விருது வழங்கப்பட்டது. அப்போது அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கஜோல் கலந்து கொண்டார்.
கஜோல் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் மராத்தியில் பதில் அளித்து வந்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் இந்தியில் பதில் அளிக்குமாறு கேட்டார். இதனால் சட்டெனக் கோபமடைந்த கஜோல்,”நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்குப் பொருள் புரிய வேண்டுமோ.. அவர்களுக்குப் புரியும்” என பதில் அளித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிராவில் மராத்தி பேசுபவர்களுக்கும் இந்தி பேசும் மக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெறும் சம்பவங்கள் செய்தியாகி வரும் நிலையில் கஜோலின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பல தரப்பினர் கஜோலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் ஒரு தரப்பினர் அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக நடிகை டாப்ஸி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் இந்தி பேசும் விவகாரத்தில் விமர்சிக்கப்பட்டது சர்ச்சையானது. இந்நிலையில் தற்போது கஜோலின் பேச்சு பாலிவுட் திரை உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
