பொறுப்பில் இருக்கும்போதே தேர்தலுக்கு அவசரம் ஏன்?: எடப்பாடிக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

Published On:

| By Kalai

நீங்கள் தானே பொறுப்பில் இருக்கிறீர்கள், தேர்தல் நடத்த அவசரம் ஏன் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

ADVERTISEMENT

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்தார்.

உயர் நீதிமன்றத்தின்  நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இந்த மனுவை விசாரித்து.

ADVERTISEMENT

அவர்கள், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளித்து, தனி நீதிபதி ஜெயச்சந்திரனின் உத்தரவை ரத்து செய்தனர்.

இரண்டு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ண முராரி அமர்வில் இன்று(செப்டம்பர் 30) விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை.

அதிமுகவின் அனைத்து பதவிகளுக்கான நியமனங்களையும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் மேற்கொள்ள முடியும். அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டதே விதிமுறைகளுக்கு எதிரானது என்று வாதிட்டார்.

மேலும் மாநிலங்களவை உறுப்பினரைக் கூட இணைந்தே தான் தேர்ந்தெடுத்தோம், கடைசி வரை கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்தேன்.

ஆனால் வேண்டாம் என்று  என்னை வெளியே தள்ளிவிட்டு முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளனர் என்று ஓபிஎஸ் சார்பில் வாதத்தை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முன்வைத்தார்.

அப்போது நீதிபதிகள் தசரா விடுமுறைக்குப் பிறகு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமே என்று தெரிவித்தனர்.

ஆனால் அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், எனவே அதற்கு தடைவிதிக்கவேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம், இப்போது நீங்கள் தானே பொறுப்பில் இருக்கிறீர்கள், ஆகவே தேர்தல் நடத்துவதற்கான அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

மேலும் ஓபிஸ் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

அதே சமயம் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு அளிக்கும்வரை பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடைபெறாது என்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

எனவே தசரா விடுமுறைக்குப் பிறகே அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை நடத்தப்படும். அதன் பிறகே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

கலை.ரா

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை!

பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதம்: எடப்பாடிக்கு நோட்டீஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share