ஹெல்த் டிப்ஸ்: ஓய்வில்லாமல் உழைப்பவரா நீங்கள்? வெயிட் ப்ளீஸ்!

Published On:

| By Kavi

Why Rest is Important for a healthy life

ஒருவர் அதிக நேரம் வேலை பார்க்கிறவராக இருந்தால் ‘நான் கிரேட்’ என்று அவரே சொல்லிக் கொள்கிறார். காலையில் 8 மணிக்கு கிளம்பினால் வீடு திரும்ப இரவு 12 மணி ஆகும் என்று ஒருவர் சொன்னால், ‘அவர் எவ்வளவு பெரிய ஆள், பெரிய வேலையில் இருப்பார் போல‘ என்ற எண்ணமே பலருக்கும் வரும். ‘நான் ஆபீஸுக்கு லீவே எடுத்ததில்லை’ என்று ஒருவர் பெருமையாகச் சொல்கிறார். அதை மற்றவர்கள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

ஆனால், வருடம் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் எந்திரங்களுக்கு ஆயுதபூஜை என்றொரு நாள் ஓய்வு கொடுக்கிறோம். அதேபோல் தினமும் இயங்கிக் கொண்டிருக்கும் நம் உடல், மனதுக்கும் ஓய்வு தேவை.

ஓய்வு என்று குறிப்பிடுவதில் சோம்பேறித்தனம் அடக்கம் இல்லை. இடைவெளியில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நேரத்திலும் ஒரு சின்ன பிரேக் மனதுக்கும் உடலுக்கும் வேண்டும் என்பதுதான் நாம் கூறும் ஓய்வு என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம்.

ஆயுட்காலம் தொடர்பாக உலகமெங்கும் நிறைய ஆய்வுகள் நடக்கின்றன. 90 வயது, 100 வயது வரையெல்லாம் வாழ்கிறவர்கள் யார் என்று கவனிக்கும்போது உணவுமுறை, உடற்பயிற்சி போன்ற நடவடிக்கைகளுடன் சமூகத்துடன் யார் நல்ல இணக்கமாக, கூட்டாகச் செயல்படுகிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று தரவுகள் கிடைத்துள்ளன.

சமூகத்துடன் இணைந்த வாழ்க்கை என்றால் சமூக வலைதளங்களின் மூலம் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கும் வாழ்க்கை என்று அர்த்தமில்லை. அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என்று நமக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடுவதும் ஆயுளை நீட்டிக்கும் முக்கிய காரணியாக உள்ளது.

நம் நாட்டில் ‘வொர்க்கஹாலிக்’ (Workaholic) என்பதையும் பெருமையாகச் சொல்கிறார்கள். ஓய்வெடுக்காமல் ஓடிக்கொண்டே இருக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி குறையும். புதிய சிந்தனைகள் வராது. அதிகமாக வேலை செய்யும்போது Burn out ஆகும் வாய்ப்பு உண்டு.

சில வருடங்களிலேயே அந்த வேலை போரடிக்கலாம். இதனால் மன அழுத்தம் உண்டாகும். செய்யும் வேலையில் ஆர்வம் குறையும். வேறு ஏதாவது வேலை தேடலாமா என்று மனம் அலைபாயும். வேலை பின்பு கடமைக்கு என்று ஆகிவிடும் வாய்ப்பு உண்டு. இதுபோன்ற பர்ன் அவுட் மனநிலை தற்கொலை விகிதத்தையும் அதிகப்படுத்துகிறது.

எனவே, சரியான உணவுமுறை, உடற்பயிற்சி, போதுமான ஓய்வு ஆகியவற்றுடன் சமூகத்துடன் இயைந்த வாழ்க்கை – இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியமான, சந்தோஷமான, வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவை.

மேற்கத்திய நாடுகளில் உழைப்பைப் போலவே ஓய்வுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளாக இருக்கும் ஸ்வீடன், நார்வே போன்றவற்றில் வேலை நேரம் குறைவு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, ஆரோக்கியமான முன்னேற்றமான வாழ்க்கைக்கு சரியான முறையில் ஓய்வும் அவசியம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024: பிளே-ஆஃப் சுற்றில் யார் யாருடன் மோதல்? முழு விவரம் இதோ

ஆம் ஆத்மி கட்சி மீது அடுத்தடுத்த தாக்குதல்கள்! அசராது நிற்கும் கேஜ்ரிவால்!

டாப் 10 செய்திகள் : 5ஆம் கட்ட தேர்தல் முதல் ஊட்டி ரயில் சேவை ரத்து வரை!

கிச்சன் கீர்த்தனா: கேரட் டீடாக்ஸ் ஜூஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share