அண்ணாமலையை ஏன் கைது செய்யலை? சென்னை மாநகர கமிஷனருக்கு ஸ்டாலின் கேள்வி! 

Published On:

| By Aara

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதியை கைது செய்யக் கோரியும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக் கோரியும் செப்டம்பர் 11 ஆம் தேதி தமிழகம் எங்கும் பரவலாக பாஜக ஆர்பாட்டம் நடத்தியது.

இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூத்த தலைவர் ஹெச்.ராஜா திருச்சியில் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டார். பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் கோவையில் கைது செய்யப்பட்டார். மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கடலூரில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் பாஜகவின் மாநில நிர்வாகிகள், முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் சென்னையில் போராட்டம் நடத்திய மாநிலத் தலைவர் அண்ணாமலையும் அவரோடு திரண்டவர்களும் மட்டும் கைது செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

நேற்று பகல் பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மரியாதை செலுத்திய அண்ணாமலை அங்கிருந்து விரைந்து மதுரை சென்று விமானம் பிடித்து மாலை 4 மணிக்கு மேல்தான் சென்னையில் ஆர்பாட்டம் நடக்கும் இடத்துக்கு வந்தார். இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற அண்ணாமலையோடு அப்போது சுமார் 400 பேர் இருந்தனர். அப்போது அவர்களை மறித்த போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கேயே அமர்ந்து சிறிது நேரம் மறியல் செய்த அண்ணாமலை அதன் பின் வள்ளுவர் கோட்டத்தில் ஆர்பாட்டத்தில் பேசினார். “செந்தில்பாலாஜிக்கு ஏற்பட்ட நிலை உதயநிதிக்கும், ஆ.ராசாவுக்கும் ஏற்படும்’ என்று பேசினார் அண்ணாமலை. அதன் பிறகு அண்ணாமலை உள்ளிட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.

ADVERTISEMENT

தமிழகத்தின் பிற பகுதிகளில் காலையே கைது செய்யப்பட்ட பாஜகவினரை, வழக்கம்போல மாலை 6 மணிக்கு விடுதலை செய்யாமல் இரவு வரை மண்டபங்களிலேயே தங்க வைத்தனர் போலீஸார். பாஜக வழக்கறிஞர்கள் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசிய பிறகுதான் இரவு பாஜகவினரை விடுவித்தனர். முன்னெப்போதும் இல்லாதவகையில்….கைது செய்யப்பட்ட பாஜகவினரை வெளியே இருந்து யாரும் சென்று சந்திக்க முடியாமல் தடுத்துவிட்டனர்.

ADVERTISEMENT

இப்படி தமிழகம் முழுதும் கெடுபிடிகள் காட்டப்பட்ட நிலையில், சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறியல், ஆர்பாட்டம் எல்லாம் நடத்தியும் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று திமுக நிர்வாகிகள் தங்களிடையே கேள்வி எழுப்பினர். இது நேற்று மாலையே அமைச்சர் உதயநிதிக்கு தெரியப்படுத்தப்பட்டது. அமைச்சர் உதயநிதி இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை அழைத்திருக்கிறார் .
‘தமிழ்நாடு முழுதும் போராட்டம் நடத்திய பாஜகவினரை கைது செஞ்சப்ப, சென்னையில் மட்டும் ஏன் கைது செய்யலை?’ என்று கமிஷனரிடம் நேருக்கு நேர் கேட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

அப்போது கமிஷனர், ‘அண்ணாமலைக்கு சிஆர்பிஎஃப் பாதுகாப்பு இருப்பதால் அது தொடர்பாக சில இஷ்யூக்கள் இருந்தன’ என்று சொல்லியிருக்கிறார்.

‘அதிமுக ஆட்சியில எனக்கும்தான் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு இருந்துச்சு. எதிர்க்கட்சித் தலைவரான என்னை அதிமுக ஆட்சியில கைது பண்ணியிருக்காங்க, எத்தனை தடவை குண்டுக்கட்டா தூக்கிட்டு போயிருக்காங்க தெரியுமா?’ என்று கேட்ட முதல்வர் அதன் பின் சரமாரியாக கேள்விகள் கேட்டிருக்கிறார்.

இந்த நிலையில்தான் இன்று காலை ஆர்பாட்ட ஸ்பாட்டில் இருந்த சட்டம் ஒழுங்கு ஜே.சி. திஷா மிட்டலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறார் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்.

“காவல்துறையில் அண்ணாமலைக்கு நெருக்கமான அதிகாரிகள் இருக்கிறார்கள்” என்ற ரிப்போர்ட் அவ்வப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறது. இப்போது மீண்டும் அது தொடர்பான ஆய்வை மேற்கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.

வேந்தன்

எதிர்காலத்தில் படங்களில் நடிக்க முடியாது: விஷாலுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

பட்டியலின சமையலர் : கனிமொழி ஆய்வு – முடிவுக்கு வந்த பிரச்சினை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share