ஆளூர் ஷாநவாஸ்-க்கு சீட் இல்லை ஏன்? திருமா விளக்கம்

Published On:

| By Mathi

Aloor VCK THiruma

சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராதது ஏன் என்பது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

தேர்தலில் தமக்கு போட்டியிட சீட் தரப்படாதது தொடர்பாக ஆளூர் ஷாநவாஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

ஷாநவாஸ் அறிக்கை

அதில், “2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், விசிக சார்பில் போட்டியிட எமக்கு மீண்டும் வாய்ப்பு அமையவில்லை என்பதை வைத்து வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிகிறேன்.
இதில் என் மேல் அன்பு கொண்டு எனக்கு ஆதரவாக கருத்துப் பரிமாறிய அனைத்துத் தோழர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன். அதே நேரத்தில், ஒரு கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அந்தக் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவாகும். அம்முடிவு எதுவாயினும் அதை ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும்.
அந்த வகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தலைவர் எழுச்சித் தமிழர் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் விசிகவின் குரல் வலுவாக ஒலிப்பதற்கும், நமது கூட்டணி சார்பில் களம் காணும் அனைவரும் வெல்வதற்கும், திமுக தலைமையிலான நல்லாட்சி மீண்டும் அமைவதற்கும் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.
எனது பொது வாழ்க்கையில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பணியாற்றியதை விட, இன்னும் வீரியத்துடன் தொடர்ந்து அரசியல் களத்தில் பணியாற்றுவேன் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியிருந்தார்.

திருமா வீடியோ விளக்கம்

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் திருமாவளவன் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

நாகப்பட்டினமாக இருந்திருந்தால் ஷாநவாஸாகத் தான் இருந்திருப்பார். நான் மாற்றுச் சிந்தனைக்கு போயிருக்க வாய்ப்பு இல்லை. நாகப்பட்டினம் தொகுதி, ஜவாஹிருல்லாவிற்கு வழங்கிவிட்டார்கள். ஏன் என்று விசாரித்தபோது ஷாநவாஸ் அவர்களே அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்ற தகவலைச் சொன்னார்.

பிறகு ராயபுரத்தைத்தான் ஷாநவாஸ் விரும்புகிறார் என்ற தகவல் கிடைத்தது. நான் உடனே ராயபுரம் டிக் (Tick) செய்துவிட்டேன். அது ஷாநவாஸுக்காக. திருப்போரூர் பாலாஜி மீண்டும் போட்டியிடுகிறார், அதை அப்படியே நான் எழுதி வைத்திருக்கிறேன், டிக் அடித்துவிட்டேன்.

ADVERTISEMENT

இடையில் திடீரென ஷாநவாஸ் ராயபுரம் வேண்டாம் என்கிறார். ராயபுரம் வேண்டாம் என்ற பிறகு பல்லாவரம். பல்லாவரம் கேட்டால் அது தேமுதிக-விற்குப் போய்விட்டது. ஒருவேளை பல்லாவரம் கிடைத்திருந்தால் அது ஷாநவாஸிற்குப் போயிருக்கும்.

ஆனால், முதலமைச்சரே தலையிட்டு நமக்கு ஒரு பொதுத் தொகுதி, இன்னொரு தனித் தொகுதி முடிவு செய்வதிலே ஏற்பட்ட காலதாமதம்… விரைந்து முடிக்க வேண்டும், நாளைக்கு திமுக வேட்பாளர் பட்டியலை அறிவிக்க வேண்டும், எனவே இன்றைக்கு எல்லோரையும் முடித்து அனுப்புங்கள், யார் என்ன கேட்கிறார்களோ கொடுத்து அனுப்புங்கள் என்று முதல்வர் சொன்னதின் அடிப்படையில் அவசர கதியில்தான் நமக்குத் தரவே முடியாது என்று சொன்ன கள்ளக்குறிச்சியைத் தந்தார்கள். அரூர் வேண்டும் என்று வலியுறுத்தி வலியுறுத்திக் கேட்ட நிலையில் நமக்கு அரக்கோணத்தைத் தந்தார்கள். பல்லாவரம் வேண்டும் என்று கேட்ட நிலையில் செய்யூரைத் தந்தார்கள். இப்படி கடைசி நிமிடத்தில் முடிவானது.

கடைசியாக ஒரு இஸ்லாமியரைப் போட்டே ஆக வேண்டும், எங்களுக்கு ஒரு தொகுதி திருப்போரூர் அங்கே இஸ்லாமியரைப் போட முடியாது. நாங்கள் 2 தொகுதியில் ஒரு தொகுதி இஸ்லாமியருக்கு வழங்குவதை ஒரு கடமையாக வைத்திருக்கிறோம் என்று சொல்லி ஒரு இஸ்லாமியரை நாங்கள் போடுவது என்றால் ஷாநவாஸைத் தான் போட வேண்டும் என்ற முடிவில் இருந்தபோது, அப்துல் ரகுமான் குறுக்கிட்டார். அவர் தன்னுடைய வாய்ப்பை மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தினார்.

ஷாநவாஸிடம் சொல்லிக் கொள்ளலாம், இந்த முறை நாம் அப்துல் ரகுமானுக்குத் தரலாம் என்று நான் என்னுடைய சுயமான சிந்தனையிலிருந்து எடுத்த முடிவு. அது மேலோட்டமாகப் பார்த்தால் பிழையாக இருக்கும் என்று நீங்கள் கருதலாம், அது பிழையாகக் கூட இருக்கட்டும். ஆனால் ஷாநவாஸ் கூடாது, அவரைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்டது அல்ல. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பு தருவோம் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்டது. அவ்வளவுதான், இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share