தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமசந்திரன் (Panruti Ramachandran) 88 வயதில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி உள்ளார். எம்ஜிஆர் அண்ணா திமுக என்ற பெயரில் தாம் கட்சி தொடங்கியது மற்றும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரம் குறித்து சென்னையில் பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று பிப்ரவரி 19-ந் தேதி நடத்திய செய்தியாளர் சந்திப்பு முழு விவரம்:
செய்தியாளர்: ஓ.பி.எஸ் கூட இருந்து நீங்க எல்லாரையும் ஒருங்கிணைச்சு தான் அவர் ஒரு சட்டப் போராட்டத்தை நடத்துறாருன்னு சொன்னாரு, உரிமை மீட்புக் குழுன்னு நடத்துனாரு. அது எல்லாத்துலயும் நீங்க ஒருங்கிணைப்பாளரா இருந்து செயல்பட்டீங்க. திடீர்னு இப்ப அவர்கிட்ட இருந்து எல்லாமே விலகிப் போயிட்டு நீங்களே இப்ப ஒரு புது இயக்கத்தை தொடங்குறீங்களே?
பண்ருட்டி ராமச்சந்திரன்: அது அந்த அத்தியாயம் முடிந்தது. த சாப்டர் இஸ் ஓவர் (The chapter is over).
செய்தியாளர்: எந்த அத்தியாயம்?
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஓ.பி.எஸ் சாப்டர்.
செய்தியாளர்: தொடர்ந்து அவருடைய இக்கட்டான சூழ்நிலைகள்ல கூட இருந்தீங்க. இப்ப தேர்தல்ங்கிறது முக்கியமான நேரம். அப்ப அவர் கூட இல்லையா?
பண்ருட்டி ராமச்சந்திரன்: அதாவது அரசியல் என்பது ஒருவருக்காக அல்ல. அரசியல் என்பது மக்களுக்காக. ஒருவர் என்ன ஆகிறார் என்பது முக்கியமல்ல. நாடு, நாட்டு மக்கள் என்ன ஆகிறார்கள் என்பது முக்கியம். என்னை பொறுத்தவரையிலே நாடு இன்றைக்கு ஒரு முக்கியமான கட்டத்திலே இருக்கிறது. இந்த நேரத்திலே ஒரு நல்ல அரசியலை நாம் எடுத்துச் செல்ல வேண்டும். அதுதான் நம்முடைய கடமை. நாம் தனிப்பட்ட முறையிலே ஒருவரோடு பழகுகிறோம் என்பதற்காக நம்முடைய வாழ்நாளை வீணாக்க முடியாது.
செய்தியாளர்: இந்த இயக்கத்தினுடைய நோக்கமாக உயர்ந்த நோக்கங்கள் சிலவற்றை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள். ஆனால் இப்போது நீங்கள் கட்சி தொடங்குகிற நேரம் என்பது தமிழக சட்டமன்றத்திற்கு ஒரு பொதுத்தேர்தல் நடைபெறுகிற நேரம். இதற்கு ஒரு நிலைப்பாடு எடுக்காமல் கடந்து போக முடியுமா?
பண்ருட்டி ராமச்சந்திரன்: கட்டாயம். நமக்கென ஒரு பாதை வகுத்துச் செல்கிறோம். இந்த தேர்தல் நடக்கிறது, நான் ஏற்கனவே சொன்னதைப் போல அது ஒரு சடங்கு. இதிலே கலந்துகொள்ள வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அறிஞர் அண்ணா அவர்கள் 1949-ல் இயக்கத்தை ஆரம்பித்தார். எட்டு ஆண்டுகள் கழித்து1957-ல் தான் தேர்தலிலே நின்றார். தேர்தலில் நிற்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. ஆனால் 1952 தேர்தலிலே அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்ட கட்சியிலே இருந்த வேட்பாளர்களை ஆதரித்தார். அதேபோல நம்முடைய கருத்துக்கு ஒத்து வருகிறவர்களை நாம் இந்த தேர்தலிலே ஆதரிப்போம்.
செய்தியாளர்: இப்போதிருக்கிற ஆட்சி தொடர வேண்டுமா அல்லது மாற்றப்பட வேண்டுமா என்பதில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பண்ருட்டி ராமச்சந்திரன்: அவர்கள் என்ன நிலை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் நாம் முடிவெடுக்க வேண்டும்.
செய்தியாளர்: ஓ.பி.எஸ் அவர்களுடைய நிலை என்ன? அவருக்கு நீங்க இப்ப என்ன சொல்ல விரும்புறீங்க? ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்கீங்க.
பண்ருட்டி ராமச்சந்திரன்: இல்ல இல்ல. அதாவது நான் சொல்றது, நம்ம நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. ஓ.பி.எஸ்-க்காக நாம என்ன உயிரையா துறக்க முடியும்? நம்ம வாழ்நாளை வீணாக்க முடியுமா? வாழ்நாள் போனால் வருமா?
செய்தியாளர்: அப்ப ஓ.பி.எஸ்-ஓட இருந்தது வீணடிக்கப்பட்ட நாட்கள்னு எடுத்துக்கலாமா?
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஏன் நீங்களா கற்பனை பண்றீங்க? இருந்தோம், அவர் என்ன முடிவு எடுக்கப் போறாரோ தெரியல. எங்கிருந்தாலும் வாழ்கன்னு சொல்லிட்டு வந்துட்டோம்.
செய்தியாளர்: பேச்சுவார்த்தை போயிட்டு இருக்கா? அவர்கிட்ட பேசுறீங்களா?
பண்ருட்டி ராமச்சந்திரன்: நாங்கள் இப்ப யாருடனும் பேசுவதில்லை.
செய்தியாளர்: உங்களுடைய ஆலோசனைகளை ஓ.பி.எஸ் வந்து ஏத்துக்கலையா? நீங்க கூட இருக்கும்போது…
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஏங்க இதெல்லாம் போஸ்ட்மார்ட்டம் வேண்டாம். இப்ப தேர்தல் வருது, அவங்க அவங்க ஒரு நிலைப்பாடு எடுக்குறாங்க. எடுக்கட்டும். நாம யாரையும் குறை சொல்லப் போறதில்ல. அவங்க சூழ்நிலையைப் பொறுத்து அவங்க நிலைப்பாடு எடுக்குறாங்க.
செய்தியாளர்: நீங்க கூட்டணி யார் கூட அமைக்க போறீங்க?
பண்ருட்டி ராமச்சந்திரன்: கூட்டணிங்கிற பேச்சே கிடையாது.
செய்தியாளர்: விஜய்க்கு, தமிழக வெற்றி கழகத்துக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கப் போறதா ஒரு தகவல் இருக்கு. விஜய் கூட பேச்சுவார்த்தை நடத்துவீங்களா?
பண்ருட்டி ராமச்சந்திரன்: எங்கள் பாதை தனிப் பாதை. நாங்கள் அதைத் தொடர்ந்து இன்னும் 10 வருஷமோ 50 வருஷமோ செய்வோம். தேர்தல் வரும்பொழுது கூட்டணி பற்றி பேசுவோம்
அரசியல் கட்சிகள் இப்போது என்டர்பிரைசஸ் (Enterprises) ஆகிவிட்டன. அது அரசியல் இயக்கம் அல்ல, அரசியல் வணிகமாகிவிட்டது. அதனாலே, அரசியல் கட்சிகள் மூலம் இப்போது பெருசாக ஒன்றும் சாதிக்க முடியாது. கெண்டையைப் போட்டு வரால் எடுக்கிறார்கள் என்கிறார்களே, அது மாதிரி தேர்தலில் செலவு பண்ணுகிறீர்கள், தேர்தலில் ஜெயித்த பிறகு அந்த மாதிரிப் பணம் சம்பாதிக்கிறீர்கள். அவ்வளவுதானே நடக்கிறது? வேறென்ன சாதித்தீர்கள்?
அரசியல் கட்சி கூடாது என்று சொல்லவில்லை, தேர்தல் கூடாது என்று சொல்லவில்லை. மக்களுக்கு ஏதோ செய்ய முடிவதைச் செய்யட்டும். ஆனால் அடிப்படையான சில நிகழ்வுகள் இல்லையென்றால், பின்னால் ஆபத்து.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது அங்கே உள்ளவர்களுடைய ஆசை. ஆனால் அது மட்டுமே வெற்றியைத் தரும் என்று நான் நம்பவில்லை.
செய்தியாளர்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வற்புறுத்தலில்தான் இந்த புதிய இயக்கம் தொடங்கப்படுவதாகத் தகவல் வருகிறதே?
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஏது ஏது? பாவம், அவரை ஏன் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்? நான் அவரைப் பார்த்துப் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது.
செய்தியாளர்: உறுதியாக இருக்கிறீர்களா சார்? யாருக்கும் ஆதரவு இல்லை என்பதில்?
பண்ருட்டி ராமச்சந்திரன்: எனக்கு என்னங்க இனிமே? யார் என்ன செய்யப் போகிறார்கள்? நான் சொல்லுகின்ற இந்த லட்சியத்திற்கு, இந்தக் கருத்துகளுக்கு ஒத்த கருத்துடையவர்களை ஆதரிப்பேன்.
செய்தியாளர்: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதோடு இது ஒத்துப்போகிறதே சார்?
பண்ருட்டி ராமச்சந்திரன்: சரி, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது ஒரு பார்மல் ஈக்வாலிட்டி (Formal Equality).
செய்தியாளர்: இப்போதுள்ள கட்சிகளில் உங்கள் ஆதரவைப் பெறக்கூடிய தகுதி வாய்ந்த கட்சி எது?
பண்ருட்டி ராமச்சந்திரன்: அது போகப் போகத்தான் சொல்ல முடியும். இப்போதைக்கு இல்லை. ஏனென்றால் இப்போது ஒரு ஃப்ளூயிட் ஸ்டேட் (Fluid State). நாம் யாரையும் இப்போது முழுசாக நம்பி அவர்கள் பக்கம் போய் ஈடுபடக்கூடிய சூழ்நிலை இல்லை. நான் இப்போது ‘சூடு கண்ட பூனை’யாக இருக்கிறேன்.
செய்தியாளர்: அதிமுக எம்.ஜி.ஆரை மறந்துவிட்டது என்று நடிகர் விஜய் விமர்சிக்கிறார். அவர் எம்.ஜி.ஆர் புகழைப் பேசுகிறார். இது பற்றி உங்கள் பார்வை?
பண்ருட்டி ராமச்சந்திரன்: என்னுடைய பார்வை ஒன்றுமில்லை. அவர்களுக்குப் பேச்சுரிமை இருக்கிறது, பேசுகிறார்கள். அவ்வளவுதான். வசதி படைத்தவர்களுக்கு இருக்கிற வாய்ப்பு கீழ்மட்டத்தில் இருக்கிறவர்களுக்குக் கிடைப்பதற்கு என்ன பண்ணணுமோ அதைத்தான் பண்ணணும்.
செய்தியாளர்: அதிமுக-விற்கும் எம்.ஜி.ஆருக்கும் இப்போது சம்பந்தம் இல்லை என்கிறீர்களா?
பண்ருட்டி ராமச்சந்திரன்: ஒன்றும் சம்பந்தமில்லை, கவலைப்படாதீர்கள்.
செய்தியாளர்: விஜய்க்கு இவ்வளவு கூட்டம் கூடுவதற்கு என்ன காரணம்?
பண்ருட்டி ராமச்சந்திரன்: அவருடைய உழைப்புதான் காரணம். அவருடைய உழைப்பு, அவர் மீது இருக்கிற நம்பிக்கைதான் காரணம்.
செய்தியாளர்: விஜய் தன்னை அடுத்த எம்.ஜி.ஆராக முன்னிறுத்துகிறாரே?
பண்ருட்டி ராமச்சந்திரன்: அவர் நிலைமை வேறு. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருடைய நிலைமை, சூழ்நிலை எல்லாம் வேறு. அவருக்கு ஒரு பின்னணி இருந்தது. அறிஞர் அண்ணா அவர்கள், பெரியார் என அவருக்கு ஒரு பின்னணி இருந்தது. விஜய்க்கு அப்படிப் பின்னணி இல்லை. அது சாதகமாகவும் இருக்கிறது, பாதகமாகவும் இருக்கிறது. பின்னணி இல்லாததில் இன்னொரு நன்மை என்னவென்றால், முன்னோர்கள் செய்த தப்புத் தண்டாக்களுக்கு இவர் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
செய்தியாளர்: காங்கிரஸ் கட்சி திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கிறதே?
பண்ருட்டி ராமச்சந்திரன்: முதலில் அவர்கள் ஆட்சிக்கு வரட்டும், அதற்காகப் பாடுபடச் சொல்லுங்கள். அப்புறம் பங்கு.
செய்தியாளர்: இந்தத் தேர்தல் யாருக்கும் யாருக்குமான போட்டி?
பண்ருட்டி ராமச்சந்திரன்: நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே, திமுக-விற்கும் விஜய்க்கும் தான் போட்டி என்று மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பே சொல்லிவிட்டேன். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.
