காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது ஏன்?: ரிஷப் ஷெட்டி

Published On:

| By Kavi

இந்திய சினிமாவின் பேசுபொருளாக கடந்த இருவாரங்களாக காந்தாரா கன்னட திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

கேஜிஎஃப்-1,2 படங்களுக்குப் பிறகு கன்னட சினிமா மீதான பார்வை அகில இந்திய அளவில் மாறி இருக்கிறது.

ADVERTISEMENT

இங்கும் தரமான இயக்குனர்கள், நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதை கன்னடத்தில் தயாராகும் திரைப்படங்கள் படைப்பு ரீதியாகவும், வணிக ரீதியாகவும் உறுதிப்படுத்தி வருகிறது.

கேஜி எஃப்-1,2 படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ADVERTISEMENT

அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.  கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி.

கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், நூறு கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதி தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு 170 திரைகளில் வெளியிட்டிருக்கிறார்.

‘காந்தாரா’ தமிழக மக்களிடமும்  வரவேற்பினைப் பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி சென்னையில் நேற்று (அக்டோபர் 15) பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினார்.

அப்போது, மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே நடைபெறும் மோதலைச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

நான் அடிப்படையில் விவசாயம் செய்யும் குடும்பத்திலிருந்து திரையுலகிற்கு அறிமுகமானேன். இந்த படத்தை என்னுடைய சொந்த ஊரில் தான் படப்பிடிப்பு நடத்தினேன். 

நான் சிறிய வயதில் என்னென்ன பார்த்து ரசித்தேனோ… அதனைத் தான் இந்த படத்தில் படமாக்கி இருக்கிறேன். 

அப்பொழுது இருந்த சமூகம்… மக்களின் நம்பிக்கை… நம்முடைய கலாச்சார வேர்கள் ஆகிய அனைத்தையும் முன்னிலைப்படுத்திதான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். 

இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநில மக்களுக்கும், அவர்கள் வாழ்கின்ற பகுதியில் காவல் தெய்வங்களும், குலதெய்வங்களும் உண்டு. 

அது போன்ற காவல் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தான் நாங்கள்.

காவல் தெய்வங்கள் தான், சமூகத்தில் உயர்ந்தவர்கள்  மற்றும் தாழ்ந்தவர்கள் என்ற  எந்த பாகுபாடும் இல்லாமல் சமநிலையில் மனிதர்களை வைத்திருக்கும் சக்தி படைத்தது என எண்ணுகிறேன்.

கர்நாடக மக்கள் நம்பும் பூதகோலா, தைவாரா போன்ற காவல் தெய்வங்களை வைத்து எடுத்திருக்கிறேன். அதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. 

30 ஆண்டுகளுக்கு முன்பு என் ஊரில் நடந்த உண்மை சம்பவமே கதை. விவசாயிக்கும் ஒரு வனத் துறை அதிகாரிக்கும் இடையே நடந்த மோதல் இது. உண்மையாக நடந்த இந்தச் சம்பவத்தை வெறும் விவசாயிக்கும் – அரசு அதிகாரிக்குமான பிரச்சினையாக சுருக்கிவிடக் கூடாது என நினைத்தேன். 

மனிதனுக்கும் – இயற்கைக்கும் இடையேயான முரண்களாக இதைப் பார்த்தேன். அதில் உள்ளூர் தெய்வத்தையும் சேர்த்து காட்சிப்படுத்தினேன்” என்றார்

இது தற்போது எம் மாதிரியான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது என்பதனை பற்றி விவரிப்பதை விட, இதனை மையப்படுத்தி சமூகத்தில் ஒரு நேர் நிலையான அதிர்வலைகளை ஏற்படுத்த இயலும் என்பதனை படைப்பாக்கி இருக்கிறேன்” என்றார்.

அவரிடம் கன்னட சினிமாவின் தற்போதைய வளர்ச்சி பற்றி கேட்டபோது, ”கேஜிஎஃப் முன்பே கன்னட சினிமா நன்றாகவே இருந்தது. முதல் பான் இந்தியா ஸ்டார் ராஜ்குமார்.

படம் பல மொழிகளில் சென்றடையாததால்தான் கன்னட சினிமா குறித்து வெளியில் கொண்டு செல்ல முடியவில்லை. இப்போதைய சினிமா ரசிகர்கள் அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஏற்றவாறு இயக்குநர்களாகிய நாங்களும் அப்டேட்டாக வேண்டியுள்ளது. பொதுவாக நாம் நம்முடைய மரபு, கலாசார பண்பாட்டு ரீதியான படங்களை காட்சிப்படுத்தினால், அது மக்களுக்கு புதிய கன்டென்டாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்

காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது குறித்த கேள்விக்கு,

“நான் இந்தப் படத்தை சீக்கிரமாகவே எடுத்து முடித்துவிட்டேன். டீசர் வெளியிட்ட பிறகு அதைப் பார்த்தவர்கள் பான் இந்தியாவாக்கி இருக்கலாம் என்றனர். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

எந்த ஒரு இயக்குநரும், கதையாசிரியரும் தனது தாய் மொழியில் தான் யோசிப்பார்கள் தங்களது மண்சார்ந்து, மரபு சார்ந்த பண்பாடு, கலாச்சார வேர்களை சுற்றியே சிந்தனை இருக்கும் அதனை உயிர்ப்புடன் கொடுக்க வேண்டும்

அது கன்னடத்திலிருந்து சென்றடையவேண்டும் என நினைத்தேன். மொழி மாற்றம் செய்யப்பட்டால் அதன் அசல் தன்மை  மாறிவிடும் என நினைத்ததால் வேற்றுமொழிகளில் படத்தை வெளியிட யோசிக்கவில்லை.

உலகம் முழுவதும் கன்னட சினிமாவாக பார்க்கப்பட வேண்டும் என நினைத்தேன் அதுதான் என் மொழிக்கு, மாநிலத்திற்கு பெருமை காந்தாரா.

படம் வெற்றி பெறும் என நினைத்தேன். ஆனால், இந்த அளவுக்கு வெற்றியடையும் என நான் நினைக்கவில்லை” என்றார்.

இராமானுஜம்

லுங்கியில் லோக்கல் டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்

திமுக கையில் எடுக்கும் ஆயுதம் இந்தி: அண்ணாமலை

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share