டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைதுக்கு காரணமான சம்பவம் என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பூசிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதே பகுதியில் பேக்கரி ஒன்றுக்கு முருகன் தனது மனைவி பார்வதியுடன் சென்றிருந்தார். அப்போது பேக்கரி உரிமையாளருக்கும் பார்வதி- முருகன் தம்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பேக்கரி உரிமையாளர் சிவா, அவரது நண்பரான போலீஸ்காரர் லோகேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது பார்வதி- முருகன் புகார் கொடுத்தனர். சிவா, லோகேஷ் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஜூலை மாதம் 25-ந் தேதி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்தது?
ஜூலை 25-ந் தேதி கொடுத்த புகாருக்கு ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதிதான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர் போலீசார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால் நடைமுறைகளின் படி நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு போனது. காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல் இந்த வழக்கை கடந்த 4-ந் தேதி விசாரித்தார்.

நீதிமன்றம் என்ன சொன்னது?
இந்த வழக்கை செப்டம்பர் 4-ந் தேதி விசாரித்த நீதிபதி ப.உ.செம்மல், “எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட புகாரில் ஏன் 27 நாட்கள் கழித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது? இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனரா? என கேள்வி எழுப்பினார். ஆனால் போலீசார் இந்த கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை.
இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி சங்கர் கணேஷிடம், “குற்றம்சாட்டப்பட்ட 6 பேர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழான இந்த வழக்கு கால தாமதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது; அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை; எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவு 18-A(b)-ன் கீழ் உங்கள் கடமையை நீங்கள் செய்யவில்லை. அதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என்றார் நீதிபதி செம்மல்.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் செப்டம்பர் 8-ல் என்ன நடந்தது?
இந்த வழக்கின் விசாரணை காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நேற்று செப்டம்பர் 8-ந் தேதி நடைபெற்றது. பகல் 12 மணியளவில் இவ்விசாரணையின் போது, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் டிஎஸ்பி சங்கர் கணேஷ் ஆகியோர் ஆஜராகி இருந்தனர். அப்போது, குற்றவாளிகளை கைது செய்துள்ளீர்களா? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார். பின்னர் பகல் 1 மணியளவில், “நீங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் உங்களை கைது செய்ய நேரிடும்” எனவும் நீதிபதி எச்சரித்தார்.
இதன் பின்னர் நேற்று மாலை 5.40 மணிக்கு, வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 10-ன் கீழ் குற்றவாளிகள் இந்த மாவட்டத்தில் இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தும் அதை செயல்படுத்தவில்லை; அதனால் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி செம்மல்.

டிஎஸ்பி கைது- நீதிபதி உத்தரவும் போலீஸ் ரியாக்சனும்
டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்ட போதும் எந்த போலீசாரும் அவரை கைது செய்ய முன்வரவில்லை. போலீசார் வாகனமும் தரப்படவில்லை. ஒட்டுமொத்தமாக போலீசார், நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் ஒத்துழைப்பு தரவில்லை; அதேநேரத்தில் டிஎஸ்பி கைது உத்தரவுக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான போலீசார் நீதிமன்றத்தில் குவிந்தனர்.
இதனையடுத்து தம்முடைய கார் ஓட்டுநர் ரஞ்சித் மற்றும் 4 அமீனாக்களை அழைத்து தம்முடைய வாகனத்திலேயே டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி செம்மல்.

போலீஸ் டிஎஸ்பி தப்பி ஓடினாரா? என்ன நடந்தது?
இதனடிப்படையில் நீதிபதி செம்மலின் வாகனத்தில், டிஎஸ்பி சங்கர் கணேஷ் கிளை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அந்த வாகனத்தை மறித்தனர். பின்னர் காரில் இறங்கிய டிஎஸ்பி சங்கர் கணேஷ், போலீஸ் பொலிரோ வாகனத்தில் ஏறி தமது அலுவலகத்துக்கு சென்றார். இதனால் டிஎஸ்பி தப்பி ஓடியதாக வதந்தி பரவியது. ஆனால் 10 நிமிடத்தில் கிளை சிறையில் டிஎஸ்பி ஆஜரானதால் இந்த வதந்தி அடங்கியது. போலீஸ் தரப்பில், டிஎஸ்பி சங்கர் கணேஷுக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என நீதிபதி சதீஷ்குமாரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த மனுவை உடனே விசாரிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிடும் என்பதற்காக தமது அலுவலகத்துக்கு போனார் டிஎஸ்பி. ஆனால் ஜாமீன் கிடைக்காததால் பின்னர் சிறைக்கு தாமாகவே வந்து ஆஜரானார் டிஎஸ்பி என தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீதிபதியின் ஓட்டுநர், அமீனாக்களும், டிஎஸ்பி விவகாரத்தில் போலீசார் எப்படி நடந்து கொண்டனர் என்பதை நீதிபதியிடம் முழுமையாக விவரித்துள்ளனர்.
தற்போது டிஎஸ்பி சங்கர் கணேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று செப்டம்பர் 9-ந் தேதி நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
இன்றைய விசாரணையின் போது, நீதிபதிக்கும் டிஎஸ்பிக்கும் முன்விரோதம் இருப்பதாலேயே அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

டிஎஸ்பி-க்கும் நீதிபதிக்கும் என்ன முன்விரோதம்?
காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் இது பற்றி நம்மிடம் கூறுகையில், “நீதிபதி செம்மலுக்கு மணிகண்டன், லோகேஷ் என 2 பாதுகாப்பு போலீசார் போடப்பட்டிருந்தனர். (இந்த லோகேஷ்தான் தற்போது அடிதடி வழக்கில் சிக்கி இருக்கிறார்) இந்த 2 பாதுகாவலர்களும் நீதிபதி செம்மலின் செல்போன் பேச்சுகளை கேட்பது; நீதிபதி செம்மல் மீது பெயரில்லாத புகார் கடிதங்களை (மொட்டை பெட்டிஷன்) அனுப்புவது ஆகிய செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து இருவர் மீதும் சந்தேகப்பட்ட நீதிபதி அவர்களது செல்போன்களை வாங்கி ஆய்வு செய்தார். அதில், தம் மீது புகார் கடிதங்களை தயார் செய்வதற்காக இருவரும் 144 மெசேஜ்களை அவர்களது செல்போன்களில் இருந்து அனுப்பி இருந்ததை கண்டுபிடித்து அதிர்ந்தார் நீதிபதி. இதனால், நீங்கள் பாதுகாப்பு தர வந்துள்ளீர்களா? அல்லது உளவு பார்க்க வந்துள்ளீர்களா? என கேள்வி கேட்டதுடன் காஞ்சிபுரம் எஸ்பியிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த 2 பேரையும் பக்கத்து மாவட்டத்துக்கு டிரான்ஸ்பர் செய்வதாக எஸ்பி கூறியுள்ளார். அதே நேரத்தில், பாதுகாப்பு போலீசாரின் செல்போன்களை கூட ஆராயவில்லை; அவர்களுக்கு ஆதரவாக எஸ்பி இருந்தார் எனவும் சொல்லப்படுகிறது.
அதேபோல காஞ்சிபுரம் மாவட்டத்தில் விமானப் படை அதிகாரிக்கு சொந்தமான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து முறைகேடு செய்த விவகாரத்தில் பத்திரப் பதிவாளரை போலீசார் கைது செய்யாமல் இருந்ததை நீதிபதி செம்மல் நீதிமன்ற விசாரணையின் போது கடுமையாக விமர்சித்தார்.
இப்படி போலீசாருக்கும் நீதிபதி செம்மலுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வந்தது. தற்போது டிஎஸ்பி சங்கர் கணேஷ் விவகாரத்தில் இந்த முரண்பாடு விஸ்வரூபம் எடுத்துவிட்டது என்கின்றனர்.
