கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்,தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மே 22) உத்தரவிட்டுள்ளது. Why is there no funding for Tamil Nadu
கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் 2025ஆம் ஆண்டுக்கு இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் இன்னும் மாணவர் சேர்க்கை தொடங்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் இவ்வழக்கை தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், “உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று (மே 22) விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் ஆஜராகி, “கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் 25 % இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் 60 சதவிகித தொகையை மத்திய அரசும் 40 சதவிகித தொகையை மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால் கடந்த 2021முதல் எந்த நிதியையும் மத்திய அரசு ஒதுக்கவில்லை. 100 சதவிகித தொகையை மாநில அரசு தான் வழங்கி வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காவிட்டால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க மே 28ஆம் தேதி தமிழக அரசு ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது” என்று வாதத்தை முன்வைத்தார்.
மத்திய அரசு நிதி ஒதுக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன்.
இதையடுத்து நீதிபதிகள், மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் பாபு, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாகவும் சில காரணங்களால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
என்ன காரணத்துக்காக நிதி ஒதுக்கப்படவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்பி கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டார். .
இதையடுத்து, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவிகித இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். Why is there no funding for Tamil Nadu