கடந்த 14ஆம் தேதியன்று ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான ‘கூலி’ திரைப்படம் தமிழ்நாட்டில் சுமார் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.
படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக இருந்தபோதிலும் வசூலில் பெரிதாகப் பாதிப்பு ஏதுமில்ல என்ற நிலையே நிலவுகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் வரை இந்தியா முழுக்க இப்படம் வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது போக வெளிநாடுகளில் ‘கூலி’ நிகழ்த்தியிருக்கிற வசூல் சாதனை தனி.
தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் ‘கூலி’ படம் பற்றிய தங்களது கருத்துகளைத் தொடர்ந்து பொதுவெளியில் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ‘விடுதலை 1 & 2’ படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தனது கருத்தை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பணி அருமை என்றும், படத்தில் ரஜினி தன்னை ஆச்சர்யப்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.
’சூப்பர்ஸ்டார் என்றும் சூப்பர்ஸ்டார் தான்’ என்று ரஜினியைப் புகழ்ந்த எல்ரெட் குமார், இசையமைப்பாளர் அனிருத் படத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
முத்தாய்ப்பாக, ’கூலி படத்திற்கு ஏன் ஏ சான்றிதழ் தரப்பட்டிருக்கிறது’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். “இதைவிட அதிக வன்முறை நிறைந்திருக்கிற இதர மொழிப்படங்களுக்கு யு/ஏ சான்றிதழ் தரப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூலி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் தரப்பட்டுள்ளது சரியான முடிவல்ல” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் எல்ரெட் குமார்.
கூடவே, தமிழ் திரையுலக ஆளுமைகள் ஒன்றிணைந்து இது பற்றி குரலெழுப்ப வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளில் இடம்பெற்ற வன்முறையைக் காட்டிலும், மின்சார நாற்காலியில் பிணங்களை வைத்து எரிப்பதாகச் சில காட்சிகளில் குறிப்பிடப்படுவது தான் கூலி படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கக் காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், எல்ரெட் குமாரின் கருத்து தமிழ் திரையுலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.
