கட் அண்டு ரைட் : பிற முகலாய மன்னர்களிடத்தில் இருந்து ஒளரங்கசீப் வித்தியாசப்படுவது ஏன்?

Published On:

| By Kumaresan M

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் என்று அழைக்கப்பட்ட சத்ரபதி ஷாம்பாஜி நகரில் குலதாபாத் என்ற இடத்தில் முகாலாய மன்னர் ஒளரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி நாக்பூரில் போராட்டம் வலுத்து வருகிறது. இதனால், நாக்பூர் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1707-ஆம் ஆண்டு ஒளரங்கசீப் இறந்தார். அதற்கு பிறகு, குலாதாபாத்திலுள்ள தர்கா அருகே அவரின் மத குருவான ஷேக் ஷைனுதீன் என்பவரின் கல்லறையின் பக்கத்திலேயே எளிமையான முறையில் ஔரங்கசீப்புக்கு கல்லறை கட்டப்பட்டது. தினமும் இந்த கல்லறையை 3 ஆயிரம் பேர் வந்து பார்த்து செல்வார்கள். ஆனால், தற்போது வெடித்துள்ள பிரச்சனையால் சுற்றுலாப்பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.

ஒளரங்கசீப்பின் கல்லறை உருவான வரலாறு என்ன? அவர் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கூறும்போது,

“ஒளரங்கசீப்பின் தந்தை ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ்க்காக கட்டியதுதான் தாஜ்மகால். இதனை கட்ட அந்த காலத்திலேயே ஏராளமான பொருட் செலவு பிடித்தது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒளரங்கசீப், ஷாஜஹான் உள்ளிட்ட பிற முகாலாய மன்னர்களிடத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்.

இவர், ஒரு போதும் ஆடம்பரத்தை விரும்பியதில்லை. தனது உணவுக்கு கூட அரசு கஜானாவில் இருந்து பணம் பெற மாட்டார். குரான் எழுதி விற்பனை செய்தும், தொழுகையின் போது தலையில் அணியும் குல்லாவை தயாரித்து விற்பனை செய்தும் அதில் கிடைத்த வருமானத்தில்தான் சாப்பிட்டு வந்துள்ளார். தனது தேவை தீர்ந்தும் பணம் இருந்தால், அதை அப்படியே கடவுள் பெயரில் செலவழித்து விடுவார். Why is Aurangzeb tomb different?

தான் இறந்த பிறகு அரசு கஜானாவில் இருந்து ஒரு பைசா கூட தனது இறுதிச்சடங்குக்கு செலவிடக் கூடாது என்று உறுதியாக உத்தரவிட்டுள்ளார் அவர். தனது இறப்பு செலவு மற்றும் கல்லறை கட்ட தானே பணம் சேர்த்து வைத்துள்ளார். அந்த பணத்தில் அப்போதைய மதிப்பில் ரூ.14.12 செலவில் மணல் கொண்டு திறந்த வெளியில் எளிமையாக அந்த கல்லறை அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.

ஔரங்சீப் கல்லறை அருகேயே அவரின் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களின் கல்லறையும் இருக்கிறது. இந்த கல்லறையை எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். கட்டணம் எதுவும் கிடையாது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share