அமெரிக்கா பயணம் ஏன்? : காரணங்களை அடுக்கிய ஸ்டாலின்

Published On:

| By christopher

Why i go to America? : MKStalin list out the reasons

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 27) இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்படுகிறார்.

இந்த நிலையில் தனது அமெரிக்க பயணத்திற்கான காரணங்களை விளக்கி திமுக தொண்டர்களுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பயண மடல்.

பறவையைப் போல சிறகுகள் முளைக்கவில்லையே என்று மனித இனம் எதிர்பார்ப்பது உண்டு. அத்தகைய மனித இனத்திற்கு சிறகுகள் போல முளைத்தன அறிவியலின் அற்புதக் கண்டுபிடிப்புகளில் ஒன்றான விமானம் என்கிற வானூர்தி. கடல் கடந்து பயணிக்கும் பறவைகள் போல, மனிதகுலம் பல நாடுகளுக்கும் பறக்கத் தொடங்கியது. தனிப்பட்ட மகிழ்ச்சிக்கான பயணங்கள் உண்டு. வேலை தேடி பல நாடுகளுக்கும் பறப்பவர்கள் உண்டு. அலுவல் சார்ந்த சந்திப்புகளுக்கான பயணங்கள் உண்டு. அன்னை நிலம் பயன் பெறுவதற்கான பயணங்களில் ஒன்றாக, உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.

முந்தைய ஆட்சிக்காலத்தில் தேங்கிக் கிடந்த தொழில்வளர்ச்சியை மீட்டெடுத்து, அதற்கேற்ற வகையில் முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழிற்கட்டமைப்புகள் வாயிலாக, மாநிலத்தில் பரவலான அளவில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டைப் பொருளாதார ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை நமது திராவிட மாடல் அரசு நிர்ணயித்து, அதற்கான பணிகளை முனைப்பாகவும் சிறப்பாகவும் மேற்கொண்டு வருகிறது. அந்த முனைப்பின் தொடர்ச்சியாகத்தான் இன்று (ஆகஸ்ட் 27) தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் அமெரிக்காவுக்குப் பயணிக்கிறேன்.

திராவிட மாடல் ஆட்சி அமைந்ததிலிருந்தே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கேற்ற கொள்கை வகுக்கப்பட்டு, பல்வேறு துறைகள் சார்ந்த முதலீடுகளைக் கொண்டு வந்தபடியே இருக்கிறோம். தேடி வருகின்ற முதலீடுகளைப் போலவே, தேடிச் சென்று முதலீடுகளை ஈர்க்கும் பணியையும், இன்றைய உலளாகவிய பொருளாதாரச் சூழலில் உள்ள போட்டிகளைக் கருத்திற் கொண்டு செயலாற்றி வருகிறது நமது அரசு.

தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு நம் மாநிலத்திற்கான முதலீடுகளை ஈர்க்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கும் வகையில் புகழும் தரமும் மிக்க பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.

2024 ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் பங்கேற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதன் வாயிலாகக் கடந்த மூன்றாண்டுகளில் ஏறத்தாழ 10 இலட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துகிற வகையில், ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொண்டு, அவற்றை முறையாகக் கண்காணித்து, தொழிற்சாலைகளைத் தொடங்கி, வேலைவாய்ப்பு அமைக்கும் பணியையும் திராவிட மாடல் அரசு மேற்கொண்டு வருகிறது.

சொன்னதைச் செய்வோம் என்று நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உருவாக்கித் தந்த ஆட்சி நிர்வாக இலக்கணத்தின்படி, தொழிற்சாலைகள் அமைப்பதற்கேற்ற சூழல்களை உருவாக்கிக் கொடுத்து, உடனடியாக அடிக்கல் நாட்டு விழாக்களையும், அதன் தொடர்ச்சியாக விரைவாக தொழிற்சாலைத் தொடக்க விழாக்களையும் மேற்கொண்டு வருகிறது திராவிட மாடல் அரசு.

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாட்டில் மட்டும் ரூபாய் 17,616 கோடி மதிப்பிலான 19 நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டதுடன், ரூபாய் 51,157 கோடி மதிப்பிலான 28 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 1 இலட்சத்து 6 ஆயிரத்து 803 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்வாகன நிறுவனம் தனது தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை ஏற்கனவே என் தலைமையில் தூத்துக்குடியில் நடத்தி, பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.

திராவிட மாடல் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த 3 ஆண்டுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 31 இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் முனைப்பாக செயல்படுவதுடன், மேலும் பல நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டும் வகையில், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற அழுத்தமான அடையாளத்தைத் திராவிட மாடல் அரசு வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற பொருளாதார இலக்குடனானப் பயணத்தில் மற்றொரு கட்டம்தான், உங்களில் ஒருவனான நான் மேற்கொள்ளும் இந்த அமெரிக்கப் பயணம்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

“அண்ணாமலை ஒரு விட்டில் பூச்சி” : முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

துருபிடித்து, சில மாதங்களில் நட்டு போல்டு கழன்றுள்ளன… சிவாஜி சிலை உடைந்ததன் பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share