ஒளிப்பதிவாளராக இருந்து, அழகி படத்தின் மூலம் இயக்குநரான தங்கர் பச்சான், சில படங்களில் நடிக்கவும் செய்தார். இவரது கடைசிப் படம் ‘கருமேகங்கள் கலைகின்றன’ பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. தமிழார்வலரான தங்கர் பச்சான் பின்னர், அரசியலிலும் குதித்தார். கடந்த மக்களவை தேர்தலில் பாமக சார்பில் அவருக்கு கடலூர் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், வெற்றி கிடைக்கவில்லை.
தங்கர்பச்சான் தனது மகனுக்கு விஜித் என்ற வித்தியாசமான பெயரை சூட்டியுள்ளார். தமிழ் மீது அதிக பற்று கொண்ட தங்கர்பச்சான் விஜய், அஜித் போல விஜித் என பெயர் வைத்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இந்த நிலையில், தனது மகனுக்கு விஜித் என்று பெயர் வைத்தது தொடர்பாக ஒரு பேட்டியில் தங்கர்பச்சான் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது தொடர்பாக தங்கர்பச்சான் கூறுகையில், “நிறைய பேர் அதை ஒரு குறையாகத்தான் சொல்கிறார்கள். பெயர் வைக்கும் விஷயம் என் கையில் இல்லாமல் போய் விட்டது . விஜித் என்ற பெயரை நான் விரும்பி வைக்கவில்லை . என்னுடைய மனைவியும் இந்த பெயரை விரும்பி வைக்கவில்லை.
மனைவி வயிற்றில் மகன் 7 மாதமாக இருக்கும் போது, உறக்கத்தில் இருந்த நான் திடீரென எழுந்து, விஜித் எப்படியிருக்கான் ? என்று கேட்டுள்ளேன். இது என் மனைவியே என்னிடம் சொன்னதுதான். அப்படி, நான் கேட்டதால், என் மனைவி பிடித்து போய் அந்த பெயரை இருக்கட்டும் என்று கூறி விட்டார். விஜித்துனு ஒரு பெயர் இருக்குதானு கூட எனக்கு தெரியாது. அப்புறம் மகனா பிறந்தவுடனே அந்த பெயரை மாற்ற என் மனைவிக்கு விருப்பமில்லாமல் போய் விட்டது” என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்