இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டியூட்’. தீபாவளியையொட்டி கடந்த 17ஆம் தேதி ரிலீசான இப்படம் கடந்த 5 நாட்களில் ரூ. 95 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு தரப்பு அறிவித்தது. விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்ட உள்ளது. இதன்மூலம் லவ் டுடே, டிராகன், டியூட் படங்கள் மூலம் ஹாட்ரிக் நூறு கோடி வசூலை எட்டிய முதல் இளம் ஹீரோ என்ற சாதனையை படைக்க உள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு டியூட் படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்ற நிலையில் இயக்குநர் கீர்த்திஸ்வரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.
அவர் பேசுகையில், “இது எனக்குக் கிடைத்த முதல் வெற்றி மேடை என்பதால், இது ரொம்பவே சிறப்பான தருணம். ரசிகர்கள் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட விதம் என்னை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் ஆதரவுதான் அடிப்படை.
பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார். அவர் தொட்டதெல்லாம் வெற்றியாகிறது. மமிதா ஒரு காட்சியை பாதியிலேயே சொன்னாலும், உடனே அந்த உணர்வைப் பிடித்து நடித்து விடுவார். சரத்குமார் சார் எனக்குச் சிறுவயதிலிருந்தே பிடித்த நடிகர். அவருடைய நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்தே நான் வளர்ந்தேன். அம்மா கதாபாத்திரத்தை ரோகிணி மேடம் ஏற்றுக்கொண்டது படத்துக்குப் பெரிய பலம். ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், ஆடை வடிவமைப்பாளர் பூர்ணிமா எனப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார்.
கவின் கொலைச் சம்பவம் என்னை உலுக்கியது!
தொடர்ந்து அவர், “படத்தின் வசனங்கள் குறித்து விமர்சனங்கள் வந்தன. சில விஷயங்களை தைரியமாகப் பேசுவதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். படத்தின் கிளைமாக்ஸில் வரும் ஆணவக் கொலை பற்றிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அது யாரையும் தனிப்பட்ட முறையில் குறிக்கவில்லை.
திருநெல்வேலி கவின் கொலைச் சம்பவம் என்னை மிகவும் உலுக்கியது. அந்த வலியிலிருந்து உருவான உண்மையான உணர்வின் வெளிப்பாடுதான் அந்தக் காட்சி. ஒரு சமூகப் பிணைப்பை வெளிப்படுத்தும் உண்மையான உணர்வாகவே அதை நான் பதிவு செய்தேன்.
இது தமிழ்நாடு. நாம் பெரியார் கருத்துக்களைக் கொண்டு சேர்ப்போம். இது பெரியார் வழி, நாங்கள் பெரியாரின் பிள்ளைகள் என்ற கொள்கையுடன் தான் இங்கு நாங்கள் நிற்கிறோம். அவருடைய கருத்துக்களை திரையில் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்” என கீர்த்திஸ்வரன் பேசினார்.
