ஊழல் புகாரில் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் – உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

Published On:

| By Pandeeswari Gurusamy

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்கில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் சாலை பணிகள் மேற்கொள்ள உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கியதில் ரூ.98.25 கோடி அளவிற்கு முறைகேடு நடந்ததாக ஆளும் திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி உத்தரவு பிறப்பித்ததை அமல்படுத்தப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கோவை மாநகராட்சி முன்னாள் துணை கமிஷனர் காந்திமதி மீது வழக்கு நடத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐஏஸ் அதிகாரிகள் கே.எஸ்.கந்தசாமி, விஜய கார்த்திகேயன் ஆகியோருக்கு எதிரான வழக்கை நடத்த மத்திய அரசு ஒப்புதல் பெற போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்த பின்னர் ஒப்புதல் கோரி மத்திய அரசுக்கு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர் என்ற வாதத்தை முன் வைத்தார்.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து நீதிபதி தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு நடத்த மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவேண்டிய ஆவணத்தை தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் 19 மாதங்களுக்கு மேல் தன்வசம் வைத்துள்ளார் .

முன்னாள் அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிரான ஆவணங்கள் எல்லாம் வேகமாக நகரும்போது ஐஏஎஸ் அதிகாரிகள் மீதான ஆவணங்கள் மட்டும் ஏன் இவ்வளவு மெதுவாக நகர்கிறது என கேள்வி எழுப்பினார். ஊழல் செய்த அமைச்சர்கள் அதிகாரிகளை சிறைக்கு அனுப்புவோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகின்றனர் ஆனால் எதுவும் நடக்கவில்லை. ரூ.100 லஞ்சம் வாங்கும் தாசில்தார் ஆர்டிஓ கள் கைது செய்யப்படும் போது ஐஏஎஸ் அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மேலும் இந்த வழக்கில் விஜிலென்ஸ் கமிஷனர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இயக்குநர், பொதுத்துறை செயலாளர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக தாமாக முன்வந்து சேர்க்கிறேன். அவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற காலதாமதம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share