விஜய் சொன்ன வார்த்தை… எடப்பாடி முடிவின் அவசர பின்னணி!

Published On:

| By Aara

why eps met amit shat in urgent

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 25ஆம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவசரமாக சந்தித்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரங்களில் தொடர் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. why eps met amit shat in urgent

2023 ஆம் ஆண்டு பாஜகவோடு கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு பலமுறை வந்திருக்கிறார்.

அப்போது எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா சந்திக்க விரும்பியதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி மறுத்துவிட்டார்.

ஆனால் இப்போது அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததும், அவசரமாக டெல்லி சென்று அவரை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி அதிமுக வட்டாரங்களுக்குள்ளேயே இயல்பாக எழுகிறது.

இது குறித்து விசாரித்தபோது, “சில மாதங்களாகவே அதிமுக – தமிழக வெற்றி கழகம் இடையில் அதிகாரப்பூர்வமற்ற வகையில் கூட்டணி அமைப்பது சம்பந்தமான பேச்சுகள் நடந்து கொண்டிருந்தன.

இந்த பேச்சுவார்த்தைக்கு சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவும் ஒரு காரணமாக இருந்தார்.

ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு ஆதவ் அர்ஜுனா கூட இல்லாமல் விஜய்யும், எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுனும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

அப்போது விஜய், வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி அமைக்கும் பட்சத்தில் தன்னுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை நேருக்கு நேர் எடப்பாடி மகனிடம் தெரிவித்திருக்கிறார். மிக அதிகமான சட்டமன்ற தொகுதிகளை விஜய் அப்போது டிமாண்ட் செய்திருக்கிறார்.

இந்த பேச்சுவார்த்தையில் விஜய் இன்னொரு விஷயத்தையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, ‘என்னுடைய ஜனநாயகன் பட வேலைகள் முடிந்த பிறகு முழுமூச்சாக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டமாக சென்று மக்களை சந்திக்கப் போகிறேன். அந்த சந்திப்பு எல்லாம் முடித்த பிறகு வருகிற ஜனவரி மாதம் கூட்டணி தொடர்பாக என்னுடைய இறுதி முடிவை சொல்கிறேன்’ என்றும் விஜய் ஒரு ‘இக்’ வைத்திருக்கிறார்.

விஜய் உடனான சந்திப்பு பற்றிய விவரங்களை தன்னுடைய தந்தையார் எடப்பாடி பழனிசாமியிடம் மிதுன் விளக்கியுள்ளார்.

இனியும் விஜய்யை நம்பி நாம் காத்திருக்காமல் அடுத்தடுத்த வியூகங்களை அமைக்க வேண்டும் என்று அப்போதே முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி.

இந்த நிலையில் தான் டெல்லியில் அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வந்ததும் உடனடியாக விரைந்து சென்றிருக்கிறார்” என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share