திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி (மமக) 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் அக்கட்சியின் பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் என்ன?
2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்வது தொடர்பாக அரசியல் கட்சிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது தேர்தல் ஆணையம்.
தமிழகத்தில் எந்த கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது?
மனிதநேய மக்கள் கட்சி
கோகுல மக்கள் கட்சி
இந்தியன் லவ்வர்ஸ் பார்ட்டி
இந்தியன் மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்
மக்கள் தேசிய கட்சி
பெருந்தலைவர் மக்கள் கட்சி
2 எம்.எல்.ஏக்களை கொண்ட மனித நேய மக்கள் கட்சிக்கு ஏன் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது?
2019-ம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்டது. திமுக கூட்டணியில் பாபநாசம் மற்றும் மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது மனித நேய மக்கள் கட்சி. பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட மமக தலைவர் ஜவாஹிருல்லா 86,567 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். மணப்பாறையில் 98,077 வாக்குகளைப் பெற்று மமகவின் அப்துல் சமது வெற்றி பெற்றார்.
ஆனால் இந்த இரு தொகுதிகளிலும் மமகவின் வேட்பாளர்கள் தனிச் சின்னத்தில் போட்டியிடாமல், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களாகவே இவர்கள் இடம் பெற்றுள்ளனர். தனி சின்னத்தில் போட்டியிடாததால் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகள் பட்டியலில் மமகவும் இடம் பெற்றுள்ளது.
2021-க்கு முன்னர் மமக தனிச் சின்னத்தில் போட்டியிட்டதா?
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மமக தனித்து 4 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது. அப்போது தனிச் சின்னத்தில் போட்டியிட்டது மமக.
2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மமகவுக்கு ஆம்பூர், சேப்பாக்கம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த தேர்தலில் “இரட்டை மெழுகு வர்த்தி” தனி சின்னத்தில் மமக போட்டியிட்டது. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும் ஆம்பூரில் அஸ்மல் பாஷாவும் வென்றனர்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மமமுகவுக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்பட்டது. அத்தொகுதியில் ஹைதர் அலி, தனி சின்னத்தில் போட்டியிட்டு 2,36,679 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார்.
2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மமகவுக்கு ராமநாதபுரம், ஆம்பூர், நாகை, தொண்டாமுத்தூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடவில்லை என அறிவித்தது. இந்த தேர்தலில் தனிச் சின்னமாக கப் அன் சாசர் சின்னத்தில் போட்டியிட்டது மமக. அத்தேர்தலில் 4 தொகுதிகளிலும் மொத்தம் 1,97,150 வாக்குகளைப் பெற்ற போதும் எந்த ஒரு இடத்திலும் அக்கட்சி வெற்றி பெறவில்லை.
தேர்தல் ஆணைய நோட்டீஸ் தொடர்பாக மமக என்ன செய்யும்?
தேர்தல் ஆணைய நோட்டீஸின் படி இன்று ஆகஸ்ட் 26-ந் தேதி சென்னையில் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி மமக நிர்வாகிகள் விளக்கம் அளிப்பர்
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையத்தின் பதிவு நீடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
வருமான வரி விலக்கு பெற முடியும்; பொது தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்யும் போது முன்னுரிமை கிடைக்கும் உள்ளிட்ட சலுகைகளைப் பெற முடியும்.
