ஜெமிமா ரோட்ரிகஸுக்கான வெற்றி உணர்வை நாம் ஏன் அனுமதிக்கவில்லை?

Published On:

| By Minnambalam Desk

நமது பாரபட்சங்களும் நம்பிக்கைகளும் நமது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் எவ்வாறு பாதிக்கின்றன?

அமிதவா குமார்

ADVERTISEMENT

எனது ‘A Time Outside This Time’ என்ற நாவலில் நன்றி தெரிவிக்கும் பக்கத்தில் உள்ள முதல் வரி இதுதான்: ‘தி நியூயார்க்கரில் வெளிவந்த நடத்தை அறிவியல் பற்றிய 2017ஆம் ஆண்டு கட்டுரையில், மளிகைக் கடைக்காரர்கள் தங்கள் பெட்டிகளுக்கு மேலே “ஒரு நபருக்கு 12” என்ற அறிவிப்பை வைப்பதன் மூலம் இருமடங்கு சூப்பை விற்க முடியும் என்பதைக் கற்றுக்கொண்டதாக நான் படித்தேன்.

‘ மளிகைக் கடைக்காரர்கள் பயன்படுத்தும் அந்த அறிவிப்பு, உளவியலாளர்கள் ‘நங்கூரம் இடுதல்’ என்று அழைக்கும் ஒரு நிகழ்வின் பகுதி. நங்கூரம் இடுதலின் ஒரு அம்சம் ‘தூண்டல்’ என்று அழைக்கப்படுகிறது. நமது சிந்தனையில் உள்ள தொடர்பு வழிமுறையை இது குறிக்கிறது.

ADVERTISEMENT

உதாரணமாக, யாராவது ‘இந்தியாவில் ரயில் பயணம்’ என்று சொன்னால், ஓடும் ரயில் மீது ஷாருக் கானும் மலைகா அரோராவும் ‘சய்ய சய்யா’ என்று பாடியபடி நடனம் ஆடுவது உடனடியாக எனக்கு நினைவுக்கு வரும். சிந்தனையில் உள்ள தொடர்பு வழிமுறை, நமது நினைவுகள், சித்தாந்தங்கள் பற்றிய நுண்ணறிவை நமக்கு வழங்குகிறது.

தொடர்புச் சிந்தனை ஆர்வமூட்டக்கூடியது. ஏனெனில் தனிநபர்களின் நடத்தையும் குழுக்களின் நடத்தையும் நிகழ்வுகள், செய்திகள், பிரச்சாரங்கள் மூலமாகத் தூண்டப்படலாம் என்பதை இது காட்டுகிறது; அதேபோல் முக்கியமாக, நமது அதிகம் அறியப்படாத சார்புகள், நாம் சுதந்திரமான அல்லது பகுத்தறிவுள்ள சிந்தனை என்று கருதுவதைப் பாதிக்கின்றன என்பதையும் இது விளக்குகிறது.

ADVERTISEMENT

‘A Time Outside This Time’ என்ற என் நாவலில், எனது கதைசொல்லியின் மனைவி, ஒரு உளவியலாளர். பரிசோதனையில் பங்கேற்பவர்கள் தங்கள் நடத்தை எவ்வாறு வழிநடத்தப்படுகிறது அல்லது மாற்றியமைக்கப்படுகிறது என்பதை அறியாமல் இருக்கும்போதும், தூண்டல் விளைவுகளை எவ்வாறு அடைய முடியும் என்று கதைசொல்லிக்கு அவர் கற்பித்துள்ளார்:

வேறு உதாரணத்தைப் பார்க்கலாம். பகுத்தறிவுடனும் செயல்திறனுடனும் செயல்பட முயற்சிக்கும் விமான நிலையப் பாதுகாப்பு ஊழியர்கள், சமகால இந்தியாவில் மத அடிப்படையில் பயணிகளைப் பாகுபாட்டுடன் பார்க்க எவ்வாறு தூண்டப்படுகிறார்கள் என்பதை மூத்த பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் விளக்கியிருக்கிறார். (How a spelling error exposed anti-Muslim bias at airport security | Siddharth Varadarajan – YouTube)

இந்த உளவியல் பின்னணியில் இந்தியக் கிரிக்கெட்டின் சமீபத்திய நட்சத்திரமான ஜெமிமா ரோட்ரிகஸ் விஷயத்தைக் கருத்தில் கொள்வோம். அவரது செயல்பாடு, அவரது அடையாளம் குறித்த பதில்கள், நாம் ஒரு விஷயத்தை ஏன் நம்புகிறோம் என்று நமக்குச் சொல்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 127 ரன்கள் எடுத்த ஜெமிமா, அந்தப் போட்டியின் சிறந்த வீராங்கனையாக விளங்கினார். இந்தியர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்கோரைத் தாண்டிச் சென்றபோது அவர்கள் அனைத்து இந்திய ரசிகர்களின் இதயங்களிலும் உணர்ச்சிகளின் வெள்ளத்தைப் பாய்ச்சிவிட்டார்கள். தொடர் முழுவதும் தான் தினமும் அழுததாக ரோட்ரிகஸ் மைதானம் முழுவதற்கும் உலகத்திற்கும் சொன்னபோது, என் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது.

ஜெமிமாவுக்கு அது பெரிய போராட்டமாக இருந்தது. அவர் எவ்வாறு அணியிலிருந்து நீக்கப்பட்டார், அவர் எவ்வாறு பதற்றமாகவும் உணர்ச்சியற்றவராகவும் உணர்ந்தார் என்பதையெல்லாம் பகிர்ந்துகொண்டார். போட்டியில் கடுமையான அழுத்தம் தரும் சூழ்நிலைகள் இருந்தபோதிலும், தனக்கு ஆதரவளித்த தனது அணி வீரர்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்தார். அவர் பைபிளிலிருந்து மேற்கோள் காட்டினார். கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறினார். இயேசுவுக்கு நன்றி தெரிவித்தார்.

அவருடைய ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, அவர் சொன்னதையெல்லாம் கேட்டபோது நமது கண்களில் கண்ணீர் வடிந்தது. அந்தக் கண்ணீர் உலருவதற்குள், ஜெமிமா ரோட்ரிகஸ் கடந்த காலத்தில் எதிர்கொண்ட தீவிரமான வெறுப்புப் பிரச்சாரம் பற்றிய செய்திகள் சமூக ஊடகங்களில் வரத் தொடங்கின. அவர் இயேசுவுக்கு நன்றி சொன்னார். யாருக்குப் பதிலாக இயேசுவுக்கு அவர் நன்றி சொன்னார்? ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு ஆடவர் அணியின் தலைவர் சூர்ய குமார் யாதவ் பிரதமர் மோடியின் செய்தியைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். இவர் அப்படிச் செய்யவில்லை என்று சொல்ல வருகிறார்களா? 

2024ஆம் ஆண்டில், ரோட்ரிகஸ் கார்கிம்கானா கிளப்பில் தனக்கிருந்த உறுப்பினர் உரிமையை இழந்தார், ஏனெனில் அவரது தந்தை அந்தக் கிளப் வளாகத்தைப் பயன்படுத்தி மதமாற்றங்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. (ஜெமிமாவின் தந்தையான இவான் ரோட்ரிகஸ் அத்தகைய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.) கிறிஸ்தவர்களை இழிவாக விவரிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ‘எக்ஸ்’ (X) மற்றும் பிற ஊடகங்களில் அருவருப்பான வழக்கத்துடன் வெளிவரத் தொடங்கியது.

வேறு சில எதிர்வினைகளும் இருந்தன. சிலர் ரோட்ரிகஸைப் பாராட்டுவதோடு நிறுத்திக்கொண்டார்கள். மற்றவர்கள் அதைத் தாண்டிச் சென்றார்கள். எனக்குத் தெரிந்த ஒரு கலைஞர் தனது ஃபேஸ்புக் பதிவில் பின்வரும் செய்தியைப் பதிவிட்டார்: ‘ஜெமிமா ரோட்ரிகஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு சதம் அடித்தார், இந்துத்துவத்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்தார்.’ களத்திலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள் அல்லது அவ்வாறு பாசாங்கு செய்பவர்கள், இதற்கு இப்படிப் பதிலளித்தார்கள்: ‘தயவுசெய்து விளையாட்டில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம்.’ நல்ல அறிவுரைதான். ஆனால், செப்டம்பரில் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை வென்றபோது நமது பிரதமரே ஆட்டத்தில் அரசியலைக் கலந்ததால் அந்தக் கலைஞர் அவ்வாறு செய்யத் தூண்டப்பட்டார் என்று நான் நினைத்தேன்:

நான் இங்கு நமது தலைவர்களின் விவேகத்தை கேள்வி கேட்க வரவில்லை. அதற்குப் பதிலாக, நாம் எவ்வாறு எந்த ஒரு குறிப்பிட்ட பார்வையையும் ஏற்றுக்கொள்ளத் தூண்டப்படுகிறோம் என்பதைப் பற்றிச் சொல்ல விரும்புகிறேன். நமது முடிவுகள் சரியானவை என்று நாம் பெரும்பாலும் நினைக்கிறோம். ஆனால் உளவியலாளர் ஜொனாதன் ஹைட், ‘உணர்ச்சி என்னும் வால்தான் பகுத்தறிவு என்னும் நாயை ஆட்டிப்படைக்கிறது’ என்று எச்சரித்துள்ளார். நமது உறுதிப்பாடுகள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நான் மாண்வனாக இருக்கும்போது பட்னாவில் வளர்ந்தேன். அதன் பிறகு, பின்னாளில் ஜார்க்கண்டாக மாறிவிட்ட நகரங்களில் வாழ்ந்தேன். கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய பள்ளிகளில் படித்தேன். இந்தப் பள்ளிகள் நல்ல கல்வியை வழங்கின. இருப்பினும், நான் படித்த ஒவ்வொரு நிறுவனத்திலும், அந்தப் பாதிரியார்கள் வளாகத்தை மதமாற்றங்களுக்குப் பயன்படுத்துவதாகக் குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் என்னை எச்சரித்தார்கள். இது என்னுடைய இள வயதில் என் மனதில் ஆழமாக விழுந்துவிட்டது. கிறிஸ்தவ மிஷனரிகள் பற்றி அவர்கள் சொன்னது உண்மையா, அல்லது சிறிதளவு உண்மையாக இருக்கும் ஒரு விஷயம் முழு உண்மையாகப் பொதுமைப்படுத்தப்படுகிறதா?

ஒரு பாரபட்சம் – மதவெறியாக மாறிய ஒரு சந்தேகம் – எனது அனுபவத்தைக் கறைப்படுத்தி, எனக்குள் அச்சத்தை ஏற்படுத்திய எனது குழந்தைப் பருவத்தை எண்ணி நான் வருந்துகிறேன்.

நமது சார்புகளாலும் நம்மைத் தூண்டிய தாக்கங்களாலும் வடிவமைக்கப்பட்ட நமது நம்பிக்கைகள், ஆட்ட நாயகரான ஜெமிமா ரோட்ரிகஸை நாம் எதிர்கொண்ட வழிகளைத் தீர்மானித்தன. ஜெமிமா கிறிஸ்தவர் என்றதும், ஏற்கெனவே கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்பாடுகள்பற்றி நம் காதுகளில் விழுந்திருந்த கதைகளெல்லாம் நம் நினைவுக்கு வந்துவிட்டன. அவர் தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த ஆட்டத்தை விளையாடியிருந்தார், நம்மில் சிலர் அவரது மத நம்பிக்கைக்காக அவரை அவதூறு செய்தோம். அவருக்கு உரிய அந்த முழுமையான வெற்றி உணர்வை அவரிடமிருந்து பறித்துவிட்டோம். இப்படிச் செய்ததன் மூலம், ஒரு தேசமாகவும், ஒரு இனமாகவும் நாம் உணர்ந்திருக்க வேண்டிய பெருமையை நாமே மறுத்துக்கொண்டோம் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும்.

அமிதவா குமார், ‘My Beloved Life (Aleph)’ என்ற நாவலின் ஆசிரியர்.

நன்றி: தி வயர் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share