சட்டமன்றத் தொடரின் கடைசி நாளில் எடப்பாடி வராதது ஏன்?

Published On:

| By christopher

கடந்த 6ஆம் தேதி தொடங்கிய இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, டங்ஸ்டன் சுரங்கம் விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளுக்கிடையே நேற்றுடன் (ஜனவரி 10) நிறைவடைந்தது.

இதற்கிடையே கடந்த 10ஆம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் பேசும்போது,

“பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை பொறுத்தவரையில் புகார் வந்தவுடன் அடுத்த 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கிறேன். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன். இல்லையென்றால் அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும்” என்று சவால் விட்டார். அதனை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி பொள்ளாச்சி சம்பவம் குறித்து பேரவையில் அதிமுக மற்றும் திமுக சார்பில் நேற்று காலை ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டன.

பின்னர் இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக திமுக, அதிமுக இரு கட்சியினரும் வழங்கிய ஆதாரங்களை ஆய்வு செய்ததில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் வழங்கிய ஆதாரங்களே உண்மை என்பது தெரிய வந்துள்ளது. அதையே தீர்ப்பாக வழங்குகிறேன்” என்று அறிவித்தார்.

இந்த சம்பவம் அதிமுகவிற்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், நேற்று எடப்பாடி சட்டமன்றத்திற்கு வராததற்கு காரணம் பொள்ளாச்சி விவகாரம் தான் என திமுக உறுப்பினர்கள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

மொத்தம் 6 நாட்கள் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், முதல்நாளான 6ஆம் தேதி திங்கள் கிழமையும், 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் என இரண்டு நாட்கள் மட்டுமே எடப்பாடி பேரவைக்கு வருகை தந்திருந்தார்.

உடல்நலக்குறைவு காரணமாக 7,8 மற்றும் 9ஆம் தேதிகளில் அவர் சட்டமன்றத்திற்கு வரவில்லை. 10ஆம் தேதி ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பேச இருந்தார் எடப்பாடி. அன்று காலையில் அவரை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர்களான தனபால், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பொள்ளாச்சி விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் எதுவும் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்.

ஆனால், சட்டசபையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு குறித்து எடப்பாடி நீண்ட நேரம் பேசியபோது, ஸ்டாலின் பொள்ளாச்சி சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஒருகட்டத்தில் ஸ்டாலினின் சவாலை ஏற்றுக்கொண்டார் எடப்பாடி.

அதேநேரம் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களோ, “ஜனவரி 11 ஆம் தேதி மாலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ஆலோசனைக்காகத்தான் எடப்பாடி அன்று சட்டமன்றத்துக்கு வரவில்லை. சபாநாயகர் என்ன தீர்ப்பு அளிப்பார் என்று எடப்பாடிக்கு தெரியாதா? அதற்கெல்லாம் பயந்து சட்டமன்றத்துக்கு வராமல் இருக்கும் தலைவர் அல்ல எடப்பாடி” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

7 ஆயிரம் வழக்கு கூட போடுங்க… பெரியாரை மீண்டும் சீண்டும் சீமான்

பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்!

இப்படி ஒரு பதிலா? எஸ்.என்.சுப்ரமணியனை நோஸ்கட் செய்த ஆனந்த் மஹிந்திரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share