உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு தொடர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Why did Chief Minister Stalin suddenly faint
முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 21) காலை வழக்கம் போல் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு லேசாக மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
மூத்த அமைச்சர் துரைமுருகன் உட்பட அமைச்சர்கள் பலரும் மருத்துவமனைக்கு வந்து முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து கிளம்பிய துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “முதல்வருக்கு எதுவுமில்லை. நலமாக இருக்கிறார். மாலை கூட வீடு திரும்பலாம்” என்று கூறிவிட்டு புறப்பட்டார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன ஆனது என அப்போலோ வட்டாரத்தில் விசாரித்தபோது, “லேசான மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு ரத்த பரிசோதனை, எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளபட்டன. இதில் வெர்டிகோ பிரச்சினை இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். அதாவது காதில் வெளி பகுதி,நடு பகுதி, உள் பகுதி என மூன்று பகுதிகள் இருக்கும். இதில் நடு பகுதியில் ப்ரசர் அதிகமாகும் போது மயக்கம் ஏற்படும்.
தொடர் பயணம் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்த பிரச்சினை ஏற்படும்.
ஆனால் முதல்வருக்கு இந்த பிரச்சினைதான் என்று உறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து பரிசோதனைகள் நடந்து வருகின்றன. தற்போது நலமாக இருக்கிறார்.
அனைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சை முடிந்து முதல்வர் இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்” என்கிறார்கள்.
முதல்வர் ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது திருப்பூர் பயண நிகழ்ச்சிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் முதல்வர் ஸ்டாலின் திருப்பூரில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
