படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான எம்.கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் யாதும் அறியான். நாயகனாக தினேஷ் இப்படத்தில் அறிமுகமாகிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் கேபிஒய் புகழ் ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். why cm vijay poster in yaathum ariyaan trailer?
வித்தியாசமான கதைக்களத்துடன் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘யாதும் அறியான்’ வரும் ஜூலை 18 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. அதில் 2026 ஆம் ஆண்டு விஜய் முதல்வராகி விட்டதாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனை தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கொண்டாடி வரும் நிலையில், மக்கள் மத்தியில் பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

இதுதொடர்பாக சென்னையில் இன்று (ஜூலை 10) நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ’யாதும் அறியான்’ படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.
விஜய் முதல்வராக வந்தால்…
படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எம்.கோபி கூறுகையில், “நான் விஜய் ரசிகன், சினிமாத்துறையில் பயணிக்கும் போது அனைவருக்கும் ஏற்படுவது போல தான், அவரை வைத்து ஒரு படம் இயக்க மாட்டோமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துக் கொண்டிருந்த நிலையில், 69 வது படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்துவிடப் போகிறார் என்பது அதிர்ச்சியாக இருந்தது. இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அதே சமயம், அவரைப் பற்றி பேசுவதற்கான இடம் படத்தில் அமைந்ததாலேயே அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தோம். அது முழுக்க முழுக்க கற்பனையானதே தவிர மற்றபடி அதில் வேறு எந்த அரசியல் பிரச்சாரமும் இல்லை. படம் 2026ல் நடப்பது போன்று உள்ளது. அதனை நம்பகத்தன்மையுடன் சொல்வதற்காக இப்படி செய்தோம். விஜய் முதல்வராக வந்தால் சில விசயங்களை செய்ய வேண்டும் என விரும்புவோம் அல்லவா? அப்படிதான் இலவசம் வேண்டாம் என முதல்வராகி அவர் அறிவிப்பதாக காட்டியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
விஜய் பற்றிய காட்சிகள்!
படத்தின் நாயகன் தினேஷ் பேசுகையில், “மிகப்பெரிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், சினிமாவை பொறுத்தவரை இயக்குநர் என்ன சொன்னாரோ அதை கேட்டு மட்டுமே நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக எனது பின்புலத்தை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு கடுமையாக உழைத்திருக்கிறேன்.
படத்தின் டிரைலரில் இடம் பெற்றிருந்த விஜய் பற்றிய காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரச்சாத்திற்கான விளக்கம் போல் டிரைலர் அமைந்திருப்பதாகவும் பலர் சொல்கிறார்கள். ஆனால், முதலில் என் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் வேண்டுமா? என்று நான் யோசித்தேன், தயங்கினேன். ஆனால், இயக்குநரின் கண்ணோட்டத்தை பொறுத்தவரை அந்த காட்சிகள் திரைக்கதையோடு பயணிப்பதால், ஒரு நடிகனாக அதை ஏற்றுக் கொண்டேன்” என்றார்.
