அமைச்சர் ஐ.பெரியசாமி தொகுதி அரசு கல்லூரி கட்டிட திறப்புக்கு முதல்வர் ஸ்டாலின் தேதி தரவில்லையா?

Published On:

| By Minnambalam Desk

I Periyasami

தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் அரசு கலைக் கல்லூரிக்கான கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாமல் இருப்பதால் மாணவர்கள் அவதிப்படுவதாக இந்திய மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட குழு தலைவர் J.தீபக்ராஜ், மாவட்ட செயலாளர் M.E.நிரூபன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

ADVERTISEMENT

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், ஆத்தூர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி & ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சில ஆண்டுகளாக வேறு கட்டிடங்களில் செல்பட்டு வருகின்றன.

ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி தற்பொழுது சீவல்சரகு பகுதியில் உள்ள ஜெய்னி கல்லூரி விடுதியிலும் கன்னிவாடி கலை கல்லூரி கன்னிவாடி அரசு‌ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள்ளும் செயல்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

ஆத்தூர் கல்லூரி 2022-23 கல்வி ஆண்டு முதல் அத்தனியார் கல்லூரி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கிட்டத்தட்ட 3000 மாணவர்களுக்கு மேல் பயின்று வருகின்றனர். 14 துறைகளும் செயல்படுகின்றன.

சென்ற ஆண்டு வரை இரண்டு வேளைகளாக செயல்பட்டு வந்த ஆத்தூர் கூட்டுறவு கல்லூரி (முதல் வேளை 09.00AM – 1.00PM, இரண்டாம் வேளை 01.00PM- 05.00PM). இந்த ஆண்டிலிருந்து மாணவர்களின் எண்ணிக்கை அதிகமான சூழலில் மூன்று வேளைகளாக (முதல் வேளை09.00AM – 11.00AM, இரண்டாம் வேளை11.00AM – 02.30PM, மூன்றாம் வேளை 2.30PM – 4.30PM) செயல்பட்டு வருகிறது. இது மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது.

ADVERTISEMENT

ஐந்து மணி நேரம் செயல்பட வேண்டிய கல்லூரி இரண்டு மணி நேரம் மட்டுமே செயல்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிறது. பேராசிரியர் பற்றாக்குறையும் மாணவர்களின் கல்வியில் பிரதிபலிக்கிறது. அறிவியல் துறை மாணவர்களுக்கு ஆய்வகங்கள் இல்லாததால் அவர்கள் செய்முறை தேர்வின் போது பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுறும் அபாயம் உள்ளது.

மேலும், மழைக்காலங்களில் தற்போதுள்ள கல்லூரி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்து செல்வதிலேயே சிரமம் ஏற்படுகிறது. கல்லூரிகளில் போதுமான கழிவறைகளும் இல்லை. முதல் மற்றும் மூன்றாம் வேளையில் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு இடைவேளை என்பதே கிடையாது. இரண்டாம் வேளையில் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் மதிய உணவை முறையாக முடித்துவிட்டு வருவதில் சிரமம் ஏற்படுகிறது.

கன்னிவாடி கலை கல்லூரி அரசு பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே, பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் தேவைப்படும் நிலையில் இது பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் பெரும் சிரமத்தையே ஏற்படுத்தும்.

மேற்கண்ட காரணங்களால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஆத்தூர் மற்றும் கன்னிவாடி கல்லூரிகளுக்கு தனிக்கட்டிடம் அவசியம் என்பதும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் எப்போது திறக்கப்படும் என்பதுமே கல்லூரி மாணவர்களின் கேள்வியாக உள்ளது.

ஆகையால் தமிழக அரசும், உயர்கல்வி துறையும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் (SFI), திண்டுக்கல் மாவட்டக்குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில், “முதல்வரின் தேதிக்காக காத்திருக்கும் மாணவர்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமியின் தொகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு கல்லூரி கட்டிடங்களை திறக்க ‘முதல்வர் ஸ்டாலின் தேதி தரவில்லை’ என இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share