மலேசியாவில் தமிழர்கள், மலையாளிகள், சீனர்கள், மலாய் இன மக்கள் வசிப்பது அனைவரும் அறிந்ததே. அங்கு முற்றிலும் சீன முக தோற்றம் கொண்ட ஒருவர் வேணுகோபால் என்ற பெயருடன் உலா வருவதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கொஞ்சம் உற்று நோக்கிய போதுதான், அந்த மனிதர் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது. விஷயம் என்னவென்று பார்ப்போம்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கொடாலி என்ற பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் நம்பியார். 1940 களில் இவருக்கு கேரளாவில் நிலவி வந்த சாதி மத வேற்றுமைகள் அறவே பிடிக்கவில்லை. எனவே, கேரளாவை விட்டு வெளியேறினார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் குடி பெயர்ந்தார். அங்கு, பிரிட்டனை சேர்ந்த ரப்பர் கம்பெனியில் கோவிந்தன் வேலை பார்த்தார்.
பின்னர், அங்கு ஒரு சீனப் பெண்ணை காதலித்து மணந்து கொண்டார். வெளிநாட்டில் தஞ்சமடைந்தாலும் இந்தியாவின் நினைவு அவரை வாட்டியது. இதனால், கோவிந்தன் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்திய பாணியில் பெயர் சூட்ட முடிவெடுத்தார். அந்த வகையில், தனது மகனுக்கு வேணுகோபால் என்ற பெயரை சூட்டினார். கோவிந்தனுக்கு 3 மகள்கள் உண்டு. அவர்களுக்கு முறையே அம்புஜம், குமுதம், லலிதா என்ற பெயரை வைத்தார்.
இதுதான் சீன முக மனிதருக்கு இந்தியா பாணியிலான பெயர் சூட்டப்பட்ட கதை.
தற்போது, வேணுகோபால் ஆக்ரே ஒர்க்ஸ் என்ற பெயரில் மலேசியா , சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் . தனது பெயர் குறித்து வேணுகோபால் கூறுகையில், ‘இந்தியாவை விட்டு ஒருவர் வெளியேறலாம். ஆனால், மனதை விட்டு இந்தியாவை வெளியேற்றி விட முடியாது அல்லவா? அதனால்தான் எனக்கு என் தந்தை இந்திய பாணியிலான பெயரை சூட்டியுள்ளார். இந்த பெயர் எனக்கு சூட்டப்பட்டதை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நான் எனது சகோதரிகள் அனைவரும் கண்ணூரில் சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தோம். அப்போது, எனது சீன மனைவி பாரம்பரிய கேரள சேலை அணிந்திருந்தார். ஓணம் சதயாவும் உண்டோம். அந்த நினைவுகள் என்னிடத்தில் இப்போதும் உள்ளது. இப்போது, எனது சகோதரிகள் அனைவரும் சிங்கப்பூரில் வசிக்கின்றனர்’ என்கிறார்.
தற்போது வேணுகோபாலுக்கு சீன மனைவி மற்றும் இரு மகள்கள் உள்ளனர். தந்தையை பின்பற்றி தன் மகள்களுக்கு Shakira U Ching Nambiar, laavynia Su Lin Nambiar என்று இரு நாட்டையும் நினைவுப்படுத்தும் வகையில் பெயர்களை சூட்டியுள்ளார் வேணுகோபால்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஆளுநரே பொறுப்பு : அண்ணா பல்கலை மாணவி விவகாரம் – சட்டப்பேரவையில் விவாதம்!
நடிகை ஹனிரோசுக்கு பாலியல் தொல்லை : செம்மனூர் ஜுவல்லரி அதிபருக்கு சிக்கல்!