நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஓராயிரம் பேர் திரண்டு நிற்கும் நிலையில் தலித் மக்களின் உரிமைக்கான உத்தரவுகளை செயல்படுத்திய பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ப.உ.செம்மலுக்கு ஏன் ஒருவரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பண்ருட்டி வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசியதாவது: ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரலாய் செயல்படுகிறவர் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல். இடதுசாரி சிந்தனை கொண்ட, சாதிய சமூகத்தை எதிர்த்து களமாடுகிற அய்யா கவிஞர் பழமலய்யின் அன்பு மகன்தான் நீதிபதி ப.உ.செம்மல்.
எஸ்சி/எஸ்டி வன்கொடுமை வழக்கை விசாரித்தார் நீதிபதி ப.உ.செம்மல். அவர் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி எல்லோரும் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
ஆனால் எனக்கு ஜாதி பெரியது அல்ல.. எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துவேன்.. என்னுடைய அதிகாரத்தை வைத்து செயல்படுத்துவேன் என காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த ஒரு காரணத்துக்காக, நீதிபதி ப.உ.செம்மலுக்காக அனைவரும் ஒன்று கூடிவிட்டனர். லஞ்சம் வாங்காமல்- ஜாதிய தன்மையோடு செயல்படாமல் நேர்மையாக மனச்சாட்சியுடன் தீர்ப்பு எழுதிய நீதிபதி ப.உ.செம்மல், இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மத மோதலை தூண்டிவிடும் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவாக 56 நீதிபதிகள், 12 தலைமை நீதிபதிகள் கையெழுத்திடுகின்றனர்.. நாடாளுமன்றத்திலே அமித்ஷா கொக்கரிக்கிறார்.. ஜிஆர் சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க கோரி 120 எம்.பிக்கள் கையெழுத்து போட்டு இம்பீச்மெண்ட் தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
எஸ்சி/ எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை செயல்படுத்திய சூத்திர ஜாதி நீதிபதி ப.உ.செம்மல் பணி நீக்கம் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் இருக்கிற எத்தனையோ தலித் இயக்கங்கள், தலைவர்கள், ஜாதி ஒழிப்புக்காக களமாடுகிற சிபிஎம், சிபிஐ கட்சிகள் கூட இன்னமும் நீதிபதி ப.உ.செம்மலுக்காக ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லையே.. ஆனால் ஜிஆர் சுவாமிநாதனுக்காக ஓராயிரம் ‘அவாள்கள்’ நீதிகேட்டு நிற்கின்றனர். இவ்வாறு வேல்முருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
