புத்தருக்கும் மண்டலுக்கும் அப்பால்.. பிகார் தேர்தல் இந்திய ஜனநாயகத்திற்கு ஏன் முக்கியமானவை?

Published On:

| By Minnambalam Desk

வடக்கில் பிகார் மட்டுமே பாஜக தனியாக ஆட்சிக்கு வராத ஒரே மாநிலமாகும். பிகாரை உத்தரப் பிரதேசத்தைப் போல் மாற்ற முனைகிறது பாஜக.

அஷுதோஷ் வர்ஷ்னி

விரைவில் தேர்தல் நடக்கவுள்ள பிகாரின் வரலாற்று, சமகால முக்கியத்துவத்தை மறுக்க முடியாது. சமகாலப் பிரச்சினைகள் பொதுவாகத் தேர்தல் விவாதங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. பிகாரின் பொருளாதாரத்தின் மோசமான நிலை எப்போதும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், இந்தச் செயல்பாட்டில் பிகாரின் கடந்த காலத்தின் சில மகத்தான அம்சங்களை நாம் மறந்துவிடுகிறோம். பிகாரின் வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும்.

ADVERTISEMENT

பிகாரின் பழம்பெருமைகள்

பிகாரின் வரலாற்றில் மிகவும் பிரபலமான பகுதி இதுதான். கிமு 5 ஆம் நூற்றாண்டில் புத்தகயா என்னும் இடத்தில் புத்தர் ஞானம் பெற்றார். புத்த மதம் சீனா, ஜப்பான், கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை போன்ற ஆசியாவின் பல பகுதிகளுக்கும் பரவி, உலக மதமாக மாறியது. இருப்பினும், இந்தியாவில் அதன் பரவல் காலப்போக்கில் குறைந்தது.

ADVERTISEMENT

மேலும் இரண்டு வரலாற்று அம்சங்களும் குறிப்பிடத் தக்கவை. மேற்கத்திய விவாதங்களில், கிரேக்க நகர அரசான ஏதென்ஸ் ஜனநாயகத்தின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. ஆனால், ஜனநாயகத்தை மேலும் விரிவாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் வேறு ஒன்றைக் கூறுகிறார்கள். அரசியல் விஞ்ஞானி டேவிட் ஸ்டாசேவேஜ் தனது The Decline and Rise of Democracy: A Global History from Antiquity to Today என்னும் புத்தகத்தில், “பண்டைய இந்தியாவின் குடியரசுகள்” பண்டைய கிரேக்கம், மெசபடோமியா ஆகிய நாடுகளைப் போலவே ஜனநாயகத்தின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகள் என்று விவரிக்கிறார். இந்த ஆரம்பகாலக் குடியரசுகள்தான் பிகாரில் இருந்த ‘சங்கங்கள்’ என்று அழைக்கப்படுபவை. பிகார் ஜனநாயகத்தின் தாய் என்ற கூற்றில் கணிசமான உண்மை உள்ளது. ஆகஸ்ட் மாதம் காங்கிரஸின் ‘வாக்களிக்கும் உரிமை’ யாத்திரையின்போது இது போன்ற கூற்றுகள் சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாக முன்வைக்கப்படுகின்றன.

இரண்டாவதாக, இன்று பிகாரின் தனிநபர் வருமானம் இந்தியாவில் மிகக் குறைவாக உள்ளது; அது பெரிதும் விவாதப் பொருளாக உள்ளது. ஆனால் பண்டைய காலத்தில் அதன் நிலைமை வேறு. ஏழை ராஜ்யங்கள் அல்லது ஏழைக் குடியரசுகள் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களை உருவாக்காது. கி.பி. 5ஆம் நூற்றாண்டில், குப்தப் பேரரசு பிகாரில் நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியது. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைவிட 500 ஆண்டுகளுக்கு முன்பும், இத்தாலியின் போலோக்னாவில் உள்ள ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் பிறப்பதற்கு முன்பும் நிறுவப்பட்டது. இது சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடிய வரலாற்றுச் சாதனை அல்ல. பிகாரின் நவீன வரலாற்றைப் பொறுத்தவரை, குறைந்தது நான்கு அம்சங்கள் குறிப்பிடத்தக்கவை. அவற்றில் இரண்டு, மிகவும் சமகாலப் பொருத்தத்தைக் கொண்டுள்ளன.

ADVERTISEMENT

சத்தியாகிரகம் முதல் மண்டல் வரை

காந்தி தன்னுடைய நாடு தழுவிய ஒத்துழையாமை இயக்கங்களால் ஆங்கிலேயர்களை உலுக்குவதற்கு முன்பு, 1917ஆம் ஆண்டில் பிகாரின் சம்பரானில் சிறிய அளவிலான சத்தியாகிரகத்தை முதன்முதலில் பரிசோதித்தார். இவ்வாறு, பிகாரை இந்தியாவில் காந்திய சத்தியாகிரகத்தின் பிறப்பிடமாகக் கருதலாம்.

இந்தியாவின் நவீன வரலாற்றில் முக்கியமான ஆளுமையான ஜெயபிரகாஷ் நாராயணன் பிகாரில் பிறந்தவர். 1970களின் முற்பகுதியில் அவர் இந்திரா காந்தியின் ஆட்சிக்கு எதிராக சக்திவாய்ந்த இயக்கத்தை வழிநடத்தினார். 1977இல் நெருக்கடி நிலை இந்திராவின் தோல்வியுடன் முடிவடைந்தபோது, தில்லியில் முதல் காங்கிரஸ் அல்லாத அரசாங்கத்தை அமைப்பதிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார். உள் முரண்பாடுகள் காரணமாக அந்த அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, ஆனால் அது இந்தியாவின் ஜனநாயக நம்பகத்தன்மையையும் உயிர்ப்பையும் அதிகரித்தது.

மண்டல் அரசியலும் பாஜகவின் சவாலும்

இறுதியாக, இந்தத் தேர்தலுடன் நெருங்கிய தொடர்புடைய நவீன பிகாரின் மற்ற இரண்டு அம்சங்களைப் பார்ப்போம்.

இந்தி பேசும் வடக்கில், பிகார் மட்டுமே பாஜக தனியாக ஆட்சிக்கு வராத ஒரே மாநிலம் என்பது அவ்வளவாகக் கவனிக்கப்படுவதில்லை. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பாஜகவின் இந்து தேசியவாதம் மண்டலின் சாதி அரசியலை முறியடித்தது. ஆனால் பிகாரில் ஒடுக்கப்பட்ட சாதியினரின் அரசியல் ஆழமாக வேரூன்றியுள்ளதால் இந்து தேசியவாதத்தால் இதுவரை அதனுடன் கூட்டணியை மட்டுமே உருவாக்க முடிந்தது. பாஜக பிகாரைத் தனியாக ஆளும் கட்சியாக இருக்க விரும்புகிறது. ஆனால் அது இந்தத் தேர்தலுக்குப் பிறகும் நடக்க வாய்ப்பில்லை.

கர்பூரி தாக்கூர்

வரலாற்று ரீதியாகக் கீழ் மட்டத்திலுள்ள சாதிகளுக்கு அதிகாரமளிக்கும் மண்டல் பாணி அரசியல், 1910களின் பிற்பகுதியில் தென் இந்தியாவில், குறிப்பாகப் பழைய மெட்ராஸ் மாகாணத்தில் பிறந்தது. வட இந்தியாவில், அத்தகைய அரசியல் வெளிப்படுவதற்கு மேலும் ஐந்தோ அல்லது ஆறோ தசாப்தங்கள் ஆனது. அதன் பிறப்பிடமும் பிகார்தான்.

பிகாரில், கர்பூரி தாக்கூர் மண்டல் அரசியலுக்குத் தலைமை தாங்கினார். 1978இல் அவர் முதலமைச்சராக இருந்தபோது பட்டியல் சாதியினர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு மேல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்டார். இது அரசு வேலைகளில் 26 சதவீத இட ஒதுக்கீட்டு முறை என்று அழைக்கப்பட்டது. இது பெரும்பாலும், இதர பிற்படுத்தப்பட்டவர்களை வேலைவாய்ப்பு ஒதுக்கீடு மூலம் உயர்த்தும் நோக்கம் கொண்டது.

கர்பூரி தாக்கூர், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகிய இருவரின் வழிகாட்டியாகக் கருதப்படுகிறார். பிறகு இவ்ர்கள் இருவரும் பிகாரில் அதிகாரத்திற்காகத் தீவிர போட்டியாளர்களாக மாறியது வேறு கதை. தாக்கூரின் அரசியல் அவர் முதலமைச்சராக இருந்த காலத்திற்குப் பிறகும் தொடர்ந்தது என்பதுதான் முக்கியம். லாலு பிரசாத், நிதிஷ் குமார் ஆட்சியின் கீழ், 35 ஆண்டுகளில் இந்த இட ஒதுக்கீட்டு முறை நிறுவனமயமாக்கப்பட்டு நிலைபெற்றுவிட்டது.

பாஜக உ.பி.யில் மண்டல் அரசியலின் பிடியை உடைத்திருக்கலாம், ஆனால் பிகாரில் அவ்வாறு செய்ய முடியவில்லை. மோடி அரசாங்கம் கர்பூரி தாக்கூரின் மறைவுக்குப் பின் அவருக்கு அளித்த பாரத ரத்னா விருது (ஜனவரி 2024இல் வழங்கப்பட்டது) மண்டல் அரசியலுடன் கூட்டுறவை வளர்க்கும் முயற்சியாகும். இது ஒருபுறம் நிதிஷ் குமாருடனான கூட்டணியை உறுதிப்படுத்துவதையும் மற்றொருபுறம் பாஜக ஓபிசிகள்மீதும் அக்கறை கொள்கிறது என்பதைக் காட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது.

ஜனநாயகத்திற்குப் பின்னடைவு?

வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (Special Intensive Revision- SIR) என்ற முக்கியமான புதிய பிரச்சினை உள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைச் ‘சுத்தப்படுத்த’ முயற்சிக்கும் முதல் மாநிலம் பிகார். ஜனநாயக நாட்டில் குடிமக்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமை உண்டு என்று தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் கூறுவதை மறுக்க இயலாது. ஆனால் இந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் விதத்தில் உள்ள ஆழமான சிக்கலைத்தான் விவாதிக்க வேண்டும்.

SIR என்பது நடைமுறையில் வாக்குரிமை மறுப்புத் திட்டமாக மாறியுள்ளது. இது ஆளுபவருக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ள சமூகங்களின் வாக்களிக்கும் உரிமைகளை நீக்குவது அல்லது கடுமையாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் வாக்குரிமை மறுப்புப் பிரச்சினையை ஓரளவு நிவர்த்தி செய்துள்ளன. ஆனால் பெரிய எண்ணிக்கையில் வாக்காளர்கள் இன்னமும் விலக்கப்பட்டுள்ளனர். பிகாருக்குப் பிறகு மற்ற பல மாநிலங்களுக்கும் SIR திட்டத்தை நீட்டிக்கத் தேர்தல் ஆணையம் விரும்புகிறது.

இந்த நடவடிக்கை உலக அளவில் வேகமாக வளர்ந்துவரும் ஜனநாயகப் பின்னடைவு பற்றிய ஆய்வுகளுடன் நேரடியாகப் பொருந்துகிறது. பொதுவாக, ஜனநாயகப் பின்னடைவு என்பது நிர்வாகத்துறை, சுயாதீன நிறுவனங்களான – நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையங்கள், உளவுத் துறைகள், வரி அதிகாரிகள், மத்திய வங்கிகள், ஊடகங்கள், பல்கலைக்கழகங்கள் – ஆகியவற்றின் அதிகாரத்தையும் சுயாட்சியையும் குறைக்க முற்படுவதில் தொடங்குகிறது. ஜனநாயகத்தில் இவை நிர்வாக அதிகாரத்தின் கட்டுப்பாடற்ற பரவலுக்கு உதவும் பதற்றமான நிறுவனங்களாக இருக்கக் கூடாது. பல்வேறு நிறுவன ரீதியாகப் பொருத்தமான வழிகளில், நிர்வாகத்தின் மீறுதலைத் தடுப்பதே அவற்றின் முதன்மைப் பொறுப்பாகும்.

நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையங்கள் போன்ற அமைப்புகளைப் பலவீனப்படுத்திய பிறகு, இந்தச் செயல்முறை தேர்தல்களில் செயல்படுகிறது என்பதும் நமக்குத் தெரியும். குடியுரிமை, வாக்களிக்கும் உரிமைகள் பற்றிய விதிகளையும் சட்டங்களையும் இயற்றுவதன் மூலம் ஆளுபவருக்குச் சாதகமாகத் தேர்தல் களத்தை மாற்ற இந்தச் செயல்முறை முற்படுகிறது. இந்தியா இப்போது ஜனநாயகப் பின்னடைவின் இந்தக் கட்டத்தில் பயணம் செய்துகொண்டிருக்கிறது.

ஆனால், பின்னடைவு எப்படித் தடுக்கப்படலாம் என்பதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. 2022ஆம் ஆண்டில் லாரா காம்போவா என்ற அரசியல் விஞ்ஞானி, Resisting Backsliding: Opposition Strategies Against the Erosion of Democracy என்ற தனது ஆழமான ஆய்வு நூலில், போலந்தில் (பின்னர் பிரேசிலிலும்) நடந்ததுபோல மூன்று அம்ச உத்தி சிறப்பாகச் செயல்படுகிறது என்று காட்டுகிறார். எதிர்க்கட்சிகள் (1) வன்முறையற்ற போராட்டங்கள், (2) நீதிமன்றங்கள் மூலம் சட்ட நடவடிக்கை, (3) போராட்டத்தை நடத்துவதற்குத் தேர்தல் உத்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது, ஜனநாயக உயிர்ப்பை மீட்டெடுக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

எனவே, பிகார் தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சிக்கான மற்றொரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன: இந்தத் தேர்தல்கள் ஜனநாயகப் பின்னடைவை ஆழப்படுத்துமா, அல்லது கீழ்நோக்கிய சறுக்கலைத் தடுக்குமா?

அஷுதோஷ் வர்ஷ்னி, பிரவுன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகள் மற்றும் சமூக அறிவியல் துறையின் பேராசிரியராகவும், அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியராகவும் உள்ளார்.

நன்றி: தி பிரிண்ட் இணைய இதழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share