மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கைக் கதையைத் திரைப்படமாக எடுக்கும் ‘தலைவி’ திரைப்படத்தில் எம்ஜிஆர் கேரக்டரில் நடித்திருக்கிறார் அரவிந்த்சாமி. இவர் நடித்துள்ள சில காட்சிகள் இடம்பெற்ற வீடியோ வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எம்ஜிஆர் போலவே சில மேனரிசங்களை அரவிந்த்சாமி செய்திருந்தது எம்ஜிஆர் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
யாருமே யோசித்துப் பார்க்காத இந்த அரவிந்த்சாமி டு எம்ஜிஆர் என்ற மாற்றத்தை யோசித்தது குறித்து இயக்குநர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் “கங்கணா ரணாவத் அவர்களை ஜெயலலிதா கேரக்டருக்கு கொண்டுவந்த பிறகு, எம்ஜிஆர் கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தோம். பல கலைஞர்களைச் சந்தித்து, இதற்கான வேலைகளைச் செய்தோம். கடைசியில், அரவிந்த்சாமி ஏன் இதைச் செய்யக்கூடாது என்ற யோசனை வந்தது. சில காரணங்கள் அவரை நடிக்க வைக்கலாம் என்று யோசிக்க வைத்தன. ஆனால், இன்று படத்தைப் பார்க்கும்போது எங்களது முடிவு எத்தனை சரியானது என்று தெரிகிறது. நாங்கள் படத்துக்காகக் கொடுத்த ஐடியாக்களைவிட, ஒவ்வொரு நாளும் எம்ஜிஆர் பற்றிய தகவல்களைச் சேகரித்திருக்கிறார் அரவிந்த்சாமி. சின்னச் சின்ன அசைவுகள் வரை குறிப்பு எடுத்து ஒவ்வொரு காட்சியிலும் எம்ஜிஆருக்கு நெருக்கமாகச் செல்ல முயற்சி செய்திருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படம் குறித்து விளக்கியுள்ள விஜய், “தமிழ்நாடு இன்று இருக்கும் நிலைக்குக் காரணமாக இருந்ததில் முக்கியமானவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவரது வாழ்க்கைக் கதையை ரசிகர்களுக்குச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும். அவர்களது நடிப்பாற்றலுக்கும், தனித்துவமான திறமைகளுக்கும் ஏற்ப இன்றைய கலைஞர்களைத் தேர்வு செய்வதுதான் மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
தலைவி திரைப்படம் இரண்டு பாகங்களாகத் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் வரை முதல் பாகத்திலும், அதன் பிறகான கதை இரண்டாம் பாகத்திலுமாக வெளியிட முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. வருகிற ஜூன் 26ஆம் தேதி தலைவி திரைப்படம் ரிலீஸாகிறது.
