பாலைய்யா என்று எழுச்சியோடு தெலுங்கு சினிமாவில் அழைக்கப்படும் என் டி ஆர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி இந்தியா முழுக்க இந்துத்வா பக்தர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம் அகண்டா 2.
புராணம், பக்தி, சனாதனம், இந்துத்வா கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும்படி (இப்போது தெலுங்கு சினிமா முழுக்க அதைத்தான் செய்கிறது) எடுக்கப்பட்ட அகண்டா 2 படத்தை சினிமா ரசிகர்களுக்கு இணையாக சனாதனப் பற்றாளர்களும் எதிர்பார்த்தார்கள்.
நேற்று இரவு ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடக்க இருந்த பிரிமியர் ஷோ எல்லோரும் அதிர்ச்சி அடையும் விதமாக ரத்து செய்யப்பட்டது.
கேட்டபோது ”தொழில்நுட்பக் கோளாறுதான். அமெரிக்காவில் ஆரம்பக் காட்சி கண்டிப்பாக ஓடி விடும் ”என்றார்கள். அப்புறம் அதுவும் கேன்சல் ஆனது.
”அதெல்லாம் ஒன்றும் இல்லை இன்று காலை கண்டிப்பாக ரிலீஸ் ஆகும்.” என்றார்கள். ஆனால் படக்குழுவே ரிலீஸ் இல்லை என்று அறிவித்தது.
இதை எழுதும் நிமிடம் வரை ரிலீஸ் ஆகவில்லை.
‘அப்படி என்னப்பா உலகத்தில் இல்லாத ஓவிய தொழில்நுட்பக் கோளாறு?’ என்று கேட்டால்… ”ஹிஹிஹி..! பண நுட்பக் கோளாறுதான்” என்கிறார்கள்.
படம் எடுத்த 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் ஏரோஸ் என்ற நிறுவனத்துக்கு, தர்ட்டி குரோர் ப்ளஸ் ரூபாய் பணம் தர வேண்டுமாம். அது முடியாததால் ரிலீஸ் செய்ய தடை என்கிறார்கள்.
”பாலைய்யா படம் எதுவும் இப்படி ஒரு பிரச்னையில் சிக்கியதாக நினைவே இல்லை” என்கிறார்கள் தெலுங்கு பத்திரிக்கையாளர்கள். அதுவும் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என்று ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக இருந்த படம் — பாலைய்யா தனது படத்தின் புரமோஷனுக்காக முதன் முதலாக சென்னை வரை வந்து போன படம் — ரிலீஸ் ஆகவில்லை என்பது உண்மையிலேயே பாலைய்யாவுக்கு புது அனுபவம்தான் என்கிறார்கள்.
இன்னொரு பக்கம்.. பாலையாவுக்கு முப்பது கோடி எல்லாம் முட்டைக் கோஸ் வாங்கும் காசு. அதனால் ஏன் படம் நிற்கிறது என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்.
திருப்பரங்குன்றம் என்றாலும் சரி, தெலுங்கு சினிமா என்றாலும் சரி… இந்துத்வா என்றாலே வில்லங்கம்தானோ?!
— ராஜ திருமகன்
