திருப்பூரில் அரசு பள்ளி மாணவிகள், இன்ஸ்டாகிராமில் யார் கெத்து என்ற போட்டியில் நடுரோட்டில் சண்டை போட்ட காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. Govt School Girls Tiruppur
திருப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ஒரு குழுவை தொடங்கி பதிவுகளைப் போட்டு வந்துள்ளனர். இவர்களைப் போல திருப்பூரை அடுத்த கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இன்ஸ்டாவில் ஒரு குழுவை தொடங்கி பதிவுகளை போட்டிருக்கின்றனர்.
இந்த இரு பள்ளி மாணவிகளிடையேயும் இன்ஸ்டாவில் “யார் பெரிய ஆள்?” என்ற சண்டை நடந்துள்ளது. இந்த சண்டை இன்ஸ்டாவில் முற்றியிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் நகரத்தில் உள்ள அரசு பள்ளிகள் மாணவிகள் குழுவாக 10 கிமீ தொலைவில் உள்ள கணபதிபாளையம் சென்று, அந்த பகுதி அரசு பள்ளி மாணவிகளுடன் நேருக்கு நேராகவும் சண்டை போட்டுள்ளனர். நடுரோட்டில் மாணவிகளிடையே நடந்த இந்த சண்டை அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. இதிலும் சில மாணவிகள் முகத்தை மூடிக் கொண்டு சண்டை போட்ட காட்சிகளும் அரங்கேறியது. மாணவிகளின் இந்த சண்டை பற்றி போலீசுக்கும் பொதுமக்கள் தகவல் தந்தனர்.
இதனையடுத்து நடுரோட்டில் சண்டை போட்ட அரசு பள்ளி மாணவிகள் அனைவரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக இரு பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் குழு கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. திருப்பூரில் நடுரோட்டில் அரசு பள்ளி மாணவிகள், இன்ஸ்டா பதிவுகளுக்காக சண்டை போட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.