தயாரிப்பாளர் தேர்தல்: தலைவர் மகுடம் யாருக்கு?

Published On:

| By christopher

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 30ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெற உள்ளது.

தலைவர், செயலாளர்கள், துணை தலைவர்கள், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 33 பேரை வாக்குரிமை உள்ள 1,409 தயாரிப்பாளர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும். 

ADVERTISEMENT

இதற்காக 98 தயாரிப்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் தலைவர் பதவி முக்கியமானது என்பதால் கடுமையான போட்டி நிலவுகிறது. 

கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி உதவியுடன் தேர்தல் செலவுகளை செய்துவரும் தற்போதைய தலைவர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி ராமநாராயணன் தயாரிப்பாளர்கள் நலன் காக்கும் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ADVERTISEMENT

தயாரிப்பாளர்கள் உரிமை காக்கும் அணி சார்பில் தற்போதைய செயலாளர் மன்னன் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

பாரம்பரியமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்த நலனுக்காக அடமானம் வைத்துவிட்டார். கடுமையான கடன் நெருக்கடி, அவரால் தயாரிக்க முடியாமல் கைவிடப்பட்ட ‘சங்கமித்ரா’ வரலாற்று படத்திற்காக செலவு செய்த 10 கோடி ரூபாய் பணத்தை முரளி ராமசாமிக்கு கொடுத்து படத்தை தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துக்கொள்கிறோம் என லைகா நிறுவனம் கூறியுள்ளது.

ADVERTISEMENT
tamil producer council election

அதனால் தேர்தல் செலவுக்கு பெரும் நிதியை வழங்கும் லைகா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தமிழ்குமரன், தேர்தலுக்கு பின் முரளி ராமசாமிக்கு படத்தயாரிப்புக்கு உதவி செய்வதாக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் உத்தரவாதம் கொடுத்ததால் அந்நிறுவனத்தின் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இருவரையும் துணை தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக களமிறக்கியுள்ளார் முரளி ராமசாமி. 

tamil producer council election

தமிழ் சினிமாவை படிப்படியாக ஆக்கிரமித்து வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் முரளி ராமசாமி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் நலனுக்காக எப்படி பணியாற்றுவார்.

அதனால் முரளிராமசாமியும், அவரது தலைமையிலான அணியும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மன்னன் தலைமையிலான அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

எளிதில் தயாரிப்பாளர்களால் அணுக முடியாதவர்கள் தலைவராகவும், துணை தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களை தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்காக எப்படி அணுக முடியும் என்று மன்னன் அணியை ஆதரிக்கும் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கேள்வி எழுப்பி, கார்ப்பரேட்டுகளுக்கும்-தயாரிப்பாளர்களுக்குமான போராட்டம் என பிரச்சார கூட்டங்களில் பேசி மன்னன் அணியினருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

கடந்த இருவாரங்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் மத்தியில் இது கடுமையான விவாத பொருளாக மாறி மன்னன் தலைமையிலான அணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

முரளி ராமசாமி தலைமையிலான அணி, ஆளும் அரசாங்க முதல்வருடன் இருக்கும் நெருக்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாக்காளர்களுக்கு வழங்கும் அன்பளிப்புகள் வாக்குகளாக மாறிவிடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். திமுக தலைமையிலான அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை தலைவராக அமர வைத்துவிடும் என்கிற நம்பிக்கையில் முரளி ராமசாமி இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

அதனால்தான் ஆளும் அரசாங்கத்தின் ஆதரவும், கருணை பார்வையும் தங்களுக்கு மட்டுமே கிடைக்கும். நாங்கள் வெற்றி பெற்றால்தான் சிறு முதலீட்டு படங்களுக்கான மானியம், வீட்டு வசதி எல்லாம் கிடைக்கும் என்று கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

tamil producer council election

ஆனால் ஆளும் திமுக அரசு தரப்பில் யாரையும் ஆதரிப்பதில்லை, எந்த அணி வெற்றிபெற்றாலும் வழக்கம்போல முதல்வரை சந்திப்பது, மனு கொடுப்பது என்பது மாறப்போவது இல்லை. அதனால் ஒரு சார்புநிலை அல்லது முரளி ராமசாமிக்காக அரசு அதிகாரத்தை பயன்படுத்த போவதில்லை என்று திமுக தரப்பில் தயாரிப்பாளர்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கைப்பற்ற முயற்சிக்கும் லைகா, ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மன்னனை வெற்றிபெற வைக்க மறைமுகமாக வேலை செய்வதுடன்,  மன்னனுக்கு தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்திருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தலைவராக வெற்றிபெற்று விட வேண்டும் என தற்போதைய தலைவர் முரளி ராமசாமி போராடுகிறார். அவரது கடந்த கால உறுதியற்ற சங்க செயல்பாடுகள் அவருக்கு பலவீனமாகி அதுவே மன்னனுக்கு வலிமையை கூட்டியுள்ளது.

கடந்த தேர்தலில் முரளி ராமசாமி அணி வாக்காளர்களுக்கு தேர்தலுக்கு முதல் நாள் சுமார் 10,000 ம் மதிப்புள்ள தொலைக்காட்சி வழங்கினார்கள். இந்த முறை அதை விட அதிகமாக, கரன்சியாக கொடுத்துவிட முயற்சிப்பதாக கூறுகின்றனர். மன்னன் அணி இதனை எப்படி எதிர்கொள்வது என்பதில் தீவிர ஆலோசனையில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி தலைவர் பதவிக்கு மன்னன் பக்கமே ஆதரவு சூறாவளிக்காற்று அடிப்பதாக கூறுகின்றனர்.

இராமானுஜம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது சரியா?: அண்ணாமலை பதில்

பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சாதகமான தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share