ஆகஸ்டு 13 ஆம் தேதி மதுரையில் நிதியமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பாஜகவினர் தாக்கிய சம்பவம் தொடர்ந்து பல தரப்பினராலும் கண்டிக்கப்பட்டு வருகிறது.
இந்த வகையில் திமுக சுற்றுச் சூழல் அணிச் செயலாளரும் , காங்கயம் காளைகள் ஆர்வலருமான கார்த்திகேய சிவசேனாபதி பிடிஆரின் குடும்ப பாரம்பரியத்தை சுட்டிக் காட்டி பாஜகவினருக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இன்று (ஆகஸ்டு 14) அவர் தனது சமூக தளப் பக்கத்தில்,
“மிகப்பெரிய ஆன்மீக குடும்பத்தில் இருந்து வந்த அமைச்சரின் தேசியக்கொடி கட்டிய கார் மீது செருப்பு வீசுகிறீர்களே… இதுதான் உங்கள் ஆன்மீகமா? அவரது தாத்தா யார் தெரியுமா?
ஐயப்பன் கோவில் இருக்கும் காட்டில் மரங்களைக் கடத்தல் தொழில் செய்து வந்த ஒரு கும்பல், கோவில் இருப்பதால் பக்தர்களின் நடமாட்டத்தால், நமது தொழிலுக்கு இடையூறாக உள்ளது என்று எண்ணி கோவிலையும், மூலவர் சிலையையும் சேதப்படுத்தின.
பக்தர்கள் ஐயப்பன் கோவில் நகைகளை பராமரித்து வரும் ராஜ குடும்பத்திடம் நிலைமை யை சொல்லி கோவிலை புனரமைத்து தருமாறு வேண்ட, அவர்கள் எங்களால் இயலாது எனக் கைவிரித்து விட…. அன்றைய சென்னை மாகாணத்தில் இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து இருந்தது.
இடுக்கி தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, சென்னை மாகாணத்தில் அறநிலையத்துறை அமைச்சராக பணியாற்றிய இன்றைய நிதி அமைச்சரின் தாத்தா P.T. ராஜன் அவர்களிடம் முறையிட… அரசு விதிகள் இடம் கொடுக்காத காரணத்தால், சொந்த செலவில் ஐயப்பன் கோவிலில் புனரமைத்து மூலவர் சிலையையும் செய்து தந்தார்.
அந்த சிலையை தமிழகம் முழுக்க ஊர்வலமாக கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தார்.

இதனால்தான்தான் ஐயப்ப வழிபாடு தமிழ்நாட்டில் அதிகமானது. இந்த வரலாறு எல்லாம் உங்களுக்கு தெரியுமா? இப்படிப்பட்ட பாரம்பரியமிக்க ஆன்மீக குடும்பத்தில் இருந்து வந்த ஒரு அமைச்சரின் மீது செருப்பு வீசுகிறீர்கள். நீங்கள் கற்றுக் கொண்ட ஆன்மிகம் இதுதானா?
சென்னை மாகாணத்தை கட்டியாண்ட பரம்பரையின் ரத்தம், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தங்க மூலவர் சிலையை தானமாக கொடுத்த வள்ளலின் பேரன், பார்ப்பனன் அல்லாத மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலுக்கு சொந்தகாரன் தான் இந்த பி.டி.ஆர்.
எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை, வரி இல்லாத பட்ஜெட்டை பத்து மணித்துளிகள் போடும் வல்லமை பெற்றவர். அரசு அதிகாரிகளின் கொட்டத்தை அடக்கியவர். பல கோடி மதிப்புள்ள பரம்பரைச்சொத்து. 1975ல் திமுகவினரை தேடி தேடி கைது செய்த காவல்துறை மதுரையில் பழனிவேல் ராஜன் வீட்டு பக்கத்தில் கூட செல்லவில்லை.

ஏழையின் அன்னவஸ்திரத்திற்கு அட்சதை போடும் பரம்பரையின் வாரிசு. சிங்கப்பூரில் #chartered_standard நிறுவனத்தில் MDயாக பணியாற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மாத வருமானம் 19 லட்சம்.

தலைவர் கலைஞரின் சொல் கேட்டு மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு முதல் வெற்றியை பதிவு செய்த அண்ணன் பழனிவேல் தியாகராஜனின் நடவடிக்கையின் மூலம் இன்றைய தமிழகத்தின் வருவாய் சுமார் 40,000 கோடியாக உள்ளது..மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். ஆளும் ஒன்றிய அரசின் பொருளாதார தோல்விகளை மக்களிடம் சொல்லி இன்று அவப்பெயரை சந்திக்கிறார்.

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு துளியளவு ஐயமில்லாமல் பதிலடி கொடுக்கிறார்..அவரிடம் இருக்கும் வசதி வாய்ப்புகளை எல்லாம் விட்டு ஏழைமக்களின் கண்ணீரைத் துடைக்கும் ஒரு சாமானிய நிதியமைச்சரை இந்த தமிழகம் பெற்றதற்கு என்ன தவம் செய்ததோ தெரியவில்லை..பல நாள் கனவு ஒரு நாள் நிறைவேறும் என்பதனை மெய்ப்பித்து காட்டியவர் தான் பி.டி.ஆர்” என்று குறிப்பிட்டுள்ளார் சிவசேனாபதி.
–வேந்தன்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா: வீல் சேரில் இருந்தபடியே விமான சேவை நடத்தியவர்!