ADVERTISEMENT

அம்பேத்கரைத் தோற்கடித்தது யார்?

Published On:

| By Minnambalam

அரசமைப்புச் சட்ட 75ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு விவாதத்தில் பேசிய பாஜகவினர் பலரும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

ADVERTISEMENT

1) இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கரைத் தோற்கடித்தது காங்கிரஸ் கட்சி தான் என்பது ஒரு குற்றச்சாட்டு.
2) ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பதவி வகித்த அம்பேத்கர் ராஜினாமா செய்வதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல… நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பல ஆண்டுகளாக இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜகவினர் கூறி வருகின்றனர்.

ADVERTISEMENT

இவற்றைச் சரியான விதத்தில் காங்கிரஸ் மறுக்காத காரணத்தால் அது உண்மைதான் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இந்த விவாதத்தின்போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்க வேண்டும். ஆனால், ஏனோ அந்த வாய்ப்பைக் காங்கிரஸ் தவற விட்டுவிட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் அம்பேத்கர் பம்பாய் வடக்கு தனித் தொகுதியில் போட்டியிட்டார். அதுவோர் இரட்டை உறுப்பினர் தொகுதியாகும். தனித் தொகுதியும் பொதுத் தொகுதியும் இணைந்த அந்தத் தொகுதியில் வாக்காளர்கள் இரண்டு வாக்குகளை செலுத்தலாம். ஒரு வாக்கு தனித்தொகுதியில் போட்டியிடுபவருக்கும் இன்னொரு வாக்கு பொதுத் தொகுதியில் போட்டியிடுபவருக்கும் அளிக்க வேண்டும். இரண்டு வாக்குகளையும் ஒருவருக்கே அளித்தால் அதில் ஒரு வாக்கு செல்லாததாக ஆகிவிடும்.

ADVERTISEMENT

சுதந்திரம் அடைந்து அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின்புதான் வயது வந்தோருக்கான வாக்குரிமை அளிக்கப்பட்டது. முதல் பொதுத் தேர்தல் என்பதால் வாக்காளர்களுக்குத் தேர்தல் முறை குறித்த விவரம் போதுமான அளவில் தெரியவில்லை. அப்போதிருந்த மிகவும் குறைந்த கல்வி நிலையில் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருவதே பெரும் சவாலாக இருந்தது. இந்தத் தேர்தலில் அம்பேத்கரின் ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன் அஷோக் மேத்தாவின் தலைமையிலான சோஷலிஸ்ட் கட்சியோடு கூட்டு சேர்ந்து போட்டியிட்டது. இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான இந்தத் தொகுதியில் எட்டு பேர் போட்டியிட்டனர். அவர்களில் இருவர் சுயேச்சைகள். பொதுத் தொகுதியில் சோஷலிஸ்ட் கட்சி சார்பில் அசோக் மேத்தாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ்.ஏ.டாங்கேவும் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் வித்தால் பாலகிருஷ்ண காந்தி என்பவர் போட்டியிட்டார்.

அம்பேத்கரை எதிர்த்து அவரோடு நீண்ட காலம் இணைந்து பணிபுரிந்த நாராயண் சடோல்பா கஜ்ரோல்கர் என்பவரை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அம்பேத்கர் 1920-களில் துவக்கி நடத்திய ‘பகிஷ்கிருத் ஹித்தகாரிணி சபா’வில் அவரோடு இணைந்து செயல்பட்டவர்தான் கஜ்ரோல்கர். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்.

1952 ஜனவரி 11 அன்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானபோது அம்பேத்கர் 1,23,576 வாக்குகளும், கஜ்ரோல்கர் 1,38,137 வாக்குகளும் பெற்றிருந்தனர். அம்பேத்கர் வெற்றி வாய்ப்பை இழந்தார். பொதுத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான விதால் பாலகிருஷ்ண காந்தி 1,49,138 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அசோக் மேத்தா 1,39,741 வாக்குகள் பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டாங்கே 96,755 வாக்குகள் மட்டுமே பெற்றார். (Statistical Report on General Elections, 1951,the first Lok sabha volume I, (National and State Abstracts & Detailed results)Election Commission of India, New Delhi)

கஜ்ரோல்கர் காங்கிரஸ் வேட்பாளர் என்றாலும் அம்பேத்கர் தோற்றதற்குக் காங்கிரஸ் கட்சி காரணமல்ல. அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டாங்கே செய்த பிரச்சாரமே அதற்குக் காரணம். அம்பேத்கரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக டாங்கே இரட்டை உறுப்பினர் தொகுதியான அந்தத் தொகுதியில் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட தனக்கே இரண்டு வாக்குகளையும் செலுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்தார். அங்கு போட்டியிட்ட இன்னொரு வேட்பாளரான கோபால் தேஷ்முக் என்பவரும் அப்படியே பிரச்சாரம் செய்தார். அவ்வாறு இரண்டு வாக்குகளையும் ஒருவருக்கே செலுத்தினால் ஒரு வாக்கு செல்லாததாகிவிடும் என்பது டாங்கேவுக்கும், தேஷ்முக்குக்கும் நன்றாகத் தெரியும். எனினும், அம்பேத்கருக்கு அந்த வாக்குகள் சென்று அவர் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் இருவரும் அவ்வாறு பிரச்சாரம் செய்தனர்.  

‘பிராமண கம்யூனிஸ்ட்’ என்று அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட டாங்கே, அம்பேத்கரைத் தொடக்க காலத்திலிருந்தே எதிர்த்தவர். அம்பேத்கர் சுதந்திரத் தொழிலாளர் கட்சியை நடத்திக்கொண்டிருந்த காலத்திலும் அம்பேத்கருக்கு எதிராகச் செயல்பட்டவர். அவர் அம்பேத்கரைத் தோற்கடிக்க நினைத்தது அவரே செய்த முடிவு என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனால், டாங்கேவும் சாவர்க்கரும் கூட்டு சேர்ந்து கொண்டுதான் தன்னைத் தோற்கடித்தார்கள் என்று அம்பேத்கர் தனது நண்பர் கமலகாந்த் சித்ரே என்பவருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

1952ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் எழுதிய கடிதத்தில் “டாங்கேவும் சாவர்க்கரும் சேர்ந்து சதி செய்து என்னைத் தோற்கடித்தார்கள். காஷ்மீர் குறித்து நான் சொன்ன கருத்து ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் அவர்கள் என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்” என அம்பேத்கர் குறிப்பிட்டு இருக்கிறார். டாங்கே செய்த பிரச்சாரம் தேர்தல் நெறிமுறைகளுக்கு முரணானது என்பதால் தேர்தல் ஆணையத்தில் அம்பேத்கர் 23.04.1952 அன்று டாங்கேவுக்கு எதிராகப் புகார் செய்தார்.

“டாங்கேவின் பிரச்சாரத்தால் இரண்டு வாக்குகளையும் அவருக்கே அளித்து அதனால் செல்லாது போன வாக்குகளின் எண்ணிக்கை 39,000. டாங்கே அவ்வாறு வாக்குகளைச் செல்லாமல் ஆக்காதிருந்தால் அந்த வாக்குகளில் பாதியாவது எனக்குக் கிடைத்திருக்கும். நான் வெற்றி பெற்றிருப்பேன்” என்று அம்பேத்கர் வாதிட்டார்.

“ஒரே வேட்பாளருக்கு இரண்டு வாக்குகளையும் அளித்தால் அதில் ஒரு வாக்கு செல்லாமல் போய்விடும் என்பது டாங்கேவுக்குத் தெரியும். தெரிந்தும் அவர் இரண்டு வாக்குகளையும் தனக்கே அளியுங்கள் எனப் பிரச்சாரம் செய்தது தேர்தல் முறைகேட்டின்கீழ் வரும். எனவே தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்”  என்ற அம்பேத்கரின் வாதத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. அவரது மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. (Anand Teltumbde, Iconoclast, Penguin, 2024)

அம்பேத்கரின் தேர்தல் தோல்வியில் டாங்கேவும், சாவர்க்கரும் வகித்த பங்கு வரலாற்றாசிரியர்களால் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை. அண்மையில் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டிருக்கும் அசோக் கோபாலின் நூலில்தான் அந்தத் தகவல் முதன்முறையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அம்பேத்கரின் தனிப்பட்ட கடிதப் போக்குவரத்துகளைப் பார்வையிட்டு இந்தத் தகவலை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் (Ashok Gopal, A Part Apart, Navayana, 2023) அந்த நூல் வெளியானதற்குப் பிறகு வெளியாகியிருக்கும் அம்பேத்கரின் உறவினரான திரு.ஆனந்த் டெல்டும்டே எழுதிய அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘ஐகினோக்ளாஸ்ட்’ நூலில் கூட அந்தத் தகவல் இல்லை.

who made Ambedkar to loss

அசோக் கோபாலின் நூலில் உள்ள தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் (18.12.2024) என்றாலும் அது மக்களவை விவாதங்களின்போது காங்கிரஸ் கட்சியால் சுட்டிக்காட்டப்படவில்லை.

நேரு அமைச்சரவையிலிருந்து தான் பதவி விலகியது ஏன் என்பதை விளக்கி அம்பேத்கர் 1951ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தான் பதவி விலகியதற்கு ஐந்து காரணங்களை அதில் அவர் விரிவாக முன் வைத்திருந்தார். ‘அமைச்சரவையில் முக்கியத்துவம் இல்லாத துறை தனக்கு ஒதுக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டது; பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் வகுப்பினருக்கும் சட்ட ரீதியான பாதுகாப்பு ஏற்படுத்தப்படவில்லை. அதற்காகக் கமிஷன் ஒன்று அமைக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அது அமைக்கப்படவில்லை; நமது மோசமான அயல்நாட்டுக் கொள்கை, அதன் விளைவாக ராணுவத்துக்கு ஆகும் கூடுதல் செலவுகள்; கமிட்டிகளின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை’ ஆகிய நான்கு காரணங்களைக் கூறிய அம்பேத்கர் இறுதியானதாகவும் முக்கியமானதாகவும் இந்து சட்ட மசோதாவை சட்டமாக்க முடியாமல் போனதைக் கூறியுள்ளார்.

“நான் பதவி விலக வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றிக் கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டுவிட்டு, இந்து சட்ட மசோதா சட்டமாக்கப்படாமல் எப்படி சாகடிக்கப்பட்டது என்பதை விளக்கியிருக்கிறார்.

“1947 ஏப்ரல் 11-ம் தேதியன்று இந்து சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, நான்கு வருடத்திற்குப் பிறகு அது சாகடிக்கப்பட்டது. அதன் நான்கு பகுதிகள் மட்டும் நிறைவேற்றப்பட்ட நிலையில் வாய்திறந்து அழக்கூட முடியாமல் (அந்த மசோதா) இறந்து போனது. அவையில் இருந்தவரை இந்த மசோதாவின் வாழ்வு துண்டுதுண்டாகக் கிடந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் இந்த அரசாங்கம் தேர்வுக் குழுவை விசாரிக்க வேண்டிய அவசியத்தைக்கூட உணரவில்லை” என வருத்தத்தோடு குறிப்பிட்டிருக்கும் அம்பேத்கர், 1949 பிப்ரவரியில் நான்கு நாட்களும், மார்ச் மாதத்தில் ஒரு நாளும், ஏப்ரலில் இரண்டு நாட்களுமாக அது பற்றிய விவாதம் நடத்தப்பட்டது எனவும்,  1950ஆம் ஆண்டில் ஒரு நாள்கூட அதற்கான விவாதத்துக்கு ஒதுக்கப்படவில்லை,  1951ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதியன்று பகுதி, பகுதியாக அந்த மசோதாவைப் பரிசீலிப்பது என முடிவு செய்து பிப்ரவரி 7 வரை மூன்று நாட்கள் மட்டுமே அந்த மசோதாவுக்கென ஒதுக்கப்பட்டு அத்துடன் அது கிடப்பில் போடப்பட்டது’ என வேதனையோடு அம்பேத்கர் பதிவு செய்திருக்கிறார்.

மசோதாவில் திருமணம், விவாகரத்து ஆகிய பகுதிகளையாவது சட்டமாக்கிவிடலாம் என பிரதமர் தரப்பில் கூறப்பட்டு, பின்னர் அதற்கும் வாய்ப்பில்லை என ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்டதைக் குறிப்பிட்ட அம்பேத்கர், காங்கிரஸ் கட்சிக்குள் அந்த மசோதாவுக்கு ஆதரவு இருந்ததெனக் கூறுகிறார்.

“காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் இம்மசோதா வாக்கெடுப்புக்கு வந்தபோது 120 பேர்களில் 20 பேர் மட்டுமே அதனை எதிர்த்தனர். காங்கிரஸ் கட்சிக்குள் இம்மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மூன்றரை மணி நேரத்தில் 44 பிரிவுகள் நிறைவேற்றப்பட்டன’’ என ஆதாரங்களோடு அம்பேத்கர் எடுத்துக் காட்டியிருக்கிறார். (BAWS, Vol 14, Government of Maharashtra, 1995) அம்பேத்கர் குறிப்பிடுவதிலிருந்து பார்த்தால் காங்கிரஸ் கட்சிக்குள் ‘ஸ்லீப்பர் செல்களாக’ செயல்பட்ட சில சனாதனிகளைத் தவிர வேறு யாரும் இந்து சட்ட மசோதாவை எதிர்க்கவில்லை எனத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியில் பெரிய எதிர்ப்பு இல்லை, பிரதமர் நேருவும் அந்த மசோதாவை நிறைவேற்றவே விரும்பினார் என்னும்போது அது ஏன் சட்டமாகவில்லை? அன்றையப் பிரதமர் நேரு அந்த மசோதாவை சட்டம் ஆக்குவதற்கு ஏன் தயங்கினார்? என்ற கேள்விகள் எழுகின்றன. நேருவின் தயக்கத்துக்கான காரணம் காங்கிரஸுக்கு வெளியில் இருந்த சனாதனப் பிற்போக்காளர்களின் எதிர்ப்பே ஆகும். அதில் முன்னணியில் நின்றது ஆர்.எஸ்.எஸ்.

1949ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ‘அகில இந்திய  இந்து சட்ட மசோதா எதிர்ப்புக் கமிட்டி’ என ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அது இந்து சட்ட மசோதாவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தது . நாடெங்கும் நூற்றுக் கணக்கான கூட்டங்களை நடத்தியது. அதற்குப் பின்னணியில் ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டது. 1949 டிசம்பர் மாதம் 11ஆம் நாள் டெல்லி ராம் லீலா மைதானத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ் ஏற்பாடு செய்தது. அதில் பேசியவர்கள் எல்லோருமே இந்து சட்ட மசோதாவைத் தாக்கிப் பேசினார்கள். அது இந்து மதத்தின் மீது வீசப்பட்டுள்ள அணுகுண்டு என்று ஒருவர் பேசினார். இன்னொருவரோ அது பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்ட கொடுமையான ரவுலட் சட்டம் போன்றது என்று சொன்னார்.

ரவுலட் சட்டத்துக்கு எதிரான போராட்டம் எப்படி பிரிட்டிஷ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்ததோ அப்படி இந்து சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் நேரு அரசாங்கத்தை வீழ்ச்சி அடையச் செய்யும் என்று அவர் பேசினார். அந்தக் கூட்டம் நடைபெற்றதற்கு அடுத்த நாள் நாடாளுமன்றத்தை நோக்கி ஆர்.எஸ்.எஸ் ஒரு பேரணியை நடத்தியது. இந்து சட்ட மசோதா ஒழிக! நேரு ஒழிக! என்று முழக்கமிட்டவாறு அவர்கள் பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோரின் உருவ பொம்மைகளை எரித்தனர். ஷேக் அப்துல்லாவின் காரையும் சேதப்படுத்தினார்கள். கர்பாத்திரி சுவாமிகள் என்பவர் இந்தப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தார். விவாகரத்து செய்வது தத்து எடுத்துக் கொள்வது ஆகியவை இந்து மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானவை என்று அவர் பேசினார். (Ramachandra Guha, India After Gandhi, Harper Perennial, 2008)

who made Ambedkar to loss

ஆர்.எஸ்.எஸ் ஆதரவோடு சனாதன பிற்போக்காளர்கள் கொடுத்த நெருக்கடியால்தான் நேரு இந்து சட்ட மசோதாவைச் சட்டமாக்க சற்று காலம் எடுத்துக்கொண்டார். ஆனால் அந்தக் கடமையை அவர் கைவிடவில்லை. அம்பேத்கர் பதவி விலகியதற்குப் பிறகு நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராகப் பொறுப்பேற்ற திரு.எச்.வி.படாஸ்கர் 1955ஆம் ஆண்டிலும் 1956ஆம் ஆண்டிலும் இரண்டு சட்டங்களாகப் பிரித்து இந்து சட்ட மசோதாவை சட்டமாக்கினார். அப்போது அம்பேத்கர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.

அம்பேத்கரின் ராஜினாமாவுக்குக் காரணமான இந்து சட்ட மசோதா தொடர்பான சிக்கல்கள் காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பாலும் அதன் ஆதரவாளர்களாக இருந்த சனாதனிகளாலும் ஏற்படுத்தப்பட்டவை என்பதை மேலே சுட்டிக்காட்டப்பட்ட நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

*

பாஜகவினர் சொல்லும் இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் காங்கிரஸ் கட்சியைத் தாக்குவதற்குக் கையாளப்படும் அரசியல் உத்திகள் அல்ல, அவை பாசிச அணுகுமுறையின் வெளிப்பாடு. பாசிஸ்டுகள் தாம் பொய் சொல்வதாக நினைப்பதில்லை, மாறாக யதார்த்தத்தைத் தாம் புனையும் கட்டுக்கதைகளாக மாற்றுகிறார்கள். தமது பொய்களை தாங்களே உண்மை என நம்புகிறார்கள். பாசிசத்தின் உச்சபட்சமான நிலை என்பது அடக்குமுறையும் கணக்கற்ற உயிரிழப்புகளும் அல்ல. மக்கள் எப்போது புனைவுக்கும் யதார்த்தத்துக்குமான வித்தியாசத்தைப் பார்க்கத் தவறுகிறார்களோ, எப்போது பொய்க்கும் உண்மைக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என நம்ப ஆரம்பிக்கிறார்களோ அதுதான் பாசிசத்தின் உச்சநிலை. அது ஒரு நாளில் நிறுவப்படுவதில்லை. சமூகத்தின் நனவிலியில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாற்றம் நிகழ்கிறது. மறுக்கப்படாத பொய்கள் அந்த நிலையை நோக்கி சமூகத்தை உந்துகிறது. இதைப் புரிந்துகொண்டால் பாஜகவினரின் பொய்கள் தேர்தல் லாபத்துக்காக சொல்லப்படுவதில்லை, அதற்கும் அப்பால் அதற்கு நீண்டகால நோக்கம் இருக்கிறது என்பதை நாம் உணர்வோம்.

கட்டுரையாளர் குறிப்பு:

who made Ambedkar to loss

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்  (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம்: டிச. 27, 28-ல் பேச்சுவார்த்தை!

ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்: என்ன காரணம்?

ஹெல்த் டிப்ஸ்: மூட்டுவலி… Knee caps உதவுமா?

பியூட்டி டிப்ஸ்: உங்கள் சருமத்துக்கேற்ற க்ளென்சர் எது?

இதெல்லாம் நமக்கு தேவையா கோபி… அப்டேட் குமாரு

அல்லு அர்ஜுன் வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share