பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி மாயமானதாகவும், அது தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டு விட்டதாகவும் பிரதமர் மோடி பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியிருக்கிறது. கோயில் பொக்கிஷத்தின் சாவியைக் களவாடும் திருடர்கள் என்ற பழியைத் தமிழ்நாட்டு மக்களின் மீது மோடி சுமத்தலாமா? இது தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா என்று முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது ஜெகன்நாதர் மீது அளவற்ற பக்தி கொண்ட ஒடிசா மக்களை தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக தூண்டும் பேச்சு என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்போது இந்த விவகாரம் நாடு முழுதும் விவாதமாக மாறியிருக்கிறது.
பூரி ஜெகன்நாதர் கோயிலில் அப்படி என்ன மர்மம் இருக்கிறது?
பூரி ஜெகன்நாதர் கோயிலின் ரத்ன பந்தர் என்று சொல்லப்படும் கருவூலத்தில் கோயிலுக்கு சொந்தமான நகைகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த ரத்ன பந்தரில் இரண்டு அறைகள் உள்ளன. ஒன்று உள் அறை (inner chamber), மற்றொன்று வெளி அறை (outer chamber) ஆகும்.
இந்த இரண்டு அறைகளில் வெளி அறையானது அவ்வப்போது திறக்கப்பட்டு அதில் உள்ள நகைகள் கோவில் திருவிழாக்கள் மற்றும் இதர நிகழ்வுகளின் போது சிலைகளை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் மற்றொரு அறையான உள் அறையானது கடந்த 38 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படவில்லை. அந்த அறைக்குள் பயன்படுத்தப்படாத ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கோயில் சொத்துக்களாக பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்த அறைக்கு இரண்டு பூட்டுகள் உள்ளன. இந்த அறைகளை மாநில அரசின் சிறப்பு அனுமதியுடன் மட்டுமே திறக்க முடியும்.
கடந்த நூறு ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே இந்த அறை திறக்கப்பட்டிருக்கிறது. 1905, 1926, 1978 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் இந்த அறை திறக்கப்பட்டது. அதன் பிறகு உள் அறையானது திறக்கப்படவே இல்லை.
எவ்வளவு நகைகள் உள்ளன?
1978 இல் எடுக்கப்பட்ட ஒடிசா அரசாங்கத்தின் சர்வேயின் அடிப்படையில் பார்த்தோமென்றால், பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையில் 149 கிலோ தங்கமும், 258 கிலோ வெள்ளியும் இருந்தன.
2018 ஆம் ஆண்டு இந்த அறையை திறப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவோடு 16 பேர் கொண்ட குழுவினர் ரத்ன பந்தர் எனும் கருவூலத்தினைத் திறந்து பரிசோதிப்பதற்காகச் சென்றனர். அப்போது தான் உள் அறைக்கான சாவி காணாமல் போயிருந்தது அவர்களுக்கு தெரிய வந்தது. இதன் காரணமாக அவர்கள் அந்த அறையின் இரும்பு கேட்டுக்கு வெளியே நின்று கொண்டு லைட் வெளிச்சத்தை அடித்துப் பார்த்து மட்டும் திரும்பினர்.
பேங்க் லாக்கர் உட்பட எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தும் அந்த அறையின் சாவிகள் கிடைக்கவில்லை. இந்த விவகாரம் வெளியே தெரிந்து மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.
விசாரணைக் குழு
இதன் காராணமாக 2018 ஆம் ஆண்டு ஒடிசாவின் நவீன் பட்நாயக் அரசாங்கம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபிர் தாஷ் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்து காணாமல் போன சாவிகளைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்டது.
அந்த விசாரணை துவங்கிய சில நாட்களில், விசாரணைக் குழுவினர் பூரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடத்திய போது, உள் அறையின் டூப்ளிகேட் சாவிகள் என்று எழுதப்பட்ட ஒரு கவர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்.
அதன் பிறகு 324 பக்க விசாரணை அறிக்கை அந்த குழுவினால் சமர்பிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிக்கை இன்னும் பொதுவெளியில் வைக்கப்படவில்லை.
தொடர்ந்து இந்த பிரச்சினை அடிக்கடி விவாதமான நிலையில், ஜெகன்நாதர் கோவிலின் மேலாண்மை குழு 2024 ஆம் ஆண்டு வருடாந்திர ரத யாத்திரை நடைபெறும் போது கோயில் கருவூலத்தின் உள் அறை திறக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.
மேலும் ஒடிசா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பஷாயத் தலைமையில் ஒரு பேனல் உருவாக்கப்பட்டு, உள் அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிற நகைகள் மற்றும் இதர விலை உயர்ந்த பொருட்களின் மதிப்பினை கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரத்தை கையிலெடுத்த பாஜக
இந்த விவகாரத்தைத் தான் ஒடிசாவின் தேர்தல் பிரச்சாரத்தில் கையிலெடுத்துள்ளார் மோடி. ஒடிசாவில் 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்து வருபவர் பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக். அவருக்கு அடுத்ததாக அக்கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் வி.கே.பாண்டியன் எனும் தமிழர் ஆவார். அவரைக் குறிவைத்துத் தான் பூரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவிகள் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று மோடி பேசியுள்ளார்.
ஆனால் மோடி வி.கே.பாண்டியன் என்ற தனிநபரைக் குறிப்பிடாமல், தமிழ்நாட்டை அடையாளப்படுத்தி சாவி அங்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டது என்று பேசுவதன் மூலம் தமிழர்களை இழிவுபடுத்துகிறார் என்ற கோபம் தமிழ்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
யார் இந்த வி.கே.பாண்டியன்?
வி.கே.பாண்டியன் மதுரையில் பிறந்தவர். 2002 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக ஒடிசாவில் தர்மகார் மாவட்டத்தில் பணியைத் தொடங்கினார். பொதுப் பணித் துறை சார்ந்த அவரது பணிகளுக்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
அதன்பிறகு ஒடிசாவிலேயே பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான பணத்தை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டத்தை ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் முதல்முறையாக வி.கே.பாண்டியன் துவங்கினார்.
பல்வேறு துறைகளில் அவரது பணிகளின் காரணமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமானவராக மாறினார். 2011 ஆம் ஆண்டு ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளராக பாண்டியன் மாறினார். ஒரு கட்டத்தில் நவீன் பட்நாயக்கின் வலது கையாகவும் அவர் உருவெடுத்தார்.
2019 ஆம் ஆண்டு 5T (Transformational Initiatives) என்று சொல்லக்கூடிய ஒரிசா மாநிலத்தின் முக்கியத் திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு வி.கே.பாண்டியனுக்கு கொடுக்கப்பட்டது. இது ஒரு கேபினெட் அமைச்சருக்கு இணையான பொறுப்பாகும்.
அப்போதிருந்தே எதிர்கட்சிகள் பாண்டியன் அரசியலுக்கு வரப் போகிறார், நவீன் பட்நாயக் வயது முதிர்ந்துவிட்ட நிலையில் பிஜூ ஜனதா தளத்தை அவர்தான் வழிநடத்தப் போகிறார் என்பதைப் பேச ஆரம்பித்துவிட்டன.
பல முக்கியப் பணிகளை வி.கே.பாண்டியன் மேற்கொண்டார். ஒடிசாவில் உள்ள பழங்கால கோவில்களை மறுசீரமைப்பு செய்யும் பணியை செய்தார். அதேபோல் மருத்துவமனைகளை சீரமைக்கும் பணிகளையும், புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கும் பணிகளையும் பொறுப்பேற்று மேற்கொண்டார். கொரோனா நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக அவர் மேற்கொண்ட பயணங்கள் ஒடிசா மக்களிடையே அவருக்கு பெரும் ஆதரவை உருவாக்கின.
2023 நவம்பர் மாதம் வி.கே.பாண்டியன் பிஜூ ஜனதா தளம் கட்சியில் நேரடியாக இணைந்தார். பிஜூ ஜனதா தளத்தில் நவீன் பட்நாயக்கிற்கு அடுத்தபடியாக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெரிதாக இல்லாததால் வி.கே.பாண்டியனே அக்கட்சியின் அடுத்தகட்ட தலைவராக பார்க்கப்படுகிறார். பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு பிரச்சாரம் செய்வதற்காக வி.கே.பாண்டியன் பயணிக்கும் இடங்களில் எல்லாம் அவருக்கு பெருமளவிலான மக்கள் ஆதரவு இருப்பதாக ஒடிசாவின் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்நிலையில் தான் பிஜூ ஜனதா தளத்தினை வீழ்த்த பாஜக வி.கே.பாண்டியனை வெளியார் என்ற அடையாளத்துடன் முன்னிறுத்தி ஒடிசாவில் தனது பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுள்ளது. ஒடிசாவை இந்த மண்ணைச் சேர்ந்தவர் ஆட்சி செய்யாமல் ஒரு தமிழர் ஆட்சி செய்யலாமா என்று அமித்ஷா பிரச்சாரங்களில் வி.கே.பாண்டியனைக் குறிவைத்து பேசி வருகிறார்.
அதேபோல் பிரதமர் மோடி பூரி ஜெகன்நாதர் கோயிலின் சாவிகள் காணாமல் போன விவகாரத்தில் வி.கே.பாண்டியனைக் குறிவைத்து, அந்த சாவிகள் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டைக் குறிப்பிட்டு மோடி பேசியது இன்று சர்ச்சையாக மாறி இருக்கிறது.
தேர்தலுக்கு முன்பு கூட்டணி பேசிய பாஜக
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்புவரை பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி அமைப்பதற்காக பேசி வந்தது பாஜக. தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் தான் பிஜூ ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைக்கவில்லை. பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணிக்காக பேசும்போது ஜெகன்நாதர் கோயிலின் சாவி காணாமல் போன விவகாரம் மோடிக்கு தெரியாதா என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
மேலும் வி.கே.பாண்டியனை விமர்சிக்க வேண்டுமென்றால் தனிப்பட்ட அவரை விமர்சிக்காமல், ஏதோ தமிழ்நாடே ஜெகன்நாதர் கோயிலின் சாவிகளை எடுத்துக் கொண்டதைப் போல மோடி பேசுவது கடும் விமர்சனத்திற்கு தமிழ்நாட்டில் உள்ளாகியுள்ளது.
மோடியின் விமர்சனத்திற்கு வி.கே.பாண்டியன், ”காணாமல் போன சாவிகள் குறித்து இப்போது பேசும் பிரதமர் மோடி, முடிந்தால் அவரே அந்த சாவியை கண்டுபிடித்துத் தரட்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ”கோவில் திருவிழாவின் போது அந்த அறை திறக்கப்படும். அதற்கான தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Comments are closed.