இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வைத்தவர்: யார் இந்த காம்ரேட் சீதாராம் யெச்சூரி?

Published On:

| By Selvam

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று செப்டம்பர் 12ஆம் தேதி காலமானார்.

நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவ வல்லுனர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 12ஆம் தேதி பிற்பகல் 3.05 மணிக்கு காலமானார்.

சீதாராம் யெச்சூரியின் உடலை அவரது குடும்பத்தினர் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காகவும் ஆராய்ச்சிக்காகவும் டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கே தானமாக வழங்கினர்.

மறைவு எய்திய சீதாராம் யெச்சூரிக்கு பிரதமர் மோடி தொடங்கி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யார் இந்த சீதாராம் யெச்சூரி?

சீதாராம் யெச்சூரி 1952 ஆகஸ்ட் 12ஆம் தேதி தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பிறந்தார்.

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சர்வேஸ்வர சோமயாஜுலா யெச்சூரி மற்றும் கல்பகம் யெச்சூரிக்கு மகனாக பிறந்தவர். பெற்றோர்கள் இருவருமே அரசு ஊழியர்கள்.

பள்ளி படிப்பை ஆந்திரா மற்றும் டெல்லியில் பயின்ற யெச்சூரி, செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பொருளாதாரம் பயின்றார். அப்போது படிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். இவரை இவரது நண்பர்கள் சீதா என்று அன்போடு அழைப்பார்கள்.

நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார்.1977ல் ஜவஹர்லால் பல்கலையில் பயின்ற போது மாணவர் சங்கத் தலைவராக செயல்பட்டு வந்தார். அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்து அவரது வீட்டை மாணவர்கள் முற்றுகையிட போனார்கள்.

இந்திரா காந்தி வீட்டிற்கு சிறிது தொலைவு இருக்கும்போதே, முற்றுகையிட சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அந்த சமயத்தில் இந்திரா காந்தி மாணவர்களிடம் பேச வீட்டிலிருந்து வெளியே வர முயன்ற போது, பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லி போலீசாரிடம் சொல்லி மாணவர்களின் கோரிக்கைகளை கேட்க, அவர்களில் 5 பேரை மட்டும் அழைத்து வர சொன்னார்கள். இதில் யெச்சூரி உட்பட 5 பேரை மட்டும் போலீசார் இந்திரா காந்தியிடம் அழைத்து சென்றனர்.

அங்கு இந்திரா காந்தி அவர்களது கோரிக்கையை கேட்ட போது, யெச்சூரி தனது கோரிக்கையாக, பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் இல்லை, அடக்குமுறை அதிகரித்து வருகிறது.

அதனால் ஜவஹர்லால் பல்கலைக் கழத்தின் வேந்தர் பதவி வகித்து வந்த இந்திரா காந்தியை ராஜினாமா செய்ய வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கையை ஏற்று வேந்தர் பதவியை ராஜினாமா செய்தார் இந்திராகாந்தி.

யெச்சூரி, கல்லூரி காலம் முடிந்த பிறகு நேரடியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யில் சேர்ந்து அரசியலுக்கு வந்தார். 1989ல் இருந்து டெல்லி தலைமையகத்தில் இருந்தவாறு அரசியல் பணிகளை செய்து வந்தார்.

சிபிஐ(எம்) கட்சியின் வெளியுறவுத் துறையின் தத்துவ பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டு, கம்யூனிஸ்டுகள் உள்ள நாடுகளுக்கு சென்று கம்யூனிஸ்ட் தத்துவத்தை பகிர்ந்தும், அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கும் செயல்பட்டவர்.

உதாரணமாக நேபாளத்தில் பாஜக போன்ற ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க முயன்ற நேரத்தில் குழு, குழுவாக பிரிந்திருந்த கம்யூனிஸ்டுகளை ஒன்று சேர்த்து கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்ததற்கு யெச்சூரிக்கும் பெரும் பங்குண்டு. பிரகாஷ் காரத்தை அடுத்து 2015இல் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார்.

வாஜ்பாய் ஆட்சிக்கு பிறகு மீண்டும் பாஜக பலமாகிவிடக்கூடாது, ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்று மாநில கட்சிகளை ஒன்றிணைத்து மத நல்லிணக்க கூட்டணியை அமைத்தவர்.

இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு முதுகு தண்டுவடத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது மருத்துவர்கள் வெளியூர் பயணத்தை தவிர்க்க வேண்டும், ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனால், மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நாடு முழுவதும் கடுமையான பிரச்சாரங்களை செய்து வந்தார். தற்போது பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றியவர் சீதாராம் யெச்சூரி.

இந்தநிலையில், நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலாமானார்.

இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்த இவருக்கு பாஜக அரசு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதையும் வழங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார் .

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் 12ஆவது அகில இந்தியா மாநாட்டில் இருந்து 24ஆவது மாநாடு வரை அகில இந்திய மத்திய குழு தலைவராக இருந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவர் அதிகமாக தென்மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதிகளுக்கு அதிக கவனம் செலுத்தி மாநில கட்சிகளோடு நெருக்கமாக இருந்தவர்.

யெச்சூரிக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருந்தனர். அதில் ஒரு மகன் கொரோனா காலத்தில் காலமானார். அதன்பிறகு ஒரு மகன், மகள் மனைவியுடன் வாழ்ந்து வந்தார்.

சீதாராம் யெச்சூரியின் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் மிகுந்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வணங்காமுடி, பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரேடியாக உயர்ந்த தங்கம்… நகைப்பிரியர்கள் ஷாக்! – சவரன் எவ்வளவு தெரியுமா?

ஸ்ருதிக்கு நடந்த துயரம் கற்பனைக்கு எட்டாதது!- நடிகர் மம்முட்டி வேதனை!

கோவை: விதிகளை மீறிய வேகத்தடைகள்… தொடரும் உயிரிழப்புகள்!

பியூட்டி டிப்ஸ்: எடையைக் குறைத்து அழகாக வேண்டும் என்று நினைப்பவர்களின் கவனத்துக்கு!

Who is This Sitaram Yechury?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share