அலறிய அத்வானி… கதறிய கரசேவகர்கள் : யார் இந்த முலாயம் சிங்?

Published On:

| By Kavi

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி பா.ஜ.க. தலைவர் அத்வானி தலைமையில் உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மஸ்ஜிதை நோக்கி கரசேவகர்கள் பேரணியை முன்னெடுத்தனர்.

இதனை அடுத்து பாபர் பள்ளிவாசலைச் சுற்றி ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டதோடு ஊரடங்கும் விதிக்கப்பட்டது. ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத கரசேவகர்கள் பள்ளிவாசலை நோக்கி முன்னேறினர்.

ADVERTISEMENT

அப்போதுதான் மேலிடத்தில் இருந்து அந்த உத்தரவு பறந்தது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் கரசேவர்களின் கூட்டம் சிதறி ஓடியது. தலை தெறிக்க ஓடியவர்களை போலீசார் விரட்டி விரட்டி வெளுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கரசேவகர்கள் மீண்டும் நவம்பர் 2-ம் தேதி பாபர் மசூதியை நோக்கி புறப்பட்டனர்.

ADVERTISEMENT

இந்த முறையும் துப்பாக்கிகளை கையில் எடுத்தது போலீஸ். 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பா.ஜ.க. தலைவர் அத்வானி மட்டுமின்றி ஒட்டு மொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவு போட்டவர் அப்போதைய உத்தரப் பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ்.

பின் நாட்களில் தனது இந்த உத்தரவை நியாயப்படுத்திய முலாயம் சிங், நாட்டின் நன்மைக்காக இதை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்ததாகக் கூறினார்.

ADVERTISEMENT

பாபர் மசூதியை பாதுகாக்க அவர் எடுத்த இந்த முயற்சி தான் அடுத்த 2 முறை அவர் உத்தரப் பிரதேச முதல்வர் பதவியை அடைய காரணமாக அமைந்தது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் இடாவா மாவட்டத்தில் உள்ள சைஃபை கிராமத்தில் சாதாரண ஒரு விவசாய குடும்பத்தில் நவம்பர் 22, 1939ஆம் ஆண்டு பிறந்தார் முலாயம் சிங் யாதவ்.

பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையில் கரம் ஷேத்ரா போஸ்ட் கிராடுவேட் கல்லூரியில் பி.ஏ. பட்டமும், ஆக்ரா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் பி. ஆர். கல்லூரியில் எம்.ஏ. பட்டமும் பெற்றார்.

ராம் மனோஹர் லோகியாவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட முலாயம் சிங் 15 வயதிலேயே அரசியல் மீது ஆர்வம் கொண்டுவிட்டார்.

மல்யுத்தத்தின் மீது இருந்த ஆர்வத்தால் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் தட்டிச்சென்றுள்ளார். மாலதி தேவி என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு அகிலேஷ் யாதவ் என்கிற மகன் பிறந்தார். பின்னாளில் தந்தையின் வழியை பின்பற்றி மகனும் அரசியலில் உச்சம் தொட்டது வேறுகதை.

முதன்முதலாக 1967-ம் ஆண்டு சம்யுக்த சோசியலிஸ்ட் கட்சி சார்பில் ஜஸ்வந்த் நகர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்றம் சென்ற முலாயம் சிங் யாதவ் அதன் பிறகு 9 முறை உத்தரப் பிரதேச சட்ட மன்றத்திற்கும் 7 முறை இந்திய மக்களவைக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திரா காந்திக்கு எதிராக சரண் சிங் தொடங்கிய லோக் தள் கட்சி சார்பில் 1985-ம் ஆண்டு 4-வது முறையாக எம்.எல்.ஏ.வாகி இருந்தார் முலாயம் சிங் யாதவ்.

அப்போது, 1989-ம் ஆண்டு அவருக்கு முதன்முதலில் அவருக்கு முதல்வராகும் வாய்ப்பு கிடைத்தது. 1990-ல் மத்தியில் வி.பி.சிங்-யின் ஆட்சி கவிழ்ந்த பிறகு முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் சோஷியலிஸ்ட் ஜனதா தள் கட்சியில் சேர்ந்த முலாயம் சிங் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் முதல்வர் அரியணையில் தொடர்ந்தார்.

ஆனால், காங்கிரஸ் தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் 1991-ல் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க.வின் கைகளுக்குச் சென்றது.

இதன் பிறகு 1992-ம் ஆண்டு சமாஜ்வாதி என்கிற பெயரில் தனது சொந்தக் கட்சியை தொடங்கினார் முலாயம் சிங் யாதவ். அந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 6-ம் தேதி அன்று கர சேவகர்களால் பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது.

நாடு முழுவதும் மதக்கலவரங்களுக்கு வழி வகுத்தது. பா.ஜ.க.வின் கல்யாண் சிங் ஆட்சி மீது கறை படிந்தது. இதன்பிறகு 1993-ல் நடந்த தேர்தலின் போது பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்த முலாயம் சிங் யாதவ் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.

ஏற்கனவே 1990ஆம் ஆண்டு பாபர் மசூதியை நோக்கி வந்த கரசேவகர்களை முலாயம் சிங் யாதவ் தடுத்து நிறுத்தியிருந்தது இந்த முறை முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கை உயர்த்தியது. ஆனால் இந்த ஆட்சியும் ஒன்றரை ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

2002-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணி நீண்டகாலம் நீடிக்கவில்லை. இதனால், 2003-ம் ஆண்டு மீண்டும் உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக 3-வது முறை பொறுப்பேற்றார் முலாயம் சிங் யாதவ்.

Who is this Mulayam Singh yadav

இடையில் 1996 முதல் 98-வரை இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் சிறுபான்மை சமுதாயத்தினர் என ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முலாயம் சிங் யாதவ் ஆதரவாக நின்றாலும், பெண்கள் குறித்த அவரது சர்ச்சை பேச்சுகள் அவ்வப்போது தலைப்புச் செய்தியில் இடம்பெறுவது வழக்கம்.

பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை கொடுப்பதை கடுமையாக எதிர்த்த முலாயம் சிங், ஆண்கள்னா அப்படி தான் இருப்பாங்க, ஆண்கள் தவறு செய்வார்கள் என பேசியது சர்ச்சையை கிளப்பியது. அப்போதைய ஐ. நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூனே இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

2010-ல் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, மசோதா நிறைவேறினால் நாடாளுமன்றத்தில் பெண்கள் நிரம்பிவிடுவார்கள் என்று விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார்.

2012-ல் மீண்டும் சமாஜ்வாதி கட்சியின் வசம் ஆட்சி வந்தபோது மகனுக்கு வழி விட்டு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்த முலாயம் சிங் பின்னர் 2017-ல் 25 ஆண்டுகளாக தான் வகித்து வந்த கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் மெயின்புரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (2022 அக்டோபர் 10) காலமானார்.

அப்துல் ராஃபிக்

முலாயம் சிங் யாதவ் மறைவு : தலைவர்கள் இரங்கல்!

முலாயம் சிங் யாதவ் காலமானார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share