அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகிய அமைச்சர்கள் சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கீழமை நீதிமன்றங்களின் தீர்ப்பை கடுமையாக விமர்சித்து, அவற்றை மறு விசாரணை செய்ய தாமாக முன் வந்து உத்தரவிட்டுள்ளார் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களிலும், நீதித்துறை வட்டாரங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு உடனடியாக ஆகஸ்டு 24 ஆம் தேதி பிற்பகல் அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக தெரிவித்தார்.
மேலும், ‘ஓபிஎஸ், நத்தம் விசுவநாதன், வளர்மதி ஆகிய முன்னாள் அமைச்சர்கள் சொத்துக் குவிப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட தீர்ப்புகள் எல்லாம் ஆனந்த் வெங்கடேஷுக்கு தெரியவில்லையா? தேர்ந்தெடுத்து திமுக அமைச்சர்கள் மீது மட்டும்தான் கவனம் செலுத்துவாரா?’” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற முறையீட்டை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யார், எப்படிப்பட்டவர் என்ற தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன.

வடசென்னைப் பையன்
உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் யார்? அவரது பாஷையிலேயே சொல்லப் போனால், ‘நான் ஒரு வடசென்னைப் பையன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வடசென்னையில் 1969 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நந்தா, சூடாமணி தம்பதியருக்கு பிறந்த ஒரே மகன் தான் ஆனந்த் வெங்கடேஷ்.
சென்னை பெரம்பூரில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் படித்தார். பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் செல்லம் கொடுத்து வளர்த்தனர். தன்னைப் பற்றி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொல்லும்போது,
’பள்ளியில் நான் ஒன்றும் மிக நன்றாக படிக்கும் மாணவன் இல்லை. இன்னும் சொல்லப் போனால் சில பாடங்களில் சிங்கிள் டிஜிட் மார்க் எடுக்கும் மாணவனாக கூட இருந்திருக்கிறேன். சில பாடங்களை பாஸ் செய்வதே பெரிய பிரச்சினையாக இருந்திருக்கிறது’ என்கிறார். ஆனால் தன்னைக் காப்பாற்றியதாக ஆனந்த் வெங்கடேஷ் குறிப்பிட்டது அவருடைய கையெழுத்தைத்தான்.
‘என் கையெழுத்து ரொம்ப மோசமாக இருக்கும். அதனால் எந்த ஆசிரியரும் என்னை அவர்களது வகுப்பிலேயே வைத்திருக்க விரும்பமாட்டார்கள். அதனாலேயே பாஸ் போட்டுவிடுவார்கள்’ என்று தனது கையெழுத்து பற்றி சொல்லியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
பள்ளி நாட்களில் குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் ஆனந்த் வெங்கடேஷ் குண்டாக இருந்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் பையன்கள், ‘எந்த கடையில அரிசி வாங்குறே?’ என்று அவரை கேலி செய்திருக்கிறார்கள். இதற்காகவே உடம்பை ஃபிட் ஆக வைக்க வேண்டும் என்பதற்காகவே கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்து அதில் இறங்கினார் ஆனந்த் வெங்கடேஷ். அந்த கிரிக்கெட் விளையாட்டு, அவரது தீர்ப்புகளிலும் எதிரொலிக்கும். நீதிமன்றம் அரசியல் கட்சிகள் ஸ்கோர் செய்யும் மைதானங்கள் இல்லை என்று ஒரு தீர்ப்பில் கூட சொல்லியிருப்பார் ஆனந்த் வெங்கடேஷ்.
அதுமட்டுமல்ல நீதிபதி ஆன பிறகும் கூட அவர் கிரிக்கெட் மேட்சுகளில் விளையாடியிருக்கிறார். நீதிபதிகள் அணிக்கும், வழக்கறிஞர் அணிக்கும் இடையே நடந்த கிரிக்கெட் போட்டிகளில் மேன் ஆஃப் த மேட்ச் அவார்டு வாங்கியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
ஆல் ரவுண்டர் வழக்கறிஞர்

மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் பி.காம் படித்த ஆனந்த் வெங்கடேஷ் அதன் பிறகு சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் பி.எல். படித்தார். சட்டக் கல்லூரியில் படித்தபோதுதான் தான் முழுமையான ஈடுபாட்டோடும் நம்பிக்கையோடும் படித்ததாக கூறியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
பி.எல். முதல் வருடம் படிக்கும்போதே மூத்த வழக்கறிஞர் ராமமூர்த்தியிடம் ஜூனியராக சேர்ந்துவிட்டார் ஆனந்த் வெங்கடேஷ். படித்து முடித்தவுடன் 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பார் கவுன்சிலில் என்ரோல் செய்தார் .1997 ஆம் ஆண்டு வரை ராமமூர்த்தியிடம் ஜூனியராக வேலை பார்த்தார் ஆனந்த் வெங்கடேஷ்.
அப்பா வழக்கறிஞர் இல்லை அதாவது முதல் தலைமுறை வழக்கறிஞர் என்பதால் அவருக்கு என்ன மாதிரியான வழக்குகளை எடுக்க வேண்டும், என்ன மாதிரியான வழக்குகளை எடுக்க வேண்டாம் என்ற வரம்பெல்லாம் இல்லை. தன்னிடம் வருகிற எல்லா வழக்குகளையும் எடுத்துக் கொள்வார். அதாவது ஒரிஜினல் கேஸ், அப்பீல் கேஸ், ரிட் கேஸ் என்று எல்லா வகையான வழக்குகளை எடுத்துக் கொண்டார்.,
சவாலான பொருளாதாரம்… திறந்த வெளி அலுவலகம்!
1997 ஆம் ஆண்டு வழக்கறிஞர் உஷாவை திருமணம் செய்துகொண்டார் ஆனந்த் வெங்கடேஷ். இது அவரது பெற்றோரின் குடும்பத்தினரின் விருப்பத்துக்கு மாறான திருமணம் என்று குறிப்பிடுகிறார். அப்போது அவர் வழக்கறிஞர் பணியில் ஈடுபட்டு சில ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. சீனியர் அவருக்கு கொடுத்த மாத உதவித் தொகை 750 ரூபாய். அதுவும் மொத்தமாய் வராது. கொஞ்சம் கொஞ்சமாக கொடுப்பார்கள். அப்போது அந்த சூழல் பெரும் சவாலாக இருந்ததாக குறிப்பிடுகிறார் ஆனந்த் வெங்கடேஷ்.
2003 வரை ஆனந்த் வெங்கடேஷால் அலுவலகம் பிடிக்க முடியவில்லை. நீதிமன்ற வாசல்களிலும், திறந்த வெளியிலும்தான் அவரது க்ளையண்டுகளோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார் ஆனந்த் வெங்கடேஷ்.
சட்டக் கல்லூரி மாணவர்களிடையே பேசுகையில், ‘உங்களது வசதியான சூழலை விட்டு முதலில் வெளியே வரவேண்டும். கம்ஃபர்ட் சோன் என்ற குமிழிக்குள்ளேயே இருந்தால் சாதிக்க முடியாது. அதை உடைத்துக் கொண்டு வெளியே வரவேண்டும்’ என்பதைத்தான் முக்கிய அறிவுரையாக குறிப்பிடுகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து அடுத்தடுத்து சட்டத் துறையில் செயல்படத் தொடங்கினார் ஆனந்த் வெங்கடேஷ். குறிப்பாக மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவை ரீதியாக பல உதவிகளை செய்திருக்கிறார் ஆனந்த் வெங்கடேஷ்.
அமிகஸ் க்யூரி எனப்படும் நீதிமன்றத்தின் நண்பர் என்ற வகையில் குறிப்பிட்ட வழக்கில் அறிவுரை ஆலோசனை வழங்குபவராகவும் இருந்திருக்கிறார்.
சிவில் மற்றும் கிரிமினல் தரப்பில் பல்வேறு சட்ட சிக்கல்கள் குறித்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
குறிப்பிடத் தகுந்த தீர்ப்புகள்!

2021 ஆம் ஆண்டில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஒரு பாலின தம்பதியினரின் பாதுகாப்பைக் கோரிய மனுவை விசாரித்தார்.
அந்த விசாரணையின்போது ஒரு பாலின அதாவது தன் பாலின ஈர்ப்பாளர்களின் சவால்கள், வாழ்க்கை நிலை ஆகியவற்றை உணர்வதற்காக தனிப்பட்ட முறையில் கவுன்சிலிங் எடுத்துக் கொண்டார் நீதிபதி. அதுவரை தன் பாலின ஈர்ப்பாளர்கள் மீது தான் வைத்திருந்த முன் முடிவுகளை மாற்றிக் கொண்டதாகவும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு தேவை என்பதையும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
மேலும், திருப்பூரில் கிறிஸ்துமஸ் அன்று தேசிய கொடி போன்ற கேக்கை வெட்டியதை குறிப்பிட்டு இது தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என்று வழக்குத் தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “இந்திய தேசிய கொடி போன்ற வண்ணத்தில் இருந்த கேக்கை வெட்டியது குற்றமல்ல. இந்தியா போன்ற நாட்டில் தேசியவாதம் முக்கியமானதுதான். ஆனால் அடையாளவாதம் ஆக்கிவிடக் கூடாது” என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
-வேந்தன்
