இந்தாண்டு பொங்கல் அன்று விஜய் நடிப்பில் வெளிவந்த ’வாரிசு’ திரைப்படம் கூட இந்தியாவில் எல்லோருக்கும் தெரிந்திருக்குமா என்றால் தெரியாது என்று பதில் வரலாம்.
ஆனால் இந்தியாவில் ’வாரிசு அரசியல்’ என்றால் அதனை தெரியாமல் யாருமே இருக்க முடியாது. ஏனெனில் சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமர் ஆன நேருவின் காலந்தொட்டே வாரிசு அரசியல் என்பது அனைவருக்கும் பரீட்சையமாகி விட்டது.
எனினும் கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்தியாவில் ’வாரிசு அரசியல்’ என்ற இரட்டை வார்த்தை ஓங்கி ஒலித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு அரசியல் மேடையிலும் மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்களால் அதிகம் பேசப்பட்ட வார்த்தையாக ’வாரிசு அரசியல்’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் தற்போதே தொடங்கிவிட்ட தேர்தல் பிரச்சாரத்திலும் அந்த வார்த்தை எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 28ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்து அமித் ஷா பேசினார்.
அப்போது, ”பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக குடும்ப ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை. தங்கள் வாரிசுகளை முன்னேற்றவே நினைக்கிறார்கள். சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டும் என்று ஆசை. இந்த நடைப்பயணம், தமிழகத்தின் குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கானது.” என்று அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜுலை 29ஆம் தேதி நடந்த திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திமுக குடும்ப கட்சி என்று பேசியிருக்கிறார் அமித் ஷா. கேட்டு கேட்டு புளித்துப் போன ஒன்று. நான் எவ்வளவோ பதில் சொல்லிவிட்டேன். வேற ஏதாவது மாத்தி சொல்லுங்க.
பாஜக தலைவர்களின் வாரிசுகள் அரசியல் பதவியில் இல்லையா? எல்லோரும் நாளைக்கு காலையில் பதவி விலகி விடுவார்களா? பாஜக வாரிசுகளின் மாநில பட்டியலை நான் சொல்ல ஆரம்பித்தால் ஒரு மணி நேரம் ஆகும். அதனால் வேறு ஏதாவது புதுசா சொல்லுங்கள் அமித் ஷா அவர்களே!” என்று மேலோட்டமாக கவுண்ட்டர் கொடுத்தார்.

*உதயநிதியின் பதிலடி!*
ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ, அமித் ஷா போட்ட பாலை நேரடியாக அவருக்கே திருப்பி கொடுத்தார். அவர், “நான் மக்களை சந்தித்து தேர்தலில் வெற்றி பெற்று இன்று எம்.எல்.ஏ ஆகி, தற்போது அமைச்சர் பதவிக்கு வந்திருக்கிறேன். நான் அமித்ஷாவிடம் கேட்கிறேன். உங்கள் மகன் ஜெய்ஷா பிசிசிஐ தலைவர் ஆகியிருக்கிறாரே… அவர் எத்தனை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார்? எத்தனை ரன்கள் அடித்தார்? நான் ஏதாவது கேட்டேனா? ஜெய் ஷா நடத்தி வரும் குஷும் பின்சர்வ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2014-ல் வெறும் ரூ.74 லட்சம் தான். இப்போது அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி. இது எப்படி வந்தது? இந்த திடீர் வளர்ச்சி எப்படி வந்தது?” என கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றார்.
எனினும் அமித்ஷா தரப்பிலோ, பாஜக தரப்பிலோ, உதயநிதியின் கேள்விக்கு எந்தவித விளக்கமும் இதுவரை கொடுக்கவில்லை.
உதயநிதி ஸ்டாலின் இப்படி அமித் ஷாவுக்கு நேரடியாக எழுப்பிய கேள்விகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் மீண்டும் யார் இந்த ஜெய் ஷா? அவர் எப்படி உலகின் மிகப்பெரிய பணம் கொழிக்கும் பிசிசிஐயின் செயலாளர் ஆனார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

யார் இந்த ஜெய்ஷா?
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷாவின் மகன் தான் ஜெய்ஷா என்பது அனைவரும் அறிந்ததே.
பாஜகவில் நுழைவதற்கு முன்னாலேயே, ஆர்.எஸ்.எஸ் மாணவ அமைப்பில் இயங்கி வந்தவர் அமித் ஷா. எனினும் அதிலேயே முழுவதுமாக சாராமல், பாஜகவில் இணைந்த 1987ஆண்டிலேயே சோனால் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியருக்கு செப்டம்பர் 22, 1988ஆம் ஆண்டு பிறந்த ஒரே மகன்தான் ஜெய் ஷா. அவர் நிர்மா பல்கலைக்கழகத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். ஜெயேந்திர சேகலின் கீழ் அகமதாபாத்தில் கிரிக்கெட் மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.
பின்னர் பயிற்சியோடு கிரிக்கெட்டில் இருந்து விலகி விவசாயப் பொருட்ளை விற்பனை செய்யும் ’ஷா டெம்பிள் எண்டர்பிரைஸ்’ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகப் பணியாற்றினார். 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் அக்டோபர் 2016ல் தனது செயல்பாடுகளை நிறுத்தி கொண்டது. அதே நேரத்தில் 2015ல் நிறுவப்பட்ட குசும் ஃபின்சர்வ் நிறுவனத்தில் ஷா 60 சதவீத பங்குகளை கைப்பற்றினார் ஜெய் ஷா.
இதற்கிடையே 2009 ஆம் ஆண்டு முதல் அகமதாபாத்தில் உள்ள மத்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றிய ஜெய் ஷா செப்டம்பர் 2013 இல் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (GCA) இணைச் செயலாளராக ஆனார். எப்படி இளம் வயதில் இவ்வளவு பெரிய பதவி என்றால், அப்போது குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் வேறு யாருமல்ல அவரது தந்தை அமித் ஷா தான்.
தந்தையும் மகனும் சேர்ந்தே இன்று உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானத்தின் கட்டுமான பணியை மேற்பார்வையிட்டு வந்தனர்.
பின்னர் பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த ஆண்டில் தான், ஜெய்ஷா இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலடி எடுத்து வைத்தார். அதாவது 2015ல் பிசிசிஐ நிதி மற்றும் சந்தைப்படுத்தல் குழுவின் உறுப்பினரானார். அதுவரை ஜெய் ஷாவின் பெயர் பெரிய அளவில் வெளியே வரவில்லை.

உச்சநீதிமன்றம் வரை சென்ற ஜெய் ஷா வழக்கு!
இந்த நேரத்தில் தான் ஜெய் ஷாவின் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனம் குறித்து ’தி வயர்’ என்ற ஆங்கில இணையதளம் ’பகீர்’ செய்தி வெளியிட்டது.
அதன்படி, ”2014-15-ம் நிதி ஆண்டில் 50,000 ரூபாயாக இருந்த அந்த நிறுவனத்தின் வர்த்தகம், பாஜக ஆட்சிக்கு வந்த அடுத்த ஒரே ஆண்டில் (2015-16-ம் ஆண்டில்) 16,000 மடங்கு அதிகரித்து 80.5 கோடிக்கு சொத்து மதிப்பு அதிகரித்தது எப்படி?” என ஆங்கில இணையதளம் பரபரப்பு குற்றச்சாட்டை 2017-ம் ஆண்டு கிளப்பியது. இதனை வைத்து எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் சர்ச்சையை எழுப்பிய நிலையில் ஜெய் ஷாவின் பெயர் ஊடகங்களில் அதிகம் அடிபடத் தொடங்கியது.
தன்னைப் பற்றிச் செய்தி வெளியிட்ட இணையதளத்தின் மீது 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார் ஜெய் ஷா.
ஆனால், முதல் நாள் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜெய் ஷா ஆஜராகவில்லை. அதற்கு, அவர் வழக்கறிஞர் சொன்ன காரணம், ”சமூகப்பணியில் இருப்பதால் ஜெய் ஷாவால் ஆஜராக முடியவில்லை” என்றது ஆச்சரியத்தை அளித்தது.
பின்னர் 2 வருடங்களாக நடைபெற்ற இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையில், தீர்ப்பு ஜெய் ஷாவுக்கு சாதகமாக வழங்கப்பட்டது.

பிசிசிஐ பதவி : வாரிசு ஆதிக்கம்!
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 2019ல் குஜராத் கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். அதற்கு அடுத்த ஒரு மாதத்திலேயே உலக விளையாட்டு அமைப்புகளிலேயே வளமானதாக கருதப்படும் பிசிசிஐயின் புதிய செயலாளராக எந்தப் போட்டியுமின்றி ஒன்றரை வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெய் ஷா.
பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து முதல் ஐந்து வருடத்தில் அமைதி காத்த ஜெய் ஷா. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து, தனது தந்தை உள்துறை அமைச்சர் ஆன முதல் வருடத்திலேயே பிசிசிஐ செயலாளர் பதவி பெற்றதால் மீண்டும் ஒட்டுமொத்த மீடியாவின் வெளிச்சத்திற்கு வந்தார் ஜெய் ஷா.
அதே நேரத்தில் அரசியலை போன்றே பி.சி.சி.ஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளில் ஜெய் ஷாவுக்கு முன்னரும் வாரிசுகளின் ஆதிக்கமே அதிகம் இருந்தது அவர் மீதான நெருக்கடியை வெகுவாக குறைத்தது.
இந்தியா சிமென்ட் சீனிவாசன் மகள் ரூபா குருநாத், டால்மியா மகன் அவிஷேக் டால்மியா, அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட் எனப் பலரும் பிசிசிஐயின் முக்கிய பதவியில் இருந்துள்ளனர்.
ஜெய்ஷா வகிக்கும் பதவிகள்!
பிசிசிஐ வரலாற்றில் இளம் செயலாளராக அறியப்பட்ட ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எதிர்கால CEC கூட்டங்களுக்கு பிசிசிஐ பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜனவரி 2021ஆம் ஆண்டு, 24 உறுப்பினர் நாடுகளைக் கொண்ட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து தனது முதல் பணிக்காலம் முடிந்த நிலையில் கடந்தாண்டு மீண்டும் பிசிசிஐ செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார் ஜெய் ஷா.
அதோடு, ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தற்போது உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் நுழைவாரா ஜெய்ஷா?
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் தனது தந்தையுமான அமித் ஷாவும், கிரிக்கெட் சங்கத்தில் முக்கிய பதவி பெற்று பின்னர் அரசியலில் வெற்றி கண்டவர்கள்.
தற்போது பிசிசிஐ செயலாளர் பொறுப்பில் இருந்துகொண்டே மறுபுறம் அப்பாவின் அரசியல் விளையாட்டுகளில் தற்போது மறைமுகமாக செயல்பட்டு வரும் ஜெய் ஷா, வருங்காலத்தில் தனது தந்தையை போலவே நேரடியாக அரசியலில் ஈடுபடவும், வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது.
அவ்வாறு வரும் பட்சத்தில் ஜெய் ஷா குறித்து அமித் ஷாவிடம் உதயநிதி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அந்த சம்பவம் இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம்!
கிறிஸ்டோபர் ஜெமா

Comments are closed.