=கொரோனா பரவ யார் காரணம்?

Published On:

| By Balaji

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகளவில் பரவி வருகிற நிலையில், இதற்குக் காரணம் பயிற்சி மருத்துவர்களும் அரசியல்வாதிகளும்தான் என்கிறார்கள் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்.

தமிழகத்தில் மொத்தம் 266 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன. இதில் அரசு மருத்துவமனைகளில் 69 மையங்களும், தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிகளில் 197 பரிசோதனை மையங்களும் உள்ளன.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒரே நாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த எண்ணிக்கை 1,25,230 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதம் இறுதிக்குள் தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டும். அதுபோன்று கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என மருத்துவத்துறையினர் கூறுகின்றனர்.

இந்தளவுக்கு கொரோனா தொற்று பரவ யார் காரணம்? இறப்பவர்கள் அனைவரும் கொரோனா தொற்றால்தான் மரணமடைகிறார்களா என்று அரசு மருத்துவமனையின் உயர் அதிகாரிகளிடம் விசாரித்தபோது, இதற்கு காரணம் அரசுதான் என கூறுகின்றனர். இதுகுறித்து மின்னம்பலத்திடம் விளக்கம் அளித்த மருத்துவத்துறையினர்,

”அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கவில்லை. மருத்துவர்களும் உயர் அதிகாரிகளும் கொரோனாவுக்கு பயந்து ஒதுங்குகிறார்கள். கொரோனா வார்டில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் செவிலியர்கள், உதவியாளர்கள், துப்புரவுத் தொழிலாளிகள் உள்ளிட்டோர் வீட்டுக்கு செல்லாமல் விடுதிகளில் தங்கிவர ஏற்பாடுகள் செய்துகொடுக்கவேண்டும். அவர்களுக்குத் தனி வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். கொரோனா முதல் அலையின்போது செய்யப்பட்ட இந்த ஏற்பாடுகள், தற்போது செய்யப்படவில்லை.

(பிபிஇ) முழு கவச உடை எனப்படும் பர்சனல் புரடக்ட்டிவ் எக்கிப்மெண்ட் உடையை போட்டுக்கொண்டு கொரோனா வார்டில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முன்பு ஷாப்ட்டாக இருந்த பிபிஇ உடைகள், தற்போது சாக்குபோல் இருக்கிறது.

கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டுக்கு சென்று, நோயாளிகளிடம் மாத்திரை, மருந்து வந்ததா ஊசி போட்டார்களா என்று செவிலியர்களின் கண்காணிப்பாளர்கள் கேட்பதும் இல்லை, அதுகுறித்து கண்காணிப்பதும் இல்லை. அதுபோன்று பெரும்பாலான மருத்துவமனைகளில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் கொரோனா வார்டுக்கு செல்வதில்லை.

இவர்களுக்கு பதிலாக பயிற்சி மருத்துவர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் கொரோனா வார்டுக்கு சென்றுவிட்டு, மற்ற வார்டுகளுக்கும் செல்கின்றனர். அதுமட்டுமில்லாமல், வீடு, ஹோட்டல், கடைவீதி என அனைத்து இடங்களுக்கும் அவர்கள் செல்வதால், அதன்மூலம் கொரோனா பரவுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

செவிலியர் மற்றும் ஊழியர்களுக்குத் தங்கும் வசதிகள் ஏற்பாடுகள் செய்துகொடுக்காததால் வேலை முடித்துவிட்டு பேருந்திலும், ஆட்டோவிலும் வீட்டுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும்போது பயணத்தின்போது மற்றவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமில்லாமல், அரசியல்வாதிகள் குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அவர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு பயந்து அதிகாரிகளும் செவிலியர்களை அரசியல்வாதிகள் வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள். இந்த போக்கு மிகவும் ஆபத்தானது.

இணைநோய் காரணமாகதான் பெரும்பாலும் இறப்புகள் ஏற்படுகின்றன. பிபி, சுகர், இருதய நோயாளி, ஆஸ்துமா, கிட்னி பிரச்சனைகள் உள்ளவர்கள் வழக்கமாக குடும்ப மருத்துவர்களை சந்திக்க முடியாமல் ஒரே மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்கிறார்கள். தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாத நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

தற்போது பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால், மற்ற நோயாளிகளை கவனிக்க முடியாமல் போகிறது. அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் கிட்னி டாக்டர், சுகர் டாக்டர், இருதய நோய் டாக்டர், குழந்தை டாக்டர்கள் என அனைத்து டாக்டர்களும் கொரோனா நோயாளிகளை பார்த்து வருவதால், மற்ற நோயாளிகளை கவனிக்க முடியவில்லை.

புதிய முதல்வராகப் பொறுப்பேற்கப் போகும் ஸ்டாலின், மேற்கொண்ட விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்தால் மூன்று வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்” என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share