prime ministerial candidate India alliance meeting
இந்தியா கூட்டணியின் 4ஆவது ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 19) டெல்லியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் 28 கட்சிகள் பங்கேற்றன. காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் இருந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டனர்.
திமுக எம்.பி.டி.ஆர் பாலு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. பிரதமர் வேட்பாளர், தொகுதி பங்கீடு, எம்.பி.க்கள் இடை நீக்கம் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா, கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முன்மொழிந்தார்.
ஆனால் கூட்டணி கட்சிகளிடையே இதற்கு ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.
கூட்டத்துக்கு பின் செய்தியாளார்களைச் சந்தித்த மம்தா பேனர்ஜி, “மிகவும் விரும்பப்படும் இந்த பதவிக்கு கார்கே பொறுத்தமானவராக இருப்பார். எனினும் எதிர்வரும் தேர்தலில் கூட்டணி வெற்றி பெற்ற பின்னரே முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலுக்குப் பின் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம் என்று மம்தா நேற்று கூறியிருந்த நிலையில் இன்று கார்கே பேரை முன்மொழிந்திருக்கிறார்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
“எங்களின் இலக்கு தேர்தலில் வெற்றி பெறுவதுதான். அதன்பிறகு யார் பிரதமர் என முடிவு செய்வோம்.
பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பி.க்கள் இருப்பார்கள். அதன்பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். எம்.பி.க்கள் இல்லை என்றால் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி என்ன பயன்.
எதிர்காலத்தில் கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் பேசியுள்ளன. தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை மாநில தலைவர்கள் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தீர்க்கப்படாமல் இருந்தால் கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர்கள் தலையிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கார்கேவை பிரதமர் வேட்பாளராக மம்தா முன்மொழிந்தது பற்றிய கேள்விக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “இந்த பரிந்துரைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

இந்தியா கூட்டணி கூட்டத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து வரும் டிசம்பர் 22 ஆம் தேதி அனைத்து எதிர்கட்சிகளும் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
“வானிலை மையம் சரியாக கணிக்கவில்லை” : சிவ்தாஸ் மீனா பேட்டி!
கடும் போராட்டம்: ரூபாய் 8.4 கோடிக்கு தட்டித்தூக்கிய சென்னை… யாருப்பா இந்த 20 வயசு பையன்?
prime ministerial candidate India alliance meeting
