T20 World Cup 2022 : முதல் ஹாட்ரிக் சாதனை… யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

Published On:

| By christopher

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பையில் முதல் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர் என்ற சாதனையை சென்னையில் பிறந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்காக விளையாடி வரும் கார்த்திக் மெய்யப்பன் படைத்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பதை அரிதாகவே பார்க்க முடியும். அதிலும் உலகக்கோப்பை போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுப்பது ஒரு வீரரின் உயரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 3வது நாளிலேயே ஹாட்ரிக் சாதனை படைத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் இளம் வீரரான கார்த்திக் மெய்யப்பன்.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் சுற்றுப் போட்டி ஜீலோங்கில் உள்ள சைமண்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற யுஏஇ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது இலங்கை அணி. முதல் ஆட்டத்தில் கத்துக்குட்டி நமீபியா அணியிடம் அடிபணிந்த நிலையில், இந்த ஆட்டத்தை இலங்கை அணி கவனமுடன் நிதானமாக துவங்கியது.

ஹாட்ரிக் விக்கெட்டில் சிதறிய இலங்கை!

இதனால் 14 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது இலங்கை அணி. இந்நிலையில் 15 ஓவரை யுஏஇ அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் கார்த்திக் மெய்யப்பன் வீசினார். அதுவரை நன்றாக விளையாடிய இலங்கை அணி மெய்யப்பனின் அந்த ஓவரில் சட்டென சிதற தொடங்கியது.

who is the Karthik Meiyappan

முதல் மூன்று பந்துகளில் 3 ரன்கள் எடுத்த நிலையில், 4வது பந்தில் இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பஷில் ராஜபக்‌ஷே விக்கெட்டை வீழ்த்தினார். 5வது பந்தில் தனது கூக்லி பந்துவீச்சில் அசலங்காவை அலேக்காக டக்அவுட் ஆக்கினார்.

இதனையடுத்து பரபரப்பான ஓவரில் கடைசி பந்தினை வீசினார் மெய்யப்பன். இதில் இலங்கை அணி கேப்டன் ஷனகா கிளீன் போல்டாக, நடப்பு உலகக்கோப்பை போட்டியில் முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

மேலும் டி20 உலகக்கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 5வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

who is the Karthik Meiyappan

யார் இந்த கார்த்திக் மெய்யப்பன்?

ஆகா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் கார்த்திக் மெய்யப்பனா… பெயரைக் கேட்டதும் தமிழ் பெயர் போன்று தோன்றுகிறதே… அவர் இந்தியரா என்று உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? ஆம் அதில் 100 சதவீதம் உண்மை உள்ளது என்பது அனைவருக்கும் நிச்சயம் ஆச்சரியமளிக்கும்.

22 வயதான கார்த்திக் மெய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். இவர் 2000 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது குடும்பம் கடந்த 2006ம் ஆண்டு துபாய்க்கு குடிப்பெயர்ந்த நிலையில், அங்குள்ள வின்செஸ்டர் பள்ளியில் கல்வி பயின்றார்.

who is the Karthik Meiyappan

அப்போது வலது கை சுழற்பந்து வீச்சாளராக கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வந்த கார்த்திக் மெய்யப்பன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை U-19 போட்டியில் யுஏஇ அணிக்கு மெய்யப்பன் கேப்டனாக செயல்பட்டார், அதனைத் தொடர்ந்து வங்காளதேசம் 2020ம் ஆண்டு நடைபெற்ற U-19 உலகக் கோப்பையிலும் அவர் தனது நாட்டுக்காக விளையாடினார். அதே ஆண்டில் யுஏஇ யில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியிலும் இடம்பிடித்தார்.

பின்னர் கடந்த ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் சர்வதேச டி20 தொடரில் அறிமுகமானார் மெய்யப்பன். அதனை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடருக்கும் முதன் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

who is the Karthik Meiyappan

இந்நிலையில் தனது முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்துள்ளார் கார்த்திக் மெய்யப்பன்.

இதுவரை இந்திய அணி வீரர்கள் யாரும் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹாட்ரிக் சாதனை படைத்தது இல்லை. இந்நிலையில் இந்திய வம்சாவளியும், தமிழகத்தில் பிறந்தவருமான கார்த்திக் மெய்யப்பன் சாதனை குறித்து பலரும் சமூக வலை தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

எனினும் இலங்கைக்கு எதிரான முதல் சுற்று ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளது.

ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை ஆட்டங்களில் இதுவரை ஹாட்ரிக் சாதனை படைத்தவர்கள் பட்டியல்:

பிரட் லீ vs பங்களாதேஷ், 2007

கர்டிஸ் கேம்பர் vs நெதர்லாந்து, 2021

வனிந்து ஹசரங்க vs தென்னாப்பிரிக்கா, 2021

காகிசோ ரபாடா vs இங்கிலாந்து, 2021

கிறிஸ்டோபர் ஜெமா

திருப்பதி போறீங்களா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி சொன்ன பொய்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share