மாநிலங்களவை செல்லும் பெண் கவிஞர் : யார் இந்த சல்மா?

Published On:

| By Minnambalam Desk

who is Salma and what her background?

திமுக சார்பில் மாநிலங்களவைக்குச் செல்லவிருப்பவர்கள் பட்டியலில் ரொக்கையா மாலிக் என்கிற சல்மா என்னும் பெயரைப் பார்த்ததும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். இவர் கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி. ஆனால் ஆரவாரமான அரசியலுக்கோ பரபரப்பான எழுத்துக்கோ இவரிடம் இடம் இல்லை. அதனாலேயே பலருக்கும் இவரைத் தெரியாது. ஆனால், இவரைத் தெரிந்தவர்களுக்கு இவர் மீது மரியாதை அதிகம். காரணம், அவருடைய நேர்மை, உழைப்பு, அன்பு, எழுத்துத் திறமை. எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இலக்கிய உலகில் அழுத்தமான தடம் பதித்துவருபவர் சல்மா. who is Salma and what her background?

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த இவர் தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கினார். சிறிய ஊர்களையும் கிராமங்களையும் சேர்ந்த பலர் எழுத்தாளர்களாகியிருக்கிறார்கள். இவர் மட்டும் என்ன சிறப்பு என்ற கேள்வி எழலாம்.

சல்மா எட்டாம் வகுப்பைத் தாண்டவில்லை. படிக்கவைக்க அவர் குடும்பத்துக்குப் பண வசதி இல்லையா? அதெல்லாம் ஒன்றுமில்லை. அவர் பிறந்த ஊரில், அவர் சார்ந்த தமிழ் இஸ்லாமியச் சமூகத்தில் பெண்கள் படிப்பது என்பது இயல்பான ஒன்றல்ல. பெண்கள் வயதுக்கு வரும்வரை படிக்கவைப்பார்கள். அதன் பிறகு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்யாணம் செய்து வைத்துவிடுவார்கள். கல்யாணத்திற்குப் பிறகு படிப்பது என்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத சங்கதிகள். ரொக்கையா பேகம் என்னும் இயற்பெயர் கொண்ட சல்மாவுக்கும் 17 வயதிலேயே திருமணமாகிவிட்டது. ஆனால் அதுவரை படித்திருந்தாலும் குறைந்தது 10ஆம் வகுப்பு தேறியிருக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமாதான் சல்மாவின் கல்வியை முடக்கிப்போட்டது என்று சொன்னால் நம்புவீர்களா?

8ஆம் வகுப்பு படிக்கும்போது சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பள்ளித் தோழிகளுடன் உள்ளூர்த் திரையரங்கிற்குச் சென்றிருக்கிறார். அவர் படம் பார்த்த விஷயம் குடும்பத்திற்கும்
ஊருக்கும் தெரிந்துவிட்டது. அதனால் முகம் சிவந்த அவர் குடும்பம் பள்ளிக்கூடத்திற்கே போக வேண்டாம் என்று சொல்லிவிட்டது.

இலக்கிய வாசனை

என்றாலும் சல்மா தளரவில்லை. தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல் ஹமீதின் (கவிஞர் மனுஷ்யபுத்திரன்) உதவியால் நிறைய புத்தகங்களைப் படித்தார். அந்த நூல்கள் அவருடைய சிந்தனையின் வாசல்களை அகலமாகத் திறந்தன. உலகை அறிய வழி வகுத்தன. இந்த உலகில் தான் யார், தன்னுடைய இடம் எது, ஏன் சிலருக்கு மட்டும் சில விஷயங்கள் கிடைப்பதில்லை என்பது குறித்த கேள்விகள் முளைத்தன. இந்தக் கேள்விகளை முன்வைத்து அவர் எழுதத் தொடங்கினார். இப்படித்தான் ராஜாத்தி என்னும் சிறுமி, சல்மா என்னும் கவிஞராகப் பரிணமித்தார்.

சல்மாவின் படைப்புலகம்

சல்மாவின் கவிதைகள் பெண்களின் அக உலகையும் தனிமையையும் பாடுபொருளாகக் கொண்டவை. பெண்கள்மீதான அடக்குமுறைகள் எவ்வளவு நுட்பமான தளங்களில் செயலாற்றுகின்றன என்பதை அவர் கவிதைகள் கூர்மையாகவும் ஆரவாரமற்ற தொனியிலும் கூறுகின்றன. அவருடைய சமூகமும் குடும்பமும் அவர் எழுதிய இந்தக் கவிதைகளை ரசிக்கவில்லை. என்றாலும் அவர் எழுத்தின் மூலம்தான் விடுதலை என்பதை உணர்ந்தவராகத் தொடர்ந்து எழுதிவந்தார். பிறரது கட்டுப்பாடுகள் தன் எழுத்தைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்த உறுதியே இலக்கிய உலகில் இவருக்கென்று ஓர் இடத்தை உறுதிசெய்தது.

1990களில் தமிழ் இலக்கியத்தில் அதுவரை அதிகம் பங்குபெறாமல் இருந்த பிரிவுகளிலிருந்து பலரும் எழுதத் தொடங்கினார்கள். தலித்துகள், இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்ட இதர பிரிவுகளைச்
சேர்ந்தவர்கள் எனப் பலர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். தமிழ் இலக்கியத்திற்கு இது புது வரவாக இருந்தது. இந்தப் புதிய எழுத்துக்களில் சல்மாவின் பங்களிப்பு கணிசமானது. பெண்களின் அக உலகையும் வெளியில் தெரியாத விதங்களில் அவர்கள் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கான புழங்குவெளி குறுக்கப்படுவதையும் சல்மா வலுவான கவிதை மொழியில் வெளிப்படுத்தினார். பல பெண்களுக்கு உத்வேகமூட்டும் கவிதைகளாக அவை அமைந்தன. தமிழில் பெண் கவிதைகளின் புதிய அலையை உருவாக்கியதில் சல்மாவின் கவிதைகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான சுந்தர ராமசாமியின் அறிமுகம் 1995இல் ஏற்பட்டது. சுந்தர ராமசாமியின் வழிகாட்டுதலும் அவர் தந்த ஊக்கமும் சல்மாவின் இலக்கியப் பயணத்திற்குப் பெரிதும் துணைபுரிந்தன. சல்மாவின் நூல்களை வெளியிட்டுவரும் காலச்சுவடு பதிப்பகமும் அவருடைய எழுத்து தமிழகத்திலும் அதைத் தாண்டியும் பலரைச் சென்றடைவதில் முக்கியப் பங்காற்றிவருகிறது. இரண்டாம் சாமங்களின் கதை என்னும் நாவலை 2003இல் எழுதினார். தமிழ்நாட்டின் சிறு நகரங்களைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களின் அக உலகைச் சித்தரித்த அந்த நாவல், தமிழ் இலக்கிய உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் ஆங்கில மொழியாக்கம் ஆசியப் படைப்புகளுக்கான புக்கர் விருதின் தேர்வுப் பட்டியலில் இடம்
பெற்ற முதல் தமிழ்ப் படைப்பு. இதையடுத்து மனாமியங்கள், அடைக்கும் தாழ் என இன்றைய சமூகத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பற்றிய நாவல்களையும் முஸ்லிம் பெண்களின் இன்றைய நிலையை உணர்த்தும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

உலகமே வீடு

சல்மாவின் படைப்புகள் ஆங்கிலம் மலையாளம் ஆங்கிலம், மராத்தி, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன. சிற்றூரில் பிறந்து பள்ளிப் படிப்பைக்கூட முடிக்க முடியாத நிலையில் வாழ்ந்துவந்த சல்மா, தன் எழுத்தின் மூலம் உலகம் சுற்றும் படைப்பாளியாக மாறினார். வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்து உலகமே என் வீடு என்ற நிலைக்கு அவர் வாழ்க்கை விரிவடைந்தது. 2002இல் இலங்கையில் நடந்த சர்வதேசப் பெண்ணுரிமை மாநாட்டில் பங்குகொள்ள அழைக்கப்பட்டார். 2006இல் ஃப்ராங்க்பர்ட் புத்தக விழா, 2009இல் லண்டன் புத்தகக் கண்காட்சி, 2010இல் பெய்ஜிங் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் பங்கேற்றார். 2007இல் சல்மாவின் படைப்புகளை முன்வைத்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் நார்மன் கட்லர் நினைவுக் கருத்தரங்கு நடைபெற்றது. 2007இல் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FETNA) தமிழ் விழா, உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, சிக்காகோ தமிழ்ச்சங்கப் பொன்விழா ஆகியவற்றை உள்ளடக்கிய முப்பெரும் விழாவில் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்பட்டார்.

அரசியல் பணிகள்

எழுத்துப் பயணத்துடன் அரசியலிலும் ஈடுபட்ட சல்மா, தன் கணவர் அப்துல் மாலிக் சார்ந்திருந்த திமுகவில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 2004இல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். பொன்னாம்பட்டி துவரங்குறிச்சி பேரூராட்சி பெண்களுக்கான தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. சல்மா அதில் போட்டியிட்டுத் தேர்தலில்
வென்றார். தொகுதியில் சிறப்பான பணிகளைச் செய்ததால் பரவலாக அவர் கவனிக்கப்பட்டார். 2006இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார். சமூகநல வாரியத்தில் பல நலத்திட்டங்களை முன்னெடுத்தார்.
திருச்சி நகரில் பிச்சை எடுப்பவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தைத் தொண்டு நிறுவனங்கள் மூலம் ஒருங்கிணைத்தார். கிராமத் தத்தெடுப்புத் திட்டம் மூலம் கிராமத்தில் பெண் முன்னேற்றம்,
அனைவருக்குமான கல்வி, போன்ற திட்டங்களை முன்னெடுத்தார். திருச்சி மாவட்டத்தில் திருநங்கையருக்கான ஆலோசனை மையங்கள், ஆதரவற்ற பெண்களுக்கான கணினி மையங்கள்,மாணவர்களுக்கான ஆலோசனை மையங்களை அவரது தலைமையில் சமூகநல வாரியம் ஏற்படுத்தியது. 2018ஆம் ஆண்டு திராவிடர் கழகத்தின் ‘தந்தை பெரியார் விருது’ சல்மாவுக்கு வழங்கப்பட்டது.

இவருடைய அசாத்தியமான பயணத்தைச் சித்தரிக்கும் விதமாக ‘சல்மா’ என்னும் ஆவணப்படம் 2013இல் எடுக்கப்பட்டது. இது சல்மாவின் தன்வரலாற்றையும் அவர் சந்தித்த ஒடுக்குமுறைகளின் பின்னால் உள்ள சமூக, சமய, பண்பாட்டு, அரசியல் சிக்கல்களையும் பற்றியது. இப்படத்தை கிம் லோங்னோரோ (Kim Longinotto) இயக்கினார். இப்படம் சண்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டு, பின்னர் பல நாட்டு விழாக்களிலும் நிகழ்வுகளில் திரையிடப்பட்டது.

தன் சமூகம் தனக்கு முன் கட்டியெழுப்பியிருந்த தடைகளையும், அதனால் விளைந்த பிரச்சனைகளையும் அவர் தாண்டி வந்த விதம் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமின்றி, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பெரும் தன்னம்பிகையை அளிக்கின்றன. அரசியலை அதிகாரத்துக்கான வாகனமாக எண்ணாமல் மக்கள் தொண்டுக்கான வாய்ப்பாகப் பார்த்து இவர் செய்துவந்த சேவைகளை அங்கீகரிக்கும் விதமாகவே திமுக தலைமை அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கியிருக்கிறது.

சல்மாவின் நூல்கள்

கவிதைத் தொகுப்புகள்

🔷ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
🔷பச்சை தேவதை
🔷 தானுமானவள்

நாவல்கள்

🔷இரண்டாம் ஜாமங்களின் கதை
🔷மனாமியங்கள்
🔷அடைக்கும் தாழ்

சிறுகதைத் தொகுப்புகள்

🔷 சாபம்
🔷பால்யம்

அபுனைவு

🔷 கனவு வெளிப் பயணம்

தொகுப்பு: மின்னம்பலம் ஆசிரியர் குழு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share