சமீபத்தில் மும்பையில் நடந்த WTA 125 மும்பை டென்னிஸ் தொடரில் கோவையை சேர்ந்த மாயா ராஜேஷ்வரன் ரேவதி அரையிறுதி வரை முன்னேறினார். ரேங்கே இல்லாமல்தான் மும்பை டென்னிஸ் தொடரில் மாயா பங்கேற்றார். ஆனால், பல முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறினார். அரையிறுதியில் மாயா உலக தரவரிசையில் 117வது இடத்திலுள்ள டெயின்மேனிடம் தோல்வியடைந்தார்.
இதனால், டென்னிஸ் உலகில் அனைவரையும் கவர்ந்துள்ளார். பல முன்னாள் டென்னிஸ் வீரர்கள் மாயா விளையாடும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சானியா மிர்சாவை மிஞ்சும் வகையில் மாயாவின் முன்னேற்றம் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு பிறந்த இளம் வீராங்கனையான இவர் மும்பை போட்டிக்கு பிறகு உலக தரவரிசையில் 700க்குள் இடம் பெறுவார். டபிள்யூ.டி.ஏ தரவரிசையில் இடம் பெற்ற முதல் இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும்.
தேசிய டென்னிஸ் சாம்பியனான வைதேகி ‘சௌத்ரியுடன் மாயா ஒரு போட்டியில் மோதியுள்ளார். அதில் வைதேகி வெற்றி பெற்றாலும், மாயாவின் திறமையை அவர் பாராட்டியுள்ளார். “மாயா ஒரு அற்புதமான போட்டியாளர் 15 வயதிலேயே மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். 5 புள்ளிகளை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் போராடுகிறார். இத்தகைய இளம் வயதில் இப்படி ஒரு தன்னம்பிக்கை கொண்ட வீராங்கனையை பார்ப்பது அரிது’ என்கிறார் வைதேகி.

மாயா விரைவில் ஸ்பெயினில் மலார்க்கா நகரில் உள்ள ரஃபேல் நடால் அகாடமியில் பயிற்சி பெற உள்ளார். சிறு வயதிலேயே அங்கு பயிற்சி பெறுவதால் சர்வதேச டென்னிஸ் அரங்கில் மாயா பல சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது. 100 சதவிகிதம் ஸ்காலர்ஷிப்புடன் ஒரு வருடம் ரஃபேல் நடாலின் அகாடமியில் பயிற்சி பெற மாயாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாயாவின் மேஜிக்கால் இந்தியாவில் மகளிர் டென்னிஸ் வளர்ச்சியடையும் என்கிற நம்பிக்கையும் துளிர்த்துள்ளது.
சானியா மிர்ஸா கடந்த 2007 ஆம் ஆண்டு பெண்கள் தரவரிசையில் அதிகபட்சமாக 27வது ரேங்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாயாவும் டென்னிஸில் இத்தகைய இமாலய இலக்கை எட்டி கோவை, தமிழகம், இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று நம்புவோம்.
