கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஹம் சாத் சாத் ஹைன் பட சூட்டிங் நடந்தது. இந்த சமயத்தில் ஜோத்பூர் காட்டுக்குள் சென்ற நடிகர் சல்மான்கான் இரு பிளாக் பக் மான்களை சுட்டு கொன்ற வழக்கில் சிக்கினார்.
இந்த சமயத்தில் மும்பையில் சல்மானின் நெருங்கிய நண்பரும் அரசியல்வாதியுமான பாபா சித்திக்கை கொன்ற லாரன்ஸ் பிஷ்னோய்க்கு 5 வயதுதான் ஆகியிருந்தது. அந்த இளம் வயதிலேயே லாரன்ஸ் பிஷ்னோய், சல்மானை பழிவாங்குவேன் என்று சபதம் போட்டுள்ளார். அப்படியென்றால், பிஷ்னோய் மக்களுக்கும் பிளாக்பக் மான்களுக்கும் அப்படி என்ன பந்தம் உள்ளது? என்கிற கேள்வி இங்கே வருகிறது அல்லவா? . அந்த பந்தம் உருவாவதற்கு காரணம் என்னவென்று பார்க்கலாம்.
சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு பிஷ்னோய் இன மக்களுக்கு ஜாம்பேஷ்வர் என்ற மகா துறவி வழிகாட்டுதலாக இருந்துள்ளார். அவர் 29 கொள்கைகளை வகுத்துள்ளார். அதில், பிளாக்பக் உள்ளிட்ட வன உயிரினங்களை காக்க வேண்டும் . சைவ உணவுகளை மட்டும்தான் உண்ண வேண்டும் என்பதும் முக்கியமானது. தங்கள் குரு ஜாம்வேஷ்வரின் மறு பிறவியாகவே பிளாக்பக் மான்களை அந்த இன மக்கள் கருதுகின்றனர். இதனால், தாயை இழந்த மான்களுக்கு தாயாக மாறி பிஷ்னோய் இன பெண்கள் தாய்ப்பாலும் கொடுப்பது உண்டு. அதே போல, மரங்களையும் இந்த இன மக்கள் காத்து வருகின்றனர்.
கடந்த 1730 ஆம் ஆண்டு ஜோத்பூர் அருகே கேஜர்லி என்ற கிராமத்தில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராடிய 362 பிஷ்னோய் இன மக்கள் தங்கள் உயிரையும் இழந்தனர்.
ஜோத்பூர் மகாராஜா புதிய அரண்மனை ஒன்றை கட்டுவதற்காக மரங்களை வெட்டிய போது, அமிர்தா தேவி என்ற பெண் தலைமையில் பிஷ்னோய் மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். அப்போது, மகாராஜா உத்தரவின் பேரில் இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதனால்தான் 1998 ஆம் ஆண்டு சல்மான்கான் மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கிய போது, பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கானுக்கு எதிராக போராட்டமும் நடத்தினார்கள் .
இந்த நிலையில்தான் மஹாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய்க்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுக்கு மிக நெருக்கமானவர். சிறையில் இருந்தபடியே கூலிப்படையாக செயல்பட்டு கொலை சம்பவங்களை அரங்கேற்றுவது லாரன்சின் வழக்கம்.
இவருக்கு ஆதரவாக 700 பேர் துப்பாக்கி ஏந்திய கூலிப்படையினர் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இவர்கள் பணத்துக்காக எதையும் செய்ய தயங்காதவர்கள். இந்த கும்பல் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பரந்து கிடக்கிறது.
தந்தை போலீஸ் கான்ஸ்டபிள், செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் பிறந்த லாரன்ஸ் கிரிமினலாக மாறியது எப்படி தெரியுமா?
கடந்த 1993ம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த லாரன்ஸ்,சண்டிகரிலுள்ள டிஏவி கல்லூரியில் படித்தார். இந்த சமயத்தில் அவருக்கு ஒரு காதலி இருந்துள்ளார். கல்லூரி தேர்தலில் லாரன்ஸ் போட்டியிட்ட போது, அவருடைய எதிரிகள் அவர் காதலித்த பெண்ணை உயிருடன் தீ வைத்து கொளுத்தி கொன்றுள்ளனர். இதற்கு பழிக்கு பழியாக பல மாணவர்களை லாரன்ஸ் பழி வாங்கியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம்தான் லாரன்ஸ் பிஷ்னோய் கிரிமினலாக மாற முக்கிய காரணமாக இருந்துள்ளது.
சண்டிகரில் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிஷ்னோய் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நான்கில் விடுதலை செய்யப்பட்டாலும் மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு, பஞ்சாபில் உள்ள முக்த்சர் அரசு பல்கலை தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர் ஒருவரை லாரன்ஸ் பிஷ்னோய் சுட்டுக்கொன்ற போது, பஞ்சாப் மாநிலமே அதிர்ந்தது.
கடந்த 2014 ஆம் ஆண்டு ராஜஸ்தான் போலீஸ் என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோயை போட்டு தள்ள பார்த்தது. அப்போது, தப்பிய அவரை ராஜஸ்தானின் பாரத்பூர் சிறையில் அடைத்தது. பிறகு 2021 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் இவr மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை டெல்லி திஹார் சிறைக்கு போலீசார் மாற்றினர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் உள்ள சம்பத் நெஹ்ரா நடிகர் சல்மான் கானை அவரது வீட்டருகே கொலை செய்ய முயற்சி செய்து பிடிபட்டார். குற்றத்தை ஒப்புக்கொண்டார். நீதிமன்ற விசாரணையின் போதும், ஜோத்பூரில் சல்மான் கானை சுட்டு கொல்வோம் என பகிரங்க மிரட்டல் விடுத்ததும் கவனிக்கத் தக்கது.
கடந்த 2022ம் ஆண்டு பஞ்சாபை சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூசேவாலா படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய ரவுடியும் காலிஸ்தான் ஆதரவாளருமான கோல்டி பிரார் பொறுப்பேற்றார். அப்போது, அவர் திஹார் சிறையில் இருந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக பகிரங்கமாக அறிவித்தார். இதனால், லாரன்சுக்கு காலிஸ்தான் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவர், சிறையில் இருந்தாலும் 700 பேர் கொண்ட கும்பல் லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்பில் உள்ளது. இதனால், எத்தகைய கொலையையும் இந்த கும்பலால் எளிதாக செய்து முடித்து விடுகிறதாம். தற்போது, சல்மானின் நெருங்கிய நண்பரான பாபா சித்திக் கொல்லப்பட்டதையடுத்து சல்மானுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி ஹர்நாத் சிங் யாதவ், மானை கொன்றதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்காக பிஷ்னோய் மக்களிடத்தில் சல்மான் கான் மன்னிப்பு கோர வேண்டுமென்று எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.
மேலும், நீங்கள் பெரிய நடிகராக இருக்கலாம். இந்த நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உங்களுக்கு இருக்கலாம். அதே வேளையில் , பிஷ்னோய் இன மக்களின் நம்பிக்கைக்கு விரோதமாக செயல்படக் கூடாது என்று சல்மானுக்கு அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
சல்மான்கான் மான்கள் வேட்டையாடிய வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேலும், தான் மானை வேட்டையாடவில்லை இதனால் பிஷ்னோய் இன மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று சல்மான்கான் மன்னிப்பு கேட்க மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சென்னையில் வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதைகள் லிஸ்ட் இதோ!
2 நாட்களுக்கு ரெட் அலர்ட்: எந்தெந்த மாவட்டங்களில் அதிகனமழை?
