சிறப்புக் கட்டுரை: யார் இந்த துஷ்யந்த்?

Published On:

| By Balaji

முகேஷ் சுப்ரமணியம்

கட்சி துவங்கிய 319 நாட்களிலேயே ஹரியானா மாநிலத்தில் யார் ஆட்சியமைக்க வேண்டும் என தீர்மானிக்கக் கூடிய ‘கிங் மேக்கராக’ அசுர வளர்ச்சியை பெற்றிருக்கும் துஷ்யந்த் சவுதாலா தான், இந்த கணத்தில் அதிகம் கவனிக்கப்படும் நபராக மாறியிருக்கிறார்.

ADVERTISEMENT

90 உறுப்பினர்களைக் கொண்ட ஹரியானா சட்டமன்றத்தில், எந்தவொரு கட்சியும் சொந்தமாக பெரும்பான்மையைப் பெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) ஹரியானாவில் ‘சர்ப்ரைஸ் பேக்கேஜாக’ பத்து இடங்களை வென்றிருக்கிறது. கணிசமான தொகுதிகளை வென்றுள்ள ஜனநாயக ஜனதா கட்சி மீதுதான் தற்போது ஒட்டுமொத்த அரசியல் நோக்கர்களின் கவனமும் திசை திரும்பியிருக்கிறது.

இந்தக் கட்சி யாரை ஆதரிக்கிறார்களோ அவர்களே ஹரியானாவில் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஜே.ஜே.பி-யின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தற்போதைய அரசியல் சூழலைப் பொறுத்த மட்டில், ‘கிங் மேக்கராக’ பார்க்கப்படும் அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இதற்கும் கடந்த ஆண்டின் இறுதியில் தான் இக்கட்சியே தொடங்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். யார் இந்த துஷ்யந்த்??

ADVERTISEMENT

துஷ்யந்த் சவுதாலா, இந்தியாவின் முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் கொள்ளுப் பேரனும், ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஓம்பிரகாஷ் சௌதாலாவின்(மாநில முதல்வராக நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்) பேரனுமாவார்.

அஜய்சிங் மற்றும் அபய்சிங் ஆகியோர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன்கள். துஷ்யந்தின் தந்தை அஜய் சவுதாலாவும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவ்வகையில் இக்குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசாக அறியப்படுபவர் துஷ்யந்த். இவரது மனைவி மேக்னா சவுதாலா மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி பரம்ஜீத் அஹ்லவத்தின் மகள்.

ADVERTISEMENT

ஹிசார் மாவட்டத்தில் தரோலியில் பிறந்த துஷ்யந்த், ஹிசாரில் உள்ள செயின்ட் மேரி பள்ளியிலும், இமாச்சல பிரதேசத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் வணிகத்தைப் பயின்றார். அதன் பின்னர், இந்தியா திரும்பியதும், தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார் இவர்.

ஜே.ஜே.பியின் வடிவமைப்புக்கு வித்திட்ட குடும்ப சண்டை

துஷ்யந்தின் கொள்ளுத் தாத்தா தேவி லாலால் தொடங்கப்பட்டதே இந்திய தேசிய லோக் தளம் (INLD). அதன் பின்னர், இக்கட்சியை அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா வழிநடத்தி வந்தார். மாநிலத்தின் சக்தி வாய்ந்த அரசியல் தலைவராக வலம் வந்த இவர், ஹரியானாவில் ஆசிரியர் ஆட்சேர்ப்பு முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் சிக்கினார். ஐபிசி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் புது தில்லி நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததை அடுத்து, 2013-ல் ஜனவரி 6 ஆம் தேதியன்று, ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரது மகன் அஜய் சவுதலா ஆகியோர் சிறை தண்டனை பெற்றனர்.

ஓம் பிரகாஷ் சவுதாலா அரசியலில் முழுமையாக செயல்பட்டு வந்த காலத்தில், மூத்த மகன் அஜய் சவுதலா மத்திய மட்டத்தில் அரசியலை மேற்கொள்வார் என்றும், தம்பி அபய் சவுதாலா மாநில மட்டத்தில் அரசியலை மேற்கொள்வார் என்றும் குடும்பத்தில் ஒருமித்த கருத்து இருந்தது. ஓம் பிரகாஷ் சவுதாலா சிறைக்கு சென்ற போது இந்திய தேசிய லோக் தளம் கட்சிக்கு பொறுப்புத் தலைவராக அவரின்8 இளைய மகன் அபய் சவுதாலா தேர்வானார்.

இதற்கிடையில், தந்தை அஜய் சிறைக்குச் சென்றதும், அவரது மகன் துஷ்யந்த் அரசியலில் தீவிரமாக செயல்படத் துவங்கினார். குடும்பக் கட்சியான இந்திய தேசிய லோக் தளம் கட்சி சார்பில் போட்டியிட்டு 2014 மக்களவைத் தேர்தலில் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் குல்தீப் பிஷ்னாயை தோற்கடித்து தனது முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தார் இவர். துஷ்யந்த் தனது 26 வயதிலேயே, இந்தியாவின் இளம் எம்.பி.யாக பிரபலமடைந்து கொண்டிருந்தார். ஒரு பக்கம் துஷ்யந்தின் செல்வாக்கு அதிகரிக்க, மறுபக்கம் குடும்பத்திற்குள் அவநம்பிக்கையும் பிளவு ஏற்படுவதற்கான சாத்தியத்தையும் இவரது வளர்ச்சி உண்டாக்கத் துவங்கியது.

வெகு விரைவில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான உறவு மிகவும் கசப்படையத் துவங்கியது. அது இறுதியில் அஜய் சவுதாலாவின் மகன்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சிக்குள்ளேயே வழிவகுத்தது. துஷ்யந்த் சவுதாலா மற்றும் அவரது சகோதரர் திக்விஜய் சவுதாலா ஆகிய இருவரும் கட்சிக்குள்ளிருந்து சித்தப்பா அபய் சவுதாலாவால் வெளியேற்றப்பட்டனர்.

இந்திய துணை பிரதமராக பணியாற்றிய சவுத்ரி தேவி லாலின் சித்தாந்தத்துடன் துஷ்யந்த் சவுதாலா 2018 டிசம்பரில், ஜனநாயக ஜனதா கட்சியை துவக்கினார். கட்சி துவங்கிய சமயமே, தனது தாய்க்கட்சியான ஐ.என்.எல்.டி கைவிட்ட கொள்கைகளை, சித்தாந்தங்களை ஜே.ஜே.பி உயர்த்திப் பிடிக்கும் என சூளுரைத்த இவர், மக்களின் அபிமானங்களைப் பெறத் துவங்கினார்.

அதன் எதிரொலியாக, ஜே.ஜே.பி நிறுவப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, ஜிண்ட் இடைத்தேர்தலில் காங்கிரஸின் ரன்தீப் சுர்ஜேவாலாவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி, துஷ்யந்தின் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

கட்சி தொடங்கியது முதல் பல்வேறு பேரணிகளை நடத்தி மக்களைச் சந்தித்து வந்தார் துஷ்யந்த் சவுதாலா. கிட்டத்தட்ட ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி செய்ததைப் போலவே. அதே சமயம்ஜாட் இன மக்கள் அதிகம் வாழும் மாநிலம் ஹரியானா. கிட்டத்தட்ட 27 சதவீத வாக்கு வங்கிகள். அதற்கு அடுத்த இடத்தில் தலித்துகள் இருக்கின்றனர். பாஜக இவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தாமல், ஆட்சி காலத்தில் முக்கியத்துவம் அளிக்காமல் இருந்தது, அவர்களின்(ஜாட்-தலித்) நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயல்படாமல் இருந்தது போன்ற காரணங்கள் ஜேஜேபி, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இத்தேர்தலில் சாதகமாக்கியது.

இதெல்லாம் இணைந்தே கட்சி துவங்கப்பட்டு வெறும் 319 நாட்களே ஆன நிலையில், மக்களின் நம்பிக்கையைப் பெற்று இன்று ஹரியானாவில் யார் ஆட்சியமைப்பது என்று தீர்மானிக்ககூடிய சக்தியாக இந்த துஷ்யந்தை மாற்றியிருக்கிறது .

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share