விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தாரகை கத்பர்ட் இன்று (மார்ச் 25) அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்ததால், விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலோடு, விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் விளவங்கோடு தொகுதியில் சீட் வாங்க காங்கிரஸ் கட்சியினரிடையே போட்டா போட்டி நிலவியது.
குறிப்பாக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் கே.ஜி.ரமேஷ்குமார், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் உதயம், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் ஆகியோர் சீட் பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்தனர்.
இந்தநிலையில், தாரகை கத்பர்ட்டிற்கு விளவங்கோடு இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பளித்துள்ளது. ஏற்கனவே விஜயதரணி எம்.எல்.ஏ-வாக இருந்துள்ளதால், மீண்டும் பெண் ஒருவருக்கு டெல்லி தலைமை வாய்ப்பளித்துள்ளது.
தாரகை கத்பர்ட் தனியார் கல்லூரி பேராசிரியாக இருந்துள்ளார். இவர் பி.எச்,டி டாக்டர் பட்டம் பெற்றவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் தலைவர் இவர் தான். தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார்.
விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய போது அவரை கடுமையாக விமர்சனம் செய்தார் தாரகை. அவர் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் பிறந்து வளர்ந்த விஜயதரணிக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது, விளவங்கோடு மக்கள் காங்கிரஸ் கட்சி மீது கொண்டுள்ள பற்றினால் விஜயதரணியை வெற்றி பெற செய்தார்கள். காங்கிரஸ் கட்சிக்கோ, விளவங்கோடு மக்களுக்கோ அவர் எந்த ஒரு பணியையும் செய்யவில்லை” என்று சாடியிருந்தார்.
நல்ல பேச்சாளரான தாரகை, காங்கிரஸ் பொதுக்கூட்ட மேடைகளில் தீவிரமாக பேசக்கூடியவர். ஆர்.சி கிறிஸ்துவ மீனவர் சமூகத்தை சேர்ந்தவர். தொகுதி மக்கள் மற்றும் மீனவ சமுதாய மக்கள் மத்தியில் தாரகைக்கு நல்ல பெயர் இருப்பதால் காங்கிரஸ் கட்சி இந்த இடைத்தேர்தலில் அவருக்கு சீட் வழங்கியுள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“தங்க தமிழ்செல்வன் ஜெயிக்கலனா ராஜினாமா” : அமைச்சர் மூர்த்தி பேச்சு!
இளையராஜா பாடல்களை பயன்படுத்த அனுமதிகோரி வழக்கு: நீதிபதி விலகல்!