நடிகை ஹனிரோஸ் பற்றி பாலியல் ரீதியாக பதிவுகள் வெளியிட்டதாக பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இந்த பாபி செம்மனூர் என்று பார்க்கலாம்.
கேரளாவில் இவரது செம்மனூர் நிறுவனம் ஜூவல்லரி, ரியல் எஸ்ட்டேட், டூர்ஸ் அண்டு டிராவல்ஸ், நிதி நிறுவனம் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது.
இவரை பேஸ்புக்கில் 26 லட்சம் பேரும் ,இன்ஸ்டாகிராமில் 16 லட்சம் பேரும் பின் தொடருகின்றனர். யூடியூப்பில் 2.2 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். பல்வேறு மக்கள் நலப்பணிகளிலும் இவர் ஈடுபட்டு வந்தார்.
6 வயதிலேயே தந்தையின் கார் சாவியை திருடி அவருக்கு தெரியாமல் காரை ஓட்டியதாக பாபி சொல்லி கொள்வது உண்டு. எப்போதும் வெள்ளை நிற வேஷ்டி மற்றும் மேலே வெள்ளை நிற பனியனையும் அணிந்து கொண்டுதான் காணப்படுவார்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதே பெரும் சிரமம் என்கிற ரீதியில் தனது ரோல்ஸ் ராய்ஸ் பாந்தம் காரை டாக்ஸியாக மாற்றி தனது டிராவல் ஏஜன்சியில் ஓட வைத்தார்.
இதில், ஒருநாள் முழுவதும் பயணிக்க 25 ஆயிரம் கட்டணம் பெறப்பட்டது. Sunburn @Boche என்ற பெயரில் வயநாட்டில் ஆயிரம் ஏக்கரில் பிரமாண்டமாக ரிசார்ட்டும் உள்ளது. இந்த ரிசார்ட்டில் பதுங்கியிருந்த போதுதான் டிசம்பர் 8 ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிட்னெஸ்ஸில் அக்கறை கொண்ட பாபிக்கு குங்பூ தெரியும். துப்பாக்கி சுடும் வீரர், உயரம் தாண்டுதல், கால்பந்து விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் உண்டு.
தினமும் 10 கி.மீ ஓடும் திறமை கொண்டவர். கடந்த 2014 ஆம் ஆண்டு காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை மாரத்தான் போட்டியையும் நடத்தி காட்டினார்.
முன்னதாக, 2012 ஆம் ஆண்டு கால்பந்து ஜாம்பவான் மரடோனாவையும் கண்ணூருக்கு அழைத்து பாபி விழா எடுத்தார். தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு துபாயில் மரடோனாவுடன் இணைந்து ஜூவல்லரி நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனத்தின் பெயர் மரடோனா பாபி கோல்டு டயமண்ட் ஜூவல்லரி என்பதாகும். மொத்தம் ரூ.2,500 கோடி மதிப்புக்கு இவருக்கு சொத்து உள்ளது.

மிகச்சிறந்த மனிதநேயமிக்க மனிதராக பார்க்கப்பட்ட பாபி, விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக இலவச ரத்தம் கிடைக்க மிகப்பெரிய ரத்ததான வங்கியையும் உருவாக்கி வைத்துள்ளார்.
இதன் பெயர் boby Friends Blood bank என்பதாகும். இதில், 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ரத்தம் தேவைப்படுபவர்கள் இங்கு அணுகினால் எந்த பிரிவு ரத்தம் வேண்டுமானாலும் கிடைக்கும். தற்போது, பாபிக்கு 55 வயதாகிறது.
இதற்கிடையே, கேரள முன்னாள் அமைச்சர் சுதாகரன், “மோசமான மனிதர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வருடங்களுக்கு முன்பே பாபி மோசமான மனிதர் என்று என் மனைவியிடம் கூறியிருக்கிறேன்.
தன் பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற எண்ணம் கொண்டவர். அவரிடம் ஒரே கலாசாரம்தான் உள்ளது. அது செக்ஸ் கலாசாரம். பல பெண்களை அவர் சீரழித்துள்ளார். பெண்கள் அமைப்புகள் என்ன செய்கின்றன என்று தெரியவில்லை” என்று பாபி பற்றி பேசியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
இதெல்லாம் எனக்கு தேவையா? விரக்தியில் நித்யா மேனன்- அழகான காரணம் இருக்கு!
ஆளுநர் சொன்ன ஆள்தானா? எங்கே கை வைக்கிறார்கள் புரிகிறதா? சட்டமன்றத்தில் கொந்தளித்த ஸ்டாலின்