அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு 24 மணி நேரத்தில் வெளியாகும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.
மற்ற மாநிலத்தில் தேர்தல் பணிகள் நடந்து வரும் நிலையில் அமேதி, ரேபரேலி இரண்டு தொகுதிகளுக்கும் ஐந்தாவது கட்டமாக மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால், இந்த இரு தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இன்னும் காங்கிரஸ் அறிவிக்கவில்லை.
அமேதி என்பது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2004 முதல் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். ஆனால் 2019 தேர்தலில் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார்.
ரேபரேலி என்பது 2004 முதல் 2019 வரை நடந்த அனைத்து தேர்தலிலும் சோனியா காந்தி வெற்றி பெற்ற தொகுதியாகும்.
இம்முறை ராஜஸ்தான் தொகுதியிலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் சோனியா. ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்
இந்தச்சூழலில் அமேதி மற்றும் ரேபரேலியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் அமேதியில் ராகுல் காந்தியும், ரேபரேலியில் பிரியங்கா காந்தியும் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. இதுவரை வேட்பாளர்களும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், “24 மணி நேரத்தில் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி (சிஇசி) அதிகாரம் அளித்துள்ளது, யாரும் பயப்படவுமில்லை, யாரும் ஓடவுமில்லை.” என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அமேதியில் போட்டியிட தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார், இந்த தொகுதியில் இரண்டாவது முறையாக நான் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ள ஸ்மிருதி இராணி, காங்கிரஸிலிருந்து இங்கு யார் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு: மோடிக்கு சித்தராமையா கடிதம்!
“வத்திக்குச்சி பத்திக்காதுடா”… தியேட்டருக்குள் பட்டாசு… அதகளமான தீனா ரீ ரிலீஸ்!