அமெரிக்காவில் வெள்ளை மாளிகையின் சோதனை சாவடி அருகே சனிக்கிழமை மாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேகத்திற்குரிய நபர் அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில், வாஷிங்டனில் உள்ள 17ஆம் தெரு மற்றும் பென்சில்வேனியா அவென்யூ சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை பாதுகாப்புச் சாவடிக்கு வாலிபர் ஒருவர் வந்துள்ளார். மேரிலாந்தைச் சேர்ந்த 21 வயதான நசைர் பெஸ்ட் (Nasire Best) என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், திடீரென தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த அதிகாரிகள் மீது நோக்கிச் சரமாரியாகச் சுடத் தொடங்கினார்.
இதையடுத்து ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாகத் தற்காப்புப் பதிலடித் தாக்குதல் நடத்தி, அந்த நபரை நோக்கிச் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டின் போது அங்கிருந்த பொது மக்களில் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவர் மீது பாய்ந்த குண்டு சந்தேக நபரால் சுடப்பட்டதா அல்லது அதிகாரிகளின் பதிலடித் தாக்குதலின் போது பாய்ந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டவுடன் வெள்ளை மாளிகை வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அப்போது வடக்குப் புல்வெளி (North Lawn) உள்ளிட்ட பகுதிகளில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பத்திரிகையாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்களின் அறிவுறுத்தலின்படி செய்தியாளர்கள் அறைக்குள் சென்று தஞ்சமடைந்தனர். ஏபிசி நியூஸ் செய்தியாளர் செலினா வாங் உள்ளிட்ட பல செய்தியாளர்கள் இந்த அதிர்ச்சி சம்பவத்தை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நசீர் பெஸ்ட், ரகசிய சேவை அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெள்ளை மாளிகை அருகே மீண்டும் மீண்டும் சந்தேகத்திற்கிடமாக அலைந்தது, தடை உத்தரவுகளை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது ஏற்கனவே இருந்துள்ளன. மேலும், அவர் மனநலப் பிரச்சினைகள் காரணமாக முன்பு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என்றும், இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் எந்தவொரு அரசியல் காரணமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து எஃப்.பி.ஐ மற்றும் ரகசிய சேவை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சி சம்பவத்தையும் சேர்த்து, வெள்ளை மாளிகை தொடர்பான 3-வது அச்சுறுத்தல் சம்பவம் இதுவாகும்.
தொடரும் அச்சுறுத்தல்களை அடுத்து, வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை வலுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்குப் பகுதியை இடித்துவிட்டு, புதிய பிரம்மாண்ட ‘மாநில பால்ரூம்’ (State Ballroom) கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 400 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
