மோடியிடம் கேள்வி கேட்ட பெண் பத்திரிகையாளருக்கு மிரட்டல்: அமெரிக்கா கண்டனம்!

Published On:

| By christopher

பிரதமர் மோடியிடம் சிறுபான்மையினரின் உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரை சமூகவலைதளங்களில் அவதூறாக விமர்சனம் செய்ததற்கு வெள்ளை மாளிகை இன்று (ஜூன் 27)) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த வாரம் ஜூன் 20 முதல் 23ஆம் தேதி வரை அரசு முறைப் பயணமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

ADVERTISEMENT

அதன் ஒரு பகுதியாக கடந்த 22ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டார் பிரதமர் மோடி.

அப்போது வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி, “உங்கள் அரசு முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகக் கூறப்படுகிறது. அவர்களின் உரிமைகளை மேம்படுத்த இந்தியாவில் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்கள்?” என்று மோடியிடம் கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT
White House Condemns Harassment on SabrinaSiddiqui

பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை

இந்த கேள்விக்கு பதிலளிக்க சிறிது நேரம் தடுமாறிய பிரதமர் பின்னர், “ஜனநாயகம் எங்கள் ரத்தத்தில் உள்ளது. எங்கள் நரம்பில் உள்ளது. எங்கள் உணர்வில் உள்ளது. நாங்கள் ஜனநாயகத்தை சுவாசிக்கிறோம். ஜனநாயகமாக வாழ்கிறோம்.” என்றார்.

ADVERTISEMENT

மேலும், “எங்களது முன்னோர்கள் அரசியல் சாசனத்தில் ஜனநாயகத்தை ஊக்குவித்துள்ளனர். அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள ஜனநாயக விதிமுறைகளை எனது அரசு பின்பற்றுகிறது.

மனித நேயம், மனித உரிமைகளுக்கு மதிப்பில்லை என்றால், எந்த நாட்டிலும் ஜனநாயகம் இல்லை. இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறும்போது, பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. மதம், ஜாதி, வயது வித்தியாசம் இன்றி அனைவருக்குமான வளர்ச்சி என்ற கொள்கை அடிப்படையில்தான் இந்தியா முன்னேறுகிறது” என்று பிரதமர் பதிலளித்தார்.

பெண் பத்திரிகையாளர் மீது அவதூறு

எனினும் பிரதமர் மோடிக்கு எதிராக கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கியை அவரது மதத்தை வைத்தும், அவர் இந்திய வம்சாவளி என்பதால் தேசத்துரோகம் செய்துவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பாஜகவை சேர்ந்தவர்கள் கடுமையான அவதூறு கருத்துகளை பதிவிட்டனர்.

White House Condemns Harassment on SabrinaSiddiqui

வெள்ளை மாளிகை கண்டனம்

இதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உயர் அதிகாரி ஜான் கிர்பி பேசுகையில், “இந்தியாவிற்குள் உள்ள சிலரால் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கி தீவிர ஆன்லைன் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது இஸ்லாமிய மத நம்பிக்கையின் காரணமாகவும் தாக்கப்பட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் விமர்சிக்கப்படுவது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த ஒரு சூழ்நிலையிலும் பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்படுவதை நாங்கள் முற்றாக கண்டிக்கிறோம்” என்று தெரிவித்தார்.

பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தலை கண்டிக்கிறது

அவரைத்தொடர்ந்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், கரீன் ஜீன்-பியர் பேசுகையில், “ஜான் கிர்பி சொன்னதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பத்திரிக்கை சுதந்திரத்தில் ஜோ பைடன் அரசு உறுதி பூண்டுள்ளது. அதனால்தான் கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினோம்.

மேலும் எந்தவொரு பத்திரிகையாளரையும் அச்சுறுத்தும் அல்லது துன்புறுத்தும் முயற்சிகளை நாங்கள் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர் மீதான இந்த அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை வன்மையாக வெள்ளை மாளிகை கண்டிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பத்திரிகையாளர் சித்திக்கி தன் மீதான அவதூறு கருத்துகளுக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார். அவர் இந்திய அணியின் ஜெர்சி அணிந்து, இந்தியாவில் பிறந்த தனது தந்தையுடன் கிரிக்கெட் போட்டியை உற்சாகத்துடன் கண்டுகளித்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

அவதூறு கருத்துகள் வந்தபோதும் பத்திரிகையாளர் சாப்ரினா சித்திக்கியின் துணிச்சலையும், அவர் எழுப்பிய கேள்வி குறித்தும் பாராட்டிய சர்வதேச ஊடகவியலாளர்கள், தற்போது வெள்ளை மாளிகையின் கண்டனத்தையும் வரவேற்று வருகின்றனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

பத்து நகரங்கள்… பலமான அணிகள்… 13வது ஐசிசி உலகக்கோப்பை : ஒரு பார்வை!

”கோலிக்காக உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்”- சேவாக்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel